இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு 32 கிலோ தங்க கடத்தல்
இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக சென்னைக்கு கடத்தி கொண்டு செல்லப்பட்ட 32.249 கிலோ தங்கத்தை இந்திய வருவாய் புலனாய்வு துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
குறிப்பிட்ட கடத்தல் சம்பவத்துடன் தொடர்புபட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சென்னையில் சிலர் தங்க கட்டிகளை கடத்தி வைத்திருப்பதாக இந்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அவர்கள் மண்ணடி பகுதிக்கு தேடுதல் நடவடிக்கைக்காக சென்றிருந்தனர்.
அப்போது சைக்கிளில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த இளைஞரை பின் தொடர்ந்து அவனிடம் இருந்து ஒரு பொதியை அதிகாரிகள் மீட்டனர்.
மீட்கப்பட்ட அந்த பொதியில் 12.149 கிலோ கிராம் தங்க கட்டிகளை அதிகாரிகள் மீட்டதோடு தொடர்ந்து விசாரணைகளையும் முன்னெடுத்தனர்.
விசாரணையின் போது இந்த தங்கக்கட்டிகள் இலங்கையில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்டதாகவும் இதை தூத்துக்குடியில் இருந்து பெண் ஒருவர் பேருந்தின் மூலம் சென்னை கொண்டு வந்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் ராமேஸ்வரம் கடற்கரையில் பகுதியில் இருந்து கீழக்கரையை சேர்ந்த ஒரு பெண் சென்னைக்கு செல்லும் பேருந்தில் தங்க கட்டிகளை கடத்தி கொண்டு செல்வதாக வருவாய் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து வருவாய் அதிகாரிகள் பேருந்தில் தங்க கட்டிகளை கடத்தி வந்த பெண்ணை கைது செய்ததுடன் அவரிடம் இருந்த 8.1 கிலோ தங்க கட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.
இதேவேளை, கடந்த 2 நாட்களில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடத்தி கொண்டு வரப்பட்ட 32.249 கிலோ தங்க கட்டிகளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இதுவரை பறிமுதல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment