Header Ads

test

போர்ட்டோ ரிகோ தீவை தாக்கிய மரியா புயல்; 4600 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் சுயாட்சி அதிகாரம் பெற்ற போர்ட்டோ ரிகோ தீவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மரியா புயல் தாக்கியது.
90 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகவும் வலுவான இந்த புயல் தீவை சின்னாபின்னமாக்கியது. பலத்த காற்றுடன் கனமழையும் பெய்ததால் தீவு முழுவதிலும் வெள்ளக்காடானது. மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. வெள்ளம் சூழ்ந்ததால் சாலைகள் மூடப்பட்டன. பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்தனர். புயல் மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி 64 பேர் இறந்ததாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில், ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளன. புயல் மழையால் இறந்ததாக அரசுத் தரப்பில் கூறிய எண்ணிக்கையைவிட 70 மடங்கு அதிகமாக  அதாவது 4600க்கும் மேற்பட்ட நபர்கள் இறந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இவர்களில் மூன்றில் ஒரு பகுதி நபர்கள்இ மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும்  சாலைகள் துண்டிக்கப்பட்டதாலும் போதிய மருத்துவ உதவி கிடைக்காமல் இறந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்பு அறிவித்ததைவிட உயிரிழப்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்த்ததாக போர்ட்டோ ரிகோ அரசு கூறியுள்ளது. ஹார்வர்டு பல்கலைக்கழக சர்வேயை வரவேற்பதாக மத்திய விவகாரங்களுக்கான மந்திரி கார்லஸ் கூறியுள்ளார்.
‘புயல் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் தொடர்பாக ஆய்வு செய்ய ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக குழுவையும் நியமித்திருக்கிறோம். அந்தக் குழுவின் ஆய்வு முடிவு விரைவில் வெளியிடப்படும். எதிர்காலத்தில் இயற்கை பேரிடர்களை இன்னும் சிறப்பாக எதிர்கொண்டு உயிரிழப்பை தடுக்கும் வகையில் பணிகளை மேற்கொள்வதற்கு இந்த இரண்டு ஆய்வுகளும் உதவியாக இருக்கும்’ என்றும் கார்லஸ் கூறினார்.

No comments