Header Ads

test

அதைச்சொல்ல யார் இவர்கள்?


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் முன்வந்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த போராளிகள் பற்றிய அறிமுகம் ....

ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன் - திருமலை)


விடுதலைப் புலிகளால் 1987 இல் இடைக்கால நிர்வாக சபைக்குப் பெயரிடப்பட்டிருந்தோரில் இவரும் ஒருவர். பிரேமதாஸ அரசுடனான சமாதானப் பேச்சு வார்த்தைகளிலும் பங்குகொண்டவர்.இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கும் சமயத்தில் திருமலை மாவட்ட விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி மற்றும் அரசியற்றுறைப் பொறுப்பாளராக இருந்த இவர் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் மோசமாகக் காயமடைந்தார்.
13.06.1990 அன்று தம்பலகாமத்துக்கும் பாலம் போட்டாறுக்கும் இடையிலுள்ள ஜெயபுரம் என்னுமிடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
சந்திரிகா அரசுடனான பேச்சுவார்த்தைக் காலத்தில் மாவட்ட மட்டத்தில் திருமலையில் நிகழ்ந்த படையினருடனான சந்திப்பில் கலந்துகொண்டார்.

குச்சவெளிப் பகுதியில் 1995 ஜனவரியில் நிகழ்ந்த இச்சந்திப்பில் படையினர் தரப்பில் பின்னாளில் வட மாகாண ஆளுநராக இருந்த அப்போதைய பிரிகேடியர் சந்திரசிறி மற்றும் பிரிகேடியர் ஓம்பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளராகவும் விளங்கியவர். 2000 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவம் திருமலையில் இழக்கப்பட்டதைத் தொடர்ந்து இவரை மீண்டும் திருமலை அரசியல்துறைப் பொறுப்பாளராக நியமித்தார் தலைவர்.

இழக்கப்பட்ட தமிழரின் பிரதிநிதித்துவத்தை மீளப்பெறும் வகையில் வாக்களிப்பின் அவசியத்தை திருமலை மக்களுக்கு உணர்த்துவதே இவருக்கிடப்பட்ட முக்கிய பணி. இதனால் 2001 இல் இரா.சம்பந்தனை வரவழைத்து கட்டைபறிச்சானில் சந்தித்தார் இவர். அரசியல் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. 2000 ஆம் ஆண்டு தேர்தலில் 14,000 வாக்குகள் பெற்ற தமிழரின் கட்சி 2001 இல் 59,000 வாக்குகள் பெற்று மீண்டும் பிரதிநிதித்துவம் பெற்றது.

35,000 வாக்குகளைப் பெற்ற சம்பந்தன் ஐயா மீண்டும் பாராளுமன்றம் சென்றார். தேசியப் பட்டியல் உறுப்பினரான மு.சிவசிதம்பரத்தின் மறைவைத் தொடர்ந்து 2001 தேர்தலில் 28,000 வாக்குகள் பெற்றிருந்த துரைரெட்ணசிங்கம் மாஸ்டருக்கு இப்பதவியை வழங்குமாறு இவர் விடுத்த வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இறுதியாகத் தலைமைச் செயலகப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார். இறம்பைக்குளம், பூசா, கொழும்பு 2 ஆம் மாடி என சிறிதுகால தடுப்பின் பின் விடுதலையானார்.


முத்துக்குமார் மனோகர் (பசீர்காக்கா - யாழ்ப்பாணம்)



இறுதிப் போரில் இவரது மகள் சங்கீதா (அறிவிழி) 26.04.2009 அன்று வீரச்சாவெய்தியிருந்தார். முன்னதாக இவரது மகன் சங்கர் எறிகணைத் தாக்குதலில் பலியாகியிருந்தார். (07.04.2009) இவரது சிற்றன்னை திருமதி மோட்சானந்தம் முத்துக்குமார் 10.02.2009 அன்று எறிகணைத் தாக்குதலில் பலியாகியிருந்தார். சகோதரி முறையான கோமளா, அவரது கணவர் இராசையா தனபாலசிங்கம், மகன் பாஸ்கர் (இரு பிள்ளைகளின் தந்தை) ஆகியோர் 31.03.2009 அன்று எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர்.

விடுதலை புலிகள் அமைப்பில் பொட்டுஅம்மானை இணைத்தவர்.1986 முதல் ஊடகவியலாளராகவும் இனங்காணப்பட்டிருந்தார். ஈழமுரசில் அரசியற் தொடரான 'குத்துக்கரணங்கள்' மாவீரரின் புகழை போராளிகளின் எண்ணத்தில் எடுத்தியம்பிய 'ஒரு போராளியின் நாட் குறிப்பிலிருந்து' என்ற தலைப்புகளில் எழுதியவர்.

1990 இல் மட்டக்களப்புக்கு நடந்துபோனபோது அவதானித்து, உணர்ந்த விடயங்களை 'உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்' மற்றும் 'சிறைப்படாத சிந்தனைகள்' தொடர், மாவீரர் புகழை எடுத்தியம்பும் 'விழுதுகள்' ஆனையிறவு மீட்பு உட்பட ஓயாத அலைகள் - 3 சமர்க்களம் தொடர்பான விடயங்களை நேரில் கண்டு விபரிக்கும் தொடர் 'மீண்டும் யாழ். மண்ணில் கால் பதித்த எம் தடங்கள்' என்பனவற்றை ஈழநாதத்தில் எழுதியவர்.

இறுதிப் போரின் பின்னர் பூசா முதல் யாழ்ப்பாணம் வரை சுமார் 10 இடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு மேல் நீதிமன்றங்களில் மொத்தம் நான்கு வழக்குகள் இவருக்கெதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
சுமார் ஐந்து ஆண்டுகள் தடுப்பின் பின் விடுதலையானவர்.

No comments