மாகாணசபைகளுக்குத் தேர்தலை நடத்துவது தொடர்பாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கவுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இந்த தகவலை வெளியிட்டார் சபாநாயகர் கரு ஜெயசூரிய. ஏற்கனவே மூன்று மாகாணசபைகளின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், மேலும் மூன்று சபைகளின் பதவிக்காலம் அடுத்த சில மாதங்களில் முடிவடையவுள்ளது. இந்த நிலையில், மாகாணசபைத் தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு, தொகுதிகளின் எல்லை நிர்ணய அறிக்கையை அரசாங்கம் பயன்படுத்துகிறதா என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும சந்தேகம் வெளியிட்டார். இதற்குப் பதிலளித்த சபாநாயகர் இந்த விவகாரத்தில் தாம் சிறப்புக் கவனம் செலுத்துவதாகவும், இந்தவாரம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சு நடத்தி ஒரு முடிவுக்கு வருவார் என்றும் குறிப்பிட்டார். அதேவேளை மாகாணசபைத் தேர்தலைப் பிற்போட ஐதேக விரும்பவில்லை என்று அமைச்சர் ஏரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
Post a Comment