Header Ads

test

ஜனநாயக போராளிகள் கட்சி செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து புலனாய்வு பிரிவுகள் விசாரணை!


ஜனநாயக போராளிகள் கட்சியையும், அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீது பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அந்தக் கட்சியின் தலைவர் வேந்தன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனநாயக போராளிகள் கட்சி இந்நாட்டு சட்ட திட்டங்களுக்கு அமைய பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி ஆகும். இக்கட்சியின் செயற்பாட்டாளர்கள் அரசாங்கத்தால் புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகள் ஆவர். புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமுதாயத்தோடு இரண்டறக் கலந்து வாழ அனுமதிக்கப்பட்ட இவர்கள் அமைதியான, வன்முறை அற்ற வாழ்க்கையையே மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் எந்தவொரு வன்செயலிலும் ஈடுபட்டதாகவோ, சட்டத்துக்கும், சமூகத்துக்கும் விரோதமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவோ நாட்டில் உள்ள எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு எதுவும் கிடையாது. இந்நிலையில் ஜனநாயக போராளிகள் கட்சி செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸாரால் புலனாய்வு விசாரணைகள் முடுக்கி விடப்பட்டு இருப்பது பேரதிர்ச்சி தருகின்றது. போருக்கு பிந்திய இன்றைய அமைதி சூழலில் இயல்பு வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்ற புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு மீண்டும் பயங்கரவாத முத்திரை குத்துகின்ற முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுவதாகவே நாம் இதை ஐயுறவு கொள்ள வேண்டி உள்ளது. தென்னிலங்கையை சேர்ந்த ஜே. வி. பியினர் ஒரு காலத்தில் புரட்சியில் ஈடுபட்டு இருந்தனர் என்பதும் ஆயினும் அவர்கள் முழுமையான அளவில் இயல்பான, அமைதியான வாழ்க்கை வாழ அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு தோற்றம் பெற்ற ஜனநாயக போராளிகள் கட்சி அது ஆரம்பிக்கப்பட்டு குறுகிய கால பகுதிக்குள் பிரமாண்ட வளர்ச்சி கண்டு மக்கள் மயப்பட்ட அரசியல் அமைப்பாக பரிணமித்து வருகின்ற நிலையில் எமது கட்சியை முடக்கின்ற சதி திட்டத்தின் ஒரு அம்சமாகவே இதை எமது ஆதரவாளர்கள் பார்க்கின்றார்கள். மேலும் இது புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை இரும்பு கரம் கொண்டு அடக்குகின்ற செயற்பாடாகவே எம்மால் மாத்திரம் அன்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களாலும் பார்க்கப்படுகின்றதென அவர் மேலும் தெரிவித்தார்.

No comments