மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து வடக்கு மாகாண சபையினர் நாளைமறுதினம் திங்கட்கிழமை ஆராயவுள்ளனர். கைதடியிலுள்ள முதலமைச்ச ரின் அமைச்சில் முற்பகல் 10 மணிக்கு இது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. மாகாண சபையின் அவைத் தலைவர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த சில வருடங்களாக வடக்கு மாகாண சபையே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஏற்பாடு செய்து நடத்திவருகிறது. வழமைபோன்று இந்த முறையும் அது தொடர்பில் ஒழுங்குகளை மேற்கொள்ள இந்தக் கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனைவரும் ஒருமித்து ஒரே இடத்தில் நினைவுகூர வேண்டும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அன்று மதியம் 12.30க்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவேந்தலை நடத்துவது என்றும் தொடர்ந்து அஞ்சலி இடம்பெறும் என்றும் அவர்கள் நேற்று விடுத்த ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அனைவரும் எந்தவித பாகுபாடுமின்றி அதில் கலந்துகொள்ளவேண்டும் என்றும் அவர்கள் அறிக்கையில் கோரியுள்ளனர். இதுதவிர, நினைவேந்தலை ஓரிடத்தில் ஒற்றுமையாக நடத்த ஒத்துழைக்குமாறு பல்கலைக்கழக மாணவர்கள் விடுத்த கோரிக்கையைத் தாம் ஏற்றுக்கொள்வதாகவும் நினைவேந்தல் நிகழ்வை பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து நடத்துவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகள் தீர்மானித்துள்ளன என்று முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
Post a Comment