Header Ads

test

அனைத்து வாள்வெட்டுக் குழுக்களை மடக்கிப் பிடித்து வன்முறைகளைக் கட்டுப்படுத்துக


கிராம மட்டங்களில் விழிப்புக்குழுக்களை அமைத்து வாள்வெட்டுக் குழுக்களை மடக்கிப் பிடித்து வன்முறைகளைக் கட்டுப்படுத்துமாறு இளைஞர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வன்முறை தவிர்ப்போம், போதையை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளிலான சமூக மட்ட நிகழ்ச்சித் திட்ட ஆரம்ப நிகழ்வு யாழ்.பஸ் நிலையத்தின் முன்பாக உள்ள வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் நேற்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு வலியுறுத்தினார். தமிழ் இனத்தினை பாதுகாக்க போதை பாவனையை முற்றாக ஒழிக்க வேண்டுமென்று இன்று உறுதிபூண வேண்டும்.போதைப்பொருள்கள் ஒழிக்கப்பட வேண்டுமென்பது எமது கொள்கையாக இருக்க வேண்டும். அரைகுறையாக சிலவற்றினை நடத்துவோம், சிலவற்றினை ஒழிப்போம் என இருந்தால், போதை ஒழியாது. குடும்ப வன்முறைக்கு மதுபான பாவனை கூடுதலான காரணமாக இருக்கின்றது. இவை அனைவருக்கும் தெரிந்த விடயம். எமது இனத்திற்கு எதிரான வன்முறையை தடுப்பதற்கு பலர் முன்வந்தார்கள். அவர்கள் தமது உயிர்களையும் மாய்த்துப் போனார்கள். வெளியில் இருந்து எமக்கு ஆபத்து வருகின்ற வேளைகளில் எமது இளைஞர்கள் அனைத்து உதவிகளும் செய்தார்கள். போர் நிறைவடைந்த பின்னர் கிறிஸ் பூதம் வந்த போது, யாரால் செய்யப்படுகின்றது என தெரிந்தும் கூட எமது இளைஞர்கள் அவர்களை எதிர்த்து நிற்கவும், போராடவும் பயப்படவில்லை. நாவாந்துறைப் பகுதியில் 100 ற்கும் மேற்பட்டவர்கள் காயப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் 52 பேரின் வழக்குகள் உயர் நீதிமன்றில் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வெளியில் இருந்து ஆபத்துக்களும், சவால்களும் வருகின்ற போது நாங்கள் கொதித்தெழுகின்றோம். ஆனால், இன்று நடக்கின்ற வன்முறைகளைச் செய்கின்றவர்கள் யார்? இந்த வன்முறைகளைச் செய்பவர்கள் தமிழ் இளைஞர்கள். வாள்களுடன் வீதிகளில் சுற்றித் திரிபவர்களும், வீட்டிற்குள் சென்று பெண்களை வெட்டுகின்றவர்களும் யார்? வெளியில் இருந்து வருபவர்கள் அல்ல. வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல. யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற தமிழ் மகன் தான் இந்த வன்முறைகளைச் செய்கின்றான். உள்ளே இருக்கின்ற சவால்களையும், உள்ளே இருக்கின்ற ஆபத்துக்களையும் நாங்கள் கண்டுகொள்ளாவிடின், உள்ளே இருந்தே சீரழிந்து விடுவோம். ஆகையினால், இந்த வன்முறைக்கு எதிரான தொனிப்பொருளுடன் நிகழ்ச்சித்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல விடயம். அரசியல்வாதிகளாக இருக்கும் நாங்கள் எம்மால் இயன்றவற்றினைச் செய்வோம்.எந்த இடத்திலாவது போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகின்றதென்ற தகவல் தெரிந்தால், பொலிஸாரிடம் தெரிவிக்க அச்சம் காணப்பட்டால், அமைப்புச் சார்ந்தவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். அந்த அமைப்பினர் எம்முடன் தொடர்பு கொள்வார்கள். உரிய நடவடிக்கை மேற்கொள்ள முடியும். ஏனெனில், போதைப்பொருள்களுடன் பொலிஸாரும் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பது எமக்குத் தெரிந்த விடயம். அவைகளை முறியடிப்பதற்கு முயற்சி எடுக்கின்றோம். வாள்வெட்டுக் குழுவினர் மோட்டார் சைக்கிளில் வருகின்றார்கள் எனின் அவர்களைத் துரத்திப் பிடியுங்கள். இது வீரம் செறிந்த மண், வாள் வெட்டுக்காரர்களைத் துரத்திப் பிடியுங்கள். அங்கு வன்முறைகளைப் பாவிக்க வேண்டாம். ஆயுதங்களை முற்றாக தவிர்த்துக்கொள்ளுங்கள். 10 பேர் இணைந்தால், இருவர் தப்பி ஓடி ஒன்றும் செய்ய முடியாது. எமது வீரம் எமது மக்களைப் பாதுகாக்கின்ற வீரம். எமது மக்களைப் பாதுகாக்கின்ற வீரம் எமது முன் எண்ணங்களில் இருந்தே வர வேண்டும். எமது மக்களைப் பாதுகாக்கின்ற தருணம் இது. அந்த தருணம் துரதிஸ்டவசமாக தற்போது வந்துள்ளது. ஆனால், அவற்றினை நாம் செய்தாக வேண்டும். கிராம மட்டங்களில் சில இளைஞர்களை ஒன்று சேர்த்து விழிப்புக் குழுவாக தயாராகுங்கள். அந்தக் கிராமங்களில் உள்ள மூத்தவர்களுக்கு உங்கள் தொலைபேசி இலக்கங்களை சொல்லி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு பொறிமுறையினை ஏற்படுத்துங்கள். யாராவது இளைஞர்கள் வாள்களுடன் வந்தால், உடனடியாக 10 இளைஞர்களை ஒன்று திரட்டுவதற்கான பொறிமுறையினை ஏற்படுத்துங்கள். தேவையான உதவிகளை நாங்கள் செய்கின்றோம். இன்றிலிருந்து யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு நடந்ததாக சம்பவங்கள் இருக்கக்கூடாது. அவ்வாறான ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்துங்கள்.ஒரு குடும்பத்தில் கணவன் மனைவியைத் தாக்கியதாக செய்தி வரக்கூடாது. அயலவர்கள் சென்று அந்தக் குடும்பத்தினை இழுத்து வீதியில் நிறுத்துங்கள். அவரை வெட்கமடையச் செய்யுங்கள். ஒரு வீட்டில் குலறல் சத்தம் கேட்டால், அது உள்வீட்டுப் பிரச்சினை என இருக்க வேண்டாம். தாக்கப்படுவது எமது சகோதரி, அது கணவராக இருந்தாலும், பரவாயில்லை. தலையிடுங்கள், வன்முறைகளை நிறுத்துங்கள். வன்முறைகளுக்கு போதை உடந்தை. வன்முறையையை முற்றாக ஒழிக்கின்ற சேவையில் உணர்வு பூர்வமாகவும், வீரத்துடனும் இறங்குவோம் என இன்று சபதம் எடுப்போம் என்றும் வலியுறுத்தினார்.

No comments