பிணை அனுமதி மறுப்பு!
யாழ் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலிலிருந்த சந்தேகநபரை சித்திரவதை செய்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையை அனுபவித்துவரும் தண்டனைக் கைதிகள் முன்வைத்த பிணை விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்றைய தினமும் தள்ளுபடி செய்தது.
மேற்படி கைதிகளான சிந்திக்க பண்டார உள்ளிட்ட 5 பொலிஸார் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பமே இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட நபரான சுமணனைக் கொலை செய்த குற்றச்சாட்டில் தண்டனைக் கைதிகளான மனுதாரர்கள் ஐந்து பேருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளநிலையில் பிணை வழங்கப்பட்டால் அந்த வழக்கில் பாதிப்பை ஏற்படுத்தும் உள்ளிட்ட முக்கிய காரணிகளை முன்வைத்து அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் மன்றில் எழுத்துமூல சமர்ப்பணத்தை முன்வைத்தார்.
அதனை ஆராய்ந்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், பிணை விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து கட்டளை வழங்கினார்.
2011ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் திகதி சுன்னாகம் பொலிஸாரால் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் புன்னாலைக்கட்டுவானைச் சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமணன் முதலாவது சந்தேகநபராகக் கைது செய்யப்பட்டார். அவர் விசாரணைக்காக கிளிநொச்சி, வட்டக்கச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு சுமணன் பொலிஸ் காவலிலிருந்து தப்பித்து இரணைமடுக் குளத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்று பொலிஸாரால் கிளிநொச்சி நீதிவான் மன்றில் அறியிடப்பட்டது. இந்தச் சம்பவம் 2011ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி மாலை இடம்பெற்றது என்றும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.
ஏனைய 4 சந்தேகநபர்களுக்கு எதிராக பெரும் குற்றம் வழக்கு மல்லாகம் நீதிவான் மன்றில் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன. 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது சந்தேகநபர்களில் இருவர், சுன்னாகம் பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சிந்திக்க பண்டார உள்ளிட்ட 8 பொலிஸார் மீது சுமணனை சித்திரவதை செய்து கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
மல்லாகம் நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், "சந்தேகநபர்களின் குற்றச்சாட்டுத் தொடர்பில் பொலிஸாரிடம் விசாரணைகளை மேற்கொண்டு சித்திரவதை மற்றும் கொலை ஆகிய இரு பிரிவுகளில் வழக்குகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார். அத்துடன், சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் நீதிவான் அறிவித்தல் வழங்கினார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபரை கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்ட சிந்திக்க பண்டார உள்ளிட்ட 5 பொலிஸாருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு வழக்கை கிளிநொச்சி நீதிவான் மன்றில் முன்வைத்தனர்.
அத்துடன், சட்டமா அதிபர் திணைக்களத்தால் பொலிஸ் அதிகாரி சிந்திக்க பண்டார உள்ளிட்ட 8 பொலிஸாருக்கு எதிராக 1994ஆம் ஆண்டு சித்திரைவதைகள் சட்டத்துக்கு அமைவாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதில் சித்திரவதை வழக்கில் சிந்திக்க பண்டார உள்ளிட்ட 6 பொலிஸாருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. அவர்களில் ஒருவர் வெளிநாடொன்றில் வாழ்வதால் 5 பொலிஸாரே சிறையில் அடைக்கப்பட்டனர்.
5 தண்டனைக் கைதிகளும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து தமது சட்டத்தரணிகள் ஊடாக கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளனர்.
தமது மேன்முறையீட்டு மனு விசாரணையில் உள்ளதால் அதன் தீர்ப்பு அறிவிக்கப்படும்வரை தம்மை பிணையில் விடுவிக்கக் கோரி அவர்கள் 5 பேரும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மேன்முறையீட்டின் போதான பிணை விண்ணப்பத்தை சீராய்வு மனு ஊடாக முன்வைத்தனர்.
இந்தச் சீராய்வு மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று (21) விசாரணைக்கு வந்தது. அதன்போதே சீராய்வு மனுவை நிராகரித்து நீதிபதி கட்டளை வழங்கினார்.
இதேவேளை, தடுப்புக் காவலிலிருந்த சந்தேகநபரைக் கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் உத்தரவை எதிர்த்து சிந்திக்க பண்டார உள்ளிட்ட 5 பொலிஸார் சார்பிலும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கடந்த ஆண்டு பிணை விண்ணப்பம் செய்யப்பட்டது. அந்த விண்ணப்பம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment