Header Ads

test

கூட்டமைப்பே தமிழ் மக்களிற்கு தடை:கஜேந்திரகுமார்!


தமிழ்த் தேசியத்தை பாதுகாக்கவும், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைப்பதற்கும் நேர்மையாகவும், கொள்கை ரீதியாகவும் தேச விடுதலையை நோக்கி நகரக்கூடிய மாற்று தலைமைகள் ஒன்று சேர்வதை தடுப்பதற்கு பாரிய சதி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.


இன்று மாலை நல்லூர் கிட்டு பூங்கா வளாகத்தில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ் காங்கிரசின் மே தின கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இவ்விடயம் தொடர்பில் அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:-
இனப்படுகொலைக்காக நீதியும், நிரந்தர அரசியல் தீர்வும் சமாந்தரமாக கிடைப்பதே தமிழ் தேசத்தின் இருப்பை உறுதிப்படுத்தும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு ஒரே ஒரு வழி ஜ..நாவின் பாதுகாப்பு சபையூடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கத்தை நிறுத்துவது மட்டும்தான். இதற்கு முதல் தடையாக உள்ளது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான்.
ஜ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட கால அவகாசத்தில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் எழுத்து மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.


குறிப்பாக வழங்கப்பட்ட இரண்டு ஆண்டு கால அவகாசத்தில் இலங்கை அரசு பொறுப்பு கூறல் தொடர்பில் எந்த ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை. மீதம் உள்ள ஒரு வருடத்திலும் முன்னேற்றமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதில்லை என்று தெளிவாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் தமிழ் மக்களுக்கான பேரம் பேசும் சக்தியை இழந்துள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பொறுப்புக் கூறலை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குள் முடக்குவதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொறுப்பு கூறலை இல்லாமல் செய்வதற்கும் இலங்கை அரசாங்கத்திற்காக ஜ.நாவிற்கு சென்று இலங்கை அரசாங்கத்திற்கு மீதமாக உள்ள ஒரு வருட கால அவகாசத்தை ஜ.நா வழங்க வேண்டும் என்றும் கோரி, அரசாங்கத்தை வெளிப்படையாகவே காப்பாற்றியுள்ளது.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளான இரா.சம்மந்தன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் தமிழ் மக்களை முட்டாள்களென நினைத்துக் கொண்டு தமிழ் இனத்திற்கு செய்த துரோகங்களில் இதுவும் ஒன்று.


இந்த மேதின கூட்டம் தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் கூட்டiமாக இருக்க வேண்டும். தமிழ் மக்களின் ஏமாற்றங்களை வெளிப்படுத்தி, மக்களின் எதிர்கால விடுவிற்காக பொறுப்புக் கூறலுக்காக, ஆக்கபூர்வமாக எதிர்காலத்தை ஏற்படுத்துகின்ற, அத்திவாரமாக இந்த கூட்டம் அமைய வேண்டும்.
அந்த மாற்றம், நேர்மையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் மட்டும்தான் முன்னெடுத்துச் செல்ல முடியும். ஏனைய தரப்பினர்களும் விலை போயுள்ளார்கள். அல்லது அவர்களுக்கு தெரியாமலே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பலவீனப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகின்றார்கள்.


ஆனாலும் பல தரப்புகளை நேர்மையாக கொள்கை ரீதியாக, மக்களுக்கான உண்மையான பாதையிலே அரசியலை செய்யக் கூடிய தரப்புகள் ஒன்று சேர்வதை தடுப்பதற்காக சதிகள் மேற்கொள்ளப்பட்டு வருக்கின்றன. அந்த சதித்திட்டத்திற்குள் விழாமல் இருக்க வேண்டும் என்பதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெளிவாகவுள்ளது.


70 வருடங்களாக தமிழ் மக்கள் கொள்கைக்காகவும், தமது இருப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் எத்தனையோ தியாகங்களை செய்துள்ளார்கள். இன்று பொருளாதார ரீதியில் பலவீனமடைந்துள்ளார்கள். குடும்ப உறவுகள் வெளிநாடுகளுக்கு சிதறியுள்ளார்கள்.


இந்த அத்தனை தியாகங்களும் தமது எதிர்கால சந்ததியினருக்காவது இந்த மண்ணை பாதுகாத்து பாரம் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். எம்மை பொறுத்தவரையில் பேரம் பேசல் என்ற அடிப்படையில் பொறுப்புக் கூறலை கைவிட்டோ, அல்லது பொறுப்புக் கூறல் என்ற அடிப்படையில் பேரம் பேசலை கைவிட்டோ ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டில் இல்லை.


தீர்வும் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். நடைபெற்ற தமிழ் இனப் படுகொலைக்கும் நீதி கிடைக்க வேண்டும். இவை இரண்டும் சமாந்தரமாக கிடைக்கும் பட்சத்தில்தான் தமிழ்த் தேசியத்தின் எதிர்காலம் உறுதிப்படுத்தப்படும்.


இவை இரண்டும் தமிழ் மக்களுக்கு கடந்த 70 வருடமாக நடந்த அநியாயங்கள், எதிர்காலத்திலும் நடைபெறாமல் இருப்பதற்கு உறுதுணையாக இருக்கும். ஒன்றை விட்டு மற்றொன்றை எடுத்தால் தமிழ் இனம் தொடர்ச்சியாக அழிந்து போவதை தடுக்க முடியாது என்றார்.

No comments