Header Ads

test

கோத்தாவிடம் ஓடிய வடமாகாண அமைச்சர் அனந்தி!


முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடமாகாணசபையும் யாழ்பல்கலைக்கழக மாணவ சமூகம் இணைந்து உணர்வு பூர்வமாக நடத்தவேண்டுமென அறிக்கைவிடுத்த வடமாகாண அமைச்சர் அனந்தி அது பற்றி விளக்கமளிக்க இனப்படுகொலையாளி கோத்தபாயவின் தொலைக்காட்சிக்கு ஓடோடி சென்றுள்ளார்.அதுவும் முக்கிய சந்திப்பொன்றின் போது இடைநடுவில் புறப்பட்டு அவர் சென்றுமிருந்தார்.இது மாணவர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் தரப்பில் கடும் சீற்றத்தை தோற்றுவித்திருந்தது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை முன்னெடுப்பது தொடர்பான மக்களது உணர்வுகளிற்கு மதிப்பளித்து கூட்டாக முன்னெடுக்க யாழ்.பல்கலைக்கழக மாணவ சமூகம் முன்வந்திருந்ததுடன் வடமாகாண முதலமைச்சருடன் சந்திப்பிற்கும் கோரிக்கைவிடுத்திருந்தது. அக்கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு இன்று சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் வாசஸ்தலத்தில் நடைபெற்றிருந்தது.

இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் மாணவ பிரதிநிதிகளும் மதத்தலைவர்கள்,மூத்த போராளிகள் மற்றும் பொது அமைப்புக்களை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

பேச்சுக்களின் ஆரம்பம் முதல் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் நிகழ்வின் ஏகபோக ஒப்பந்தகாரர் தானேயென்ற பாணியில் இயங்க முற்பட்டிருந்தார்.மாணவர்களுடனான பேச்சில் முதலமைச்சர் நெகிழ்வு தன்மையினை கடைசி வரை காட்டிவர தமிழரசுக்கட்சியின் ரவிகரனோ கடைசிவரை முரண்பட்டவாறேயிருந்தார்.

ஒரு கட்டத்தில் கூட்டத்திலிருந்து வெளியேறவும் முற்பட்டிருந்தார்.

இவ்வாறு முறுகலாக நெருக்கடியுடன் சந்திப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த போது தனக்கு இனப்படுகொலையாளி கோத்தபாயவின் பினாமி தெலைக்காட்சியான உள்ளுர் தொலைக்காட்சியில் விசேட செவ்வியிருப்பதாக புறப்பட்டு செல்லமுற்பட்டிருந்தார்.

இது அங்கு பிரசன்னமாகியிருந்த மூத்த போராளிகள் மற்றும் மாணவ பிரதிநிதிகளிடையே கடுமையான சீற்றத்தை தோற்றுவித்திருந்தது.நேற்று  முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடமாகாணசபையும் யாழ்பல்கலைக்கழக மாணவ சமூகம் இணைந்து உணர்வு பூர்வமாக நடத்தவேண்டுமென பக்கம் பக்கமாக அறிக்கை விடுத்த வடமாகாண அமைச்சர் அனந்தி நாடகமாடுகின்றாராவென கேள்வியை எழுப்பியிருந்தனர்.
முன்னதாக வடமாகாணசபை தேர்தல் வாக்களிப்பன்று அனந்தி அரசுடன் இணைந்துவிட்டதாக கடும் பிரச்சாரங்களை தொடர்ச்சியாக குறித்த கோத்தபாயவின் தொலைக்காட்சியே அரங்கேற்றியுமிருந்தது.அதற்கெதிராக தொலைக்காட்சி நிலையத்திற்கு சென்று அனந்தி போராடியுமிருந்தார்.தற்போது தனது கணவர் உள்ளிட்ட இலட்சக்கணக்கானவர்களது காணாமல் போதலிற்கும் இனஅழிப்பிற்கும் காரணமான கோத்தபாயவின் தொலைக்காட்சியின் முக்கிய முகவரான அனந்தி செயற்படுவது தெரிந்ததே.

No comments