Header Ads

test

மக்கள் பிரச்சினைகள் குவிந்துகிடக்கின்றன:வடக்கு முதலமைச்சர்!


உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாநகரசபை ஆகியன மக்களுக்கு வழங்கக்கூடிய சேவைகளில் சுமார் 80விழுக்காடு சேவைகளை தற்போதும் வழங்கப்பட்டே வருகின்றது. அச்சேவைகளைச் சிறப்பாக முன்னெடுத்துச் செல்வது புதியசபைகளது  குறிக்கோளாக இருக்க வேண்டுமென வடமாகாண முதலமைச்சரும் உள்ளுராட்சி அமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களிற்கான பயிற்சிப்பட்டறையொன்று யாழில் இன்று நடைபெற்றிருந்த நிலையில் அங்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதலமைச்சர் உரையாற்றினார்.

அவர் தனது உரையில் எவ்வாறான மனோநிலையில் இருந்து நாம் சேவையாற்ற வேண்டும் என்பதே நாம் தெரிந்து கொள்ளவேண்டிய முதல் விடயம். நாங்கள் மக்களின் மேய்ப்பர்கள் என்ற நிலையில் இருந்து செயற்படாது பொது மக்களுக்கான சேவகர்களாக எம்மை ஆக்கிக் கொண்டு உரிய சேவைகளை வழங்குவதற்கு நாம் முன்வர வேண்டும். விழுந்து விழுந்து வாக்குக் கேட்கும் நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் எமக்கு வாக்களித்த மக்களை மறந்து விடுகின்றோம். அந்த நிலையும் நினைப்பும் உங்களைப் பீடிக்காது பார்த்துக் கொள்ளுங்கள். 

அடுத்து ஒரு பொது மகன் தான் பெற்றுக் கொள்ள வேண்டிய சேவை கருதி ஒரு பிரதேசசபைக்கோ அல்லது மாநகரசபைக்கோ வருகைதருமிடத்து ஒரு தடவையிலேயே அவரின் சேவைகளை வழங்க நீங்கள் ஆவன செய்ய வேண்டும். திரும்பத் திரும்ப சாதாரணப் பொதுமக்களை சபைகள் நோக்கி வரச்செய்வது தவிர்க்கப்பட வேண்டும்;. பலருக்கு பஸ் கட்டணத்தைச் சேமித்தால் அவர்களுக்கு ஒரு நேர உணவாகும். மக்களை திரும்பத்திரும்ப வரச் செய்வது ஊழலுக்கும் ஒத்திப்போடும் மனோநிலைக்கும் அஸ்திவாரம் அமைக்கின்றது.  பொது மக்கள் உங்களது சபையை ஒரு முன்மாதிரியான சபை என எடுத்துக்கூறக்கூடிய வகையில் நீங்கள் ஒவ்வொருவரும் செயற்படுவீர்கள் என எதிர்பார்;க்கின்றோம். 

பிரசேசபைகளில் தவிசாளருக்கும் செயலாளருக்கும் இடையே நிலவ வேண்டிய  உறவு பற்றியது. அவர்களின் உறவு ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்ததாக அமைய வேண்டும். அதாவது ஒவ்வொருவரும் மற்றவரை அனுசரித்து நடக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.அதாவது ஒவ்வொரு பிரதேச சபையினதும் நிறைவேற்று அதிகாரியாக அச்சபையின் தவிசாளர் அவர்களே விளங்குகின்றார். தவிசாளர் அவர்களினாலும்,சபையின் ஒத்திசைவுடனும் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்களை நடைமுறைப்படுத்துகின்ற பொறுப்பு அச்சபையின் செயலாளரினதும் அவரது உத்தியோகத்தர்களினதும் கடமையாகும். ஆகவே செயலாளர்கள் தீர்மானங்களைத் தாம் முன்னெடுக்க அவசரப்படல் ஆகாது. தீர்மானங்கள் மக்கள் பிரதிநிதிகளால் எடுக்கப்படல் வேண்டும். அதே போல தவிசாளர்கள் செயலாளர்களால் முன்னெடுக்கப்படவேண்டியகடமைகளில் தாங்கள் குறுக்கீடு செய்வது ஒரு சுமூகமான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு தடைக்கற்களாக அமைவன. ஆகவே அவரவர் கடமைகளை அவரவர்களே பார்த்து வர நாம் அனுசரணை வழங்க வேண்டும். 

சபை இரண்டுபடுகின்ற போது உறுப்பினர்கள் சிலர் செயலாளர்களுடன் இணைந்து கொண்டு அல்லது செயலாளர்களை அணுகாது நேரடியாக சில உத்தியோகத்தர்களின் உதவிகளோடு குறிப்பிட்ட சில வேலைகளை நிறைவேற்ற முயல்வதை நாம் கண்ணுற்றுள்ளோம். இவ்வாறான செயல்கள்சபை உறுப்பினர்களின் கௌரவத்தை குறைப்பதுடன் ஊழியர்களுக்கிடையேயும் வேற்றுமையை உருவாக்க இடமளிக்கின்றது. இந்த நிலை தவிர்க்கப்பட வேண்டும். 

புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு சபையும் அதன் முழு சேவைக்காலமான 4 வருடங்களையும் திறம்பட மக்கள் சேவைக்காக அர்ப்பணிக்க முன்வரவேண்டும். போரின் பின்னரான எம் மாகாண மக்களின் தேவைகள் மலைபோல் குவிந்து காணப்படுகின்றனவெனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


No comments