தூத்துக்குடி படுகொலைக்கு நல்லூரில் கண்டனம்!
தமிழகத்தின் தூத்துக்குடியில் அரங்கேற்ற தமிழர் படுகொலையை கண்டித்து வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நல்லூரில் கண்டன கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று நடத்தப்பட்டுள்ளது.
தமிழகம் தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தே நல்லூர் ஆலய முன்றலில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
“மோடி அரசே தமிழகத்திலா உன் சூட்டுப் பயிற்சி, சுடாதே சுடாதே தமிழர்களைச் சுடாதே, அடிக்காதே அடிக்காதே தமிழர்களை அடிக்காதே, சுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா?, இந்திய அரசே ஆலை அவசியமானதோ - தமிழனின் உயிர் அவசியமானதோ?, தமிழக ஆட்சியில் தமிழன் என்ன பலி ஆட்டுக் கூட்டமா? ஏன கோசங்களை எழுப்பியதுடன் பதாதைகளை ஏந்தியவாறு நூற்றுக் கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தமிழகப் பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 12 பேர் உயிரிழந்தனர். இதனைக் கண்டித்தே யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் கிளிநொச்சியிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தததுடன் நாளை சனிக்கிழமையும் அடையாள போராட்டங்கள் நடைபெறவுள்ளது.
Post a Comment