நினைவை சமூக நிறுவனமயப்படுத்த அழைப்பு!
நினைவை சமூக நிறுவனமயப்படுத்த வேண்டிய காலமிது - பொது அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு ஒன்று கூடுமாறு தமிழ் சிவில் சமூக அமையம் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையின் மிகக் கோரமான அத்தியாயம் மாவிலாறில் தொடங்கி மூதூர், வாகரை வழியே முள்ளிவாய்க்காலில் மிகப்பெரும் படுகொலையாக நடைபெற் று இன்றுடன் ஒன்பது வருடங்கள் ஆகின்றன. இன்றைய நாள் இறந்த எமது உறவுகளை நாம் கட்சி அரசியல், பிரதேச, கருத்து வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றாக கூடி வடக்கு கிழக்கு எங்ஙனும், தாயகத்திலும், நாடு கடந்தும் நினைவு கூறுகின்றோம். இந்த கூட்டுப் பெரு வலியின் கூட்டு நினைவு ஒரு தேசமாக எம்மை பிணைக்கும் ஆற்றல் கொண்ட நாளாக தொடர்ந்து இருக்க வேண்டுமென தமிழ் சிவில் சமூக அமையம் கருதுகின்றது.
அநியாயமாக கொல்லப்பட்ட எமது உறவுகளுக்காக நாம் அழுது எம்மை ஆற்றுப்படுத்தும் இந்நாளில் எமக்கிழைக்கப்பட்ட பேரழிவிற்கான நீதியைக் கண்டறியும் போராட்டத்தை பல்வகைமைப்படுத்த வேண்டிய அவசியத்தையும் நாம் உணரும் நாளாகவும் இன்றைய தினம் இருக்க வேண்டும். ஒரு நீண்ட கால போராட்டத்திற்காக எம்மை தயார்ப்படுத்தும் திடசங்கற்பத்தையும் நாம் வரித்துக் கொள்ள வேண்டும்.
இனப்படுகொலை முயற்சிகளின் நோக்கம் ஒரு சமூகத்தை குறிப்பிடத்தக்களவில் எண்ணிக்கை ரீதியாக நிர்மூலம் செய்வது மாத்திரமன்று. அவர்களின் அரசியல், சமூக, பொருளாதார கட்டுமானங்களை அளிப்பதன் மூலம் சமூகமாக அவர்களின் இருப்பை நிர்மூலம் ஆக்குவதும் தான். அந்த வகையில் இந்த சமூகக் கட்டுமானங்களை அழிக்கும் இனப்படுகொலை முயற்சி இன்று வரை தொடர்கின்றது. இதனை நாம் எதிர்கொள்வதற்கு புதிய சிந்தனைகளும் முயற்சிகளும் தேவை. இலங்கை அரசு அரசியல் தீர்வு ஒன்றை தர மாட்டாது என்பதை எமக்கு இவ்வருடம் மீண்டும் தெளிவாக சொல்லிவிட்டது. ஆகவே அரசியல் தீர்வுக்கான காத்திருப்பு எம்மை இந்த சமூகக் கட்டுமான பேரழிவில் இருந்து எம்மை ஒரு போதும் காப்பாற்றாது. அவ்வாறெனில் தேசக் கட்டுமானம், மீள் எழுச்சி என்பதை எப்படி சாத்தியாமாக்கப் போகின்றோம் என்பதை பற்றி நாம் கட்டமைப்பு ரீதியாக சிந்திக்க வேண்டும். மக்கள் மத்தியில் பலமான இயக்கங்களையும், அமைப்புக்களையும், தொண்டு நிறுவனங்களையும் உருவாக்கி நாம் தேசக் கட்டுமான முயற்சிகளில் காலம் தாழ்த்தாது செயற்பட வேண்டும். இதற்கு பெருமளவிலான கூட்டுழைப்பு அவசியமானது. அக்கூட்டுழைப்பிற்கான தேவையை இன்றைய நாள் நாம் உணர வேண்டுமென தமிழ் சிவில் சமூக அமையம் கருதுகின்றது.
Post a Comment