நாட்டில் நிலவிவந்த 30 வருடகால யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. தென்னிலங்கை யுத்த வெற்றியை கொண்டாட வேண்டுமென வலியுறுத்தி வருகின்ற நிலையில் வடக்கு–கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது துன்ப–துயரங்களை வெளிப்படுத்த முடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர். யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படவில்லை. மக்கள் தமக்கு நீதியை நிலைநாட்டுமாறு கோரிப் போராடி வருகின்ற போதிலும் பதவியிலிருக்கின்ற அரசாங்கமானது அதனை தமது அரசியல் இருப்புக்களுக்கு ஒரு சவாலாகவே நோக்கி வருகிறது. எனவே பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கான நீதி என்பது ஒரு எட்டாக்கனியாகவே நீடித்து வருகின்றது. ஒன்பது வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் இதுவரை நம்பிக்கை வைக்கக்கூடிய அணுகுமுறை எதுவும் இடம்பெறவில்லை என்பதே பொதுவான கருத்தாக இருக்கின்றது. 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தால் பல நம்பிக்கை தரும் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் ஆட்சியின் இறுதிக்காலம் நெருங்கும்போது அவை மறக்கடிக்கப்படும் சூழலே உருவாகி வருகிறது. இதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு குறித்த கேள்வியும் எழவே செய்கிறது. யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்வதேச மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் என்பன காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த ஒன்பது வருடகாலமாகவே கண்ணீருடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். வீதிகளில் கண்ணீர் மல்க போராடிக்கொண்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படவேண்டுமென்ற அவர்களது கோரிக்கை நியாயமானதாகும். அதனை யாரும் சவாலுக்குட்படுத்த முடியாது. மாறாக அவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் ஒரு பொறிமுறையை முன்னெடுத்து நீதியை வழங்குவதே தேவையான விடயமாகவுள்ளது. யுத்தம் முடிவடைந்ததும் அந்த சமூகத்தின் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் தேசிய ஒற்றுமைைய பலப்படுத்தவும் வலுவான நிரந்தர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செயற்படுவதன் மூலமே ஆரோக்கியமான அல்லது சாதகமான சமாதானத்தைக் காணமுடியும். சமாதானம் என்னும் போது அதனை இரண்டு வகையாக பிரிக்கலாம். "சாதகமான சமாதானம்" என்பது ஒன்று. "பாதகமான சமாதானம்" என்பது மற்றொன்று. ஒரு சமூகத்தில் நிலவி வந்த மோதல் முடிவுக்கு வந்ததும் அல்லது அந்த மோதல் அரசாங்கத்தால் தோற்கடிக்கப்பட்டதும் அதாவது யுத்தம் நிறைவு செய்யப்பட்டதும் நாட்டில் ஒரு அமைதிநிலை ஏற்படும். அப்போது அந்தமோதல் ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிந்து அதனைத் தீர்த்து நிரந்தர நல்லிணக்கத்தை உருவாக்குவதே "சாதகமான சமாதானம்" எனக் கருதப்படுகின்றது. ஆனால் மோதல் ஏற்பட்டதற்கான காரணம் தீர்க்கப்படாமல் மோதல் நடத்திய தரப்பினரை தோற்கடித்துவிட்டு ஏற்படுத்தப்படும் சமாதானமானது "எதிர்மறையான சமாதானம்" என்று நோக்கப்படுகின்றது. அந்த வகையில் தற்போது எமது நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் யுத்தம் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தீர்க்கப்படவில்லை. அத்துடன் யுத்தத்தின் போது ஏற்பட்டதாகக் கூறப்படும் வடுக்கள் இன்னும் ஆற்றப்படவில்லை. எனவே நாம் "எவ்வகையான சமாதானத்தை" அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததும் இந் நாட்டில் ஒரு நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தி சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கத்தைப் பலப்படுத்தி தேசிய ஒற்றுமையை உருவாக்குவதற்கான சந்தர்ப்பம் அப்போதிருந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்குக் கிடைத்தது. ஆனால் அந்த சந்தர்ப்பம் சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை என்பதுடன் மேலும் விரிசல்கள் ஏற்படும் வகையிலான செயற்பாடுகளே இடம்பெற்றன. இச் சூழலில் பாதிக்கப்பட்ட மக்களும் பாரிய விரக்தி நிலையையே நோக்கிச் சென்றனர். சர்வதேச சமூகமும் ஐக்கியநாடுகள் சபையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு அழுத்தங்களைப் பிரயோகித்த போதிலும் "சாதகமான சமாதானத்தை" உருவாக்கும் நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. 2010 ஆம் ஆண்டு கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு நிறுவப்பட்டு பொதுமக்களிடம் சாட்சியங்கள் பெறப்பட்டன. பின்னர் அதுதொடர்பான அறிக்கையும் முன்வைக்கப்பட்டது. ஆனால் அந்த அறிக்கையின் பரிந்துரைகள் கூட முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு காணாமல்போனோர் தொடர்பில் ஆராயும் நோக்கில் பரணகம ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. எனினும் இதனால்கூட காணாமல்போன மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. இதற்கிடையில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் மூன்று பிரேரணைகள் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டன. அதில் இரண்டு பிரேரணைகளில் உள்ளக விசாரணைப் பொறிமுறைகளை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தப்பட்டிருந்தது. மூன்றாவது பிரேரணையில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தமீறல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை அலுவலகம் விசாரணை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி 2014ஆம் ஆண்டு இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்க ஆரம்பித்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டுதல், நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணுதல் போன்ற விடயங்களை முன்னிறுத்தியே சர்வதேச அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்தன. அச் சந்தர்ப்பத்தில் அப்போதைய இலங்கை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் பாரிய முரண்பாட்டுடன் இருந்ததுடன் பகிரங்கமாகவே வேறுபாடுகளைக் கொண்டிருந்ததைக் காணமுடிந்தது. இச் சூழலிலேயே யாரும் எதிர்பாராத வகையில் கடந்த 2015ஆம் ஆண்டு நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் இணைந்து இவ்வாட்சி மாற்றத்தை ஏற்படுத்த செயற்பட்டனர் என்று கூறலாம். இதற்கு நாட்டின் சிறுபான்மை மக்கள் பாரிய ஆதரவை வழங்கினர். அதிலும் பாதிக்கப்பட்ட மக்கள் பாரிய நம்பிக்கையை வைத்து நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினர். கடந்த 2015 ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தரப்பு பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியே ஆட்சிக்கு வந்தது. குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதாவது தமிழ் பேசும் மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடியவாறான சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத்திட்டத்தை புதிய அரசியலமைப்பின் ஊடாக முன்வைப்பதாக வாக்குறுதி வழங்கப்பட்டது. அத்துடன் யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்வதேச மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான மீறல்கள் தொடர்பாக உள்ளகப் பொறிமுறை முன்னெடுக்கப்பட்டு நீதிநிலைநாட்டப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதேபோன்று காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விவகாரத்துக்கு தீர்வு, காணாமல்போனோர் விடயத்துக்கு தீர்வு, பெண்களை தலைமையாகக் கொண்ட குடும்பங்களுக்கான வாழ்வாதார வசதிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்கும் செயற்பாடு, வடக்கு– கிழக்கில் யுத்தத்தால் அழிவடைந்த பிரதேசங்களை கட்டியெழுப்புதல், தேர்தல் முறை மாற்றம் போன்ற பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்தே மைத்திரி– ரணில் தரப்பு பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்டது. அதேபோன்று 2015 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருந்தது. அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் மைத்திரி–ரணில் தரப்பு ஆட்சிக்கு வந்து மூன்றரை வருடங்கள் கடந்து விட்டபோதிலும் இதுவரை வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் எந்தவொரு விடயமும் ஆக்கபூர்வமாக முன்னெடுக்கப்படவில்லை. ஒருசில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளவேண்டும். காணிவிடுவிப்புக்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இன்னும் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ள போதிலும் குறிப்பிடத்தக்கவகையில் காணி விடுவிப்பு இடம்பெற்றுள்ளது. அதேபோன்று ஜனநாயகம் குறிப்பிடத்தக்களவில் நிலைநாட்டப்பட்டுள்ளதுடன் பேச்சு சுதந்திரமும் ஓரளவில் உறுதிப்படுத்தப்பட்டே உள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதான பிரச்சினைகள் எவை குறித்தும் இன்னும் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதாவது உடனடியாக தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளான காணாமல்போனோர் விவகாரம், அரசியல் கைதிகள் விவகாரம் என்பன இதுவரை தீர்க்கப்படவில்லை. நீண்டகால அழுத்தங்களுக்குப் பின்னர் தற்போது காணாமல்போனோர் தொடர்பில் ஆராய்வதற்காக அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு ஆணையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த அலுவலகத்தின் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் பாதிக்கப்பட்ட மக்கள் அதில் நம்பிக்கை வைப்பதாக தெரியவில்லை. அண்மையில் மன்னாரில் நடைபெற்ற அந்த அலுவலகத்தின் மக்கள் சந்திப்பின்போது பாதிக்கப்பட்ட மக்கள் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். இதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் விரக்தி நிலையிலிருப்பது தெளிவாகின்றது. அதேபோன்று யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பல இழப்புக்களை சந்தித்த மக்களுக்கு நஷ்டஈடு வழங்கும் செயற்பாடு இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. அதேபோன்று யுத்தத்தின்போது கணவனை இழந்து தற்போது குடும்பத்தலைவிகளாக செயற்படும் பெண்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவேண்டியுள்ளன. இது தொடர்பில் ஒரு பொறிமுறையை முன்னெடுத்து துயரங்களை எதிர்கொண்டு வாழ்கின்ற இம் மக்களுக்கு வாழ்வாதார வசதிகளை செய்துகொடுக்கவேண்டும். ஆனால் அதுதொடர்பிலும் இதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. பொதுவான பொறிமுறையின் கீழ் நஷ்டஈடு வழங்குவதற்கான ஒரு திட்டம் முன்னெடுக்கப்படுவதற்காக அமைச்சரவைப் பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இதுவரை அந்த அலுவலகம் நிறுவப்படவில்லை. பொறுப்புக்கூறல் பொறிமுறை முன்னெடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளபோதிலும் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. இவ்வாறு யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. மாறாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வாக்குறுதிகளை வழங்கி அதிகாரத்துக்கு வந்த அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகள் தென்னிலங்கையில் தமது அரசியல் இருப்புக்காக அக்கறையைக் காட்டிக்கொண்டிருக்கின்றனவே தவிர வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்பை வெளிக்காட்டுவதாக தெரியவில்லை. அண்மையில் பாராளுமன்றத்தில் கொள்கை விளக்க உரையை நிகழ்த்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமை தொடர்பில் அவர்கள் பொறுமையிழந்திருப்பதாக தெரிவித்திருந்தார். அதுமட்டுமன்றி ஜனாதிபதியும் பிரதமரும் அடிக்கடி தமிழ் பேசும் மக்களின் நீண்டகால அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் உள்ளுணர்வுடன் கருத்துக்களை வெளியிட்டு வருவதைக் காண முடிகின்றது. ஆனால் அவற்றுக்கு செயல்வடிவம் கொடுப்பதிலேயே தென்னிலங்கை தலைவர்களிடம் தயக்கம் காணப்ப டுகின்றது. எவ்வாறெனினும் தொடர்ந்து இவ்வாறு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காமல் இழுத்தடிக்கக்கூடாது. பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு நீதியை நிலைநாட்டுமாறு கோரி கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கின்றனர். அந்தக் கண்ணீருக்கு பதிலளிக்கவேண்டியது அவசியமாகும். காணாமல்போனோரின் உறவுகளின் கண்ணீரினூடாகவே காணாமல்போனோர் குறித்த அலுவலகம் பெறப்பட்டுள்ளதாக அண்மையில் அந்த அலுவலகத்தின் உறுப்பினரான நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்திருந்தார். ஆனால் அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரினூடாக பெறப்பட்ட அலுவலகத்தின் செயற்பாடுகள் பாதிக்கப் பட்ட மக்களை திருப்தியடையச் செய்வ தாக இருக்கவேண்டும். இந்நிலையில் தற்போது ஒன்பது வருடங்கள் கடந் தும் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீ ருடனும் ஏக்கத்துடனும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அரசாங்கம் இனியும் தாமதிக்காது இம் மக்களுக்கு நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி சமூக மட்டத்தில் நல்லிணக்கத்தைப் பலப் படுத்தி நிரந்தர சமாதானத்தை அடைய முயற்சிக்க வேண்டும். மக்கள் தொடர்ந்தும் விரக்தியுடனும் ஏக்கத்துடனும் இருப்பதற்கு இடமளிக்கவேண்டாம் என்பதே அனை வரதும் கோரிக்கையாக இருக்கிறது.
Post a Comment