Header Ads

test

ஆறுகளை மேவி பெருக்கெடுத்துப் பாயும் வெள்ளம்! - ஆயிரக்கணக்கான மக்கள் அந்தரிப்பு


வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களினால் நாட்டின் 14 மாவட்டங்களில் 23 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதுடன், 1,500 ற்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி, களுத்துறை ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதுடன், ஏழு மாவட்டங்களில் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களனி, களு கங்கை, நில்வளா, ஜிங் கங்கை, அத்தனகல்ஓயா, மகா ஓயா உள்ளிட்ட ஆறுகள் பெருக்கெடுத்ததால் தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதுடன், சில இடங்களில் பாரிய வெள்ள அனர்த்தத்துக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தலா 1 மில்லியன் ரூபா வீதம் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதுடன், அவசர தேவைகளுக்காக 28.75 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளரும், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளருமான கலாநிதி அமலநாதன் தெரிவித்தார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சிக்குண்ட மக்களை மீட்பதற்கும் அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கும் சிறிய வள்ளங்கள் உள்ளடங்கலாக 434 படகுகள் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் நேற்று நடைபெற்றது. பதின்நான்கு மாவட்டங்களில் 5585 குடும்பங்களைச் சேர்ந்த 23 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகளைவிட்டு வெளியேறிய 1500ற்கும் அதிகமானவர்கள் 30 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அந்தந்த பிரதேச செயலகங்களின் ஊடாக சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக கலாநிதி அமலநாதன் குறிப்பிட்டார். கேகாலை மாவட்டத்தில் 411 குடும்பங்களைச் சேர்ந்த 1,472 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 90 குடும்பங்களைச் சேர்ந்த 253 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களுக்காக 4 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தில் 253 குடும்பங்களைச் சேர்ந்த 927 பேரும், களுத்துறையில் 71 குடும்பங்களைச் சேர்ந்த 317 பேரும் குருநாகலில் 491 குடும்பங்களைச் சேர்ந்த 1846 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுக் காலையுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில் புத்தளம் மாவட்டத்தில் 353 மில்லிமீற்றர் மழையும், மாத்தளை மாவட்டத்தில் 267 மில்லிமீற்றர் மழையும், இரத்தினபுரியில் 232 மில்லிமீற்றர் மழையும், களுத்துறையில் 232 மில்லிமீற்றர் மழையும் பதிவாகியுள்ளன. களனி கங்கையின் நீர்மட்டம் 17.6 மீற்றராகவும், களு கங்கை 8.3 மீற்றராகவும், ஜிங் கங்கை 5.8 மீற்றராகவும், நில்வளா கங்கையின் நீர்மட்டம் 6.7 மீற்றராகவும், மகா ஓயாவின் நீர்மட்டம் 7.5 மீற்றராகவும், அத்தனகல்ஓயா 5.3 மீற்றராகவும் உயர்ந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். அனர்த்தம் நிலவும் பகுதிகளுக்குத் தேவையான படகுகள் மற்றும் வள்ளங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், உதவுவதற்காக முப்படையினரும் தயார்நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். நில்வளா கங்கையின் நீர்மட்டம் உயர்ந்திருப்பதால், மாத்தறை, கடவத் சதர, திஹகொட, மலிம்பட, கம்புறுபிட்டிய, அதுருலிய, அகுரஸ்ஸ, பிடபாத்தர பிரதேச செயலக பிரிவுகளில் உள்ளவர்களையும், கிங் கங்கையின் நீர்மட்டம் உயர்ந்திருப்பதால் பத்தேகம, போப்பே, போத்தல, வெலிவிட்டிய, திவிதுர, நாகொட, நியகம, தவலம, நெலுவ பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ளவர்களையும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரியுள்ளது. அத்துடன் களுத்துறை, தொடம்கொட, மில்லனிய, மாதுருவல, ஹொரணை, பாலிந்தநுவர, புளத்சிங்ஹல, இங்கிரிய, கிரில்ல, குருவிட்ட, எலபாத்த, இரத்தினபுரி உள்ளிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ளவர்கள் களுகங்கை பெருக்கெடுக்கும் அபாயம் தொடர்பில் அவதானமாக இருப்பதுடன், களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வதால், கொழும்பு, களனி, கொலன்னாவ, பியகம, கடுவெல, ஹன்வெல்ல, தொம்பே, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட, தெரணியகல பிரதேச செயலக பிரிவுகளில் உள்ளவர்களும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர். அத்தனகலு ஓய நீர்மட்டம் தொடர்பில் நீர்கொழும்பு, ஜா-எல, கட்டான, மினுவாங்கொட, கம்பஹா, அத்தனகல்ல பிரதேச மக்கள் அவதானமாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, கேகாலை, இரத்தினபுரி, குருநாகல், பதுளை, கண்டி, மாத்தளை, கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் மண்சரிவுக்கான ஆபத்து இருப்பதாக கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது. இரத்தினபுரியில் எலபாத்த, குருவிட்ட மற்றும் எகலியகொட ஆகிய பிரதேச செயலகங்களில் மண்சரிவு அபாயம் இருக்கும் பகுதிகளிலிருந்தும், களுத்துறையில் பாலிந்தநுவர, வெ ளிமடை, புளத்சிங்கள உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்தும், கேகாலையில் புளத்கோபிட்டிய, தெரணியகல உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்தும் கொழும்பு மாவட்டத்தில் சீதாவாக்க பிரதேசத்திலிருந்து பதுளையில் ஹல்மதுல்ல பிரதேசத்திலிருந்தும் மக்களை வெ ளியேறுமாறு கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இந்தப் பகுதிகளில் இன்று மாலை 5 மணிவரை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments