காற்றே! எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே! எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே! எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே! எம் நெஞ்சத்து தீயையும் சேர்த்து எரி. நிலமே! எம் சோகங்களின் பாரங்களையும் தாங்கிக் கொள். காலமே! நீ கைவிட்ட சனங்களது காயங்கள் இன்னும் ஆறாமல் கிடக்கிறது பார். விதியே! நீ விரித்த வலையில் விழுத்திய புறாக்கள் இப்போதும் துடித்துக் கிடக்கிறது காண். வானத்தின் சாட்சியாய், வரலாற்றின் சாட்சியாய், வாரிக் கொடுத்த வள்ளல்கள் சாட்சியாய், வாரிவிட்ட கள்ளர்கள் சாட்சியாய், நம்பிக் கழுத்தறுத்த கயவர்கள் சாட்சியாய், நடித்துக் கெடுத்த நடிகர்கள் சாட்சியாய், குள்ளநரிக் கூட்டத்து குடிமகன்கள் சாட்சியாய், கண்ணை மூடிப் பால் குடித்த கள்ளப் பூனைகளின் சாட்சியாய் நம்மை நாமிழந்து, நம் சொந்தங்களை இழந்து வாழ்ந்த மண்ணிழந்து, வரலாறு இழந்து காலப் புத்தகத்தின் கணக்கினிலே இன்று நான்கு ஆண்டு ஆயிற்று. நேற்றுப் போல் இருக்கிறது நெஞ்சில் நெருப்பெரிகிறது. தேற்றுவார் இன்றி மனம் தேம்பித் தேம்பி அழகின்றது. நாற்றுப் போல் இருந்த நம்மிளங் குழந்தைகளை கூற்றுவர் கொண்டுபோன குரூரக் காட்சி விரிகிறது. சேற்றினிலே குற்றுயிராய் கிடந்த முகங்கள் சேனைகளின் குண்டினிலே சிதைந்த அங்கங்கள் வீற்றிருந்த கடவுள்களின் விழுந்தழிந்த சொரூபங்கள் விதைந்து மண்ணில் புதைந்த விடுதலையின் கரங்கள் சிதைந்து கிடந்த கிராமத்து இடங்கள் எல்லாம் சுமந்து கிடக்கிறது எம் எண்ணங்கள். மறக்க முடியுமா? மறக்க முடியுமா? மனதெங்கும் வழியும் காயத்தின் குருதியை காலநதி வந்து கழுவ முடியுமா? சுமந்த சிலுவைகள், சுரந்த கண்ணீர்கள், இறந்த உறவுகள், இழந்த சிறகுகள், குழந்தை குட்டிகள், குமர் குஞ்சுகள், குன்று மணிகளாய் சிதறிக் கிடந்ததை கண்டு வந்த கண்கள் மறக்குமா? காயத் தழும்புகள் ஆறிப் போகுமா? புத்தனின் பிள்ளைகள் புரிந்த போர்நடனத்தில் செம்மண் புளுதியில் செத்தநம் உறவுகள் மீள முடியுமா? உயிர் நீள முடியுமா? யுத்தம் முடிந்தது. சித்தம் மகிழந்தது. புத்தம் உமக்கு மறுவாழ்வு தந்தது. புத்தம்புது வாழ்வு இனி மலர்ந்தது என்று சொல்லிடும் ஏமாற்று நரிகளே! ”ஓமோம் சாமி”போடும் ஓநாய்க் கூட்டமே! நாமெம் நிலத்தில் வாழ்ந்த வாழ்க்கையை நந்திக்கடல் மடி நீந்திய நாட்களை இரக்கம் இன்றிநீர் கொன்ற உயிர்களை இழக்கச் செய்த உடல் உறுப்பினை இனிமேல் கொண்டு வந்திட முடியுமா? இழந்தநம் வாழ்வை தந்திட முடியுமா? யுத்தம் நடத்திய செத்த வீட்டினில் செத்துக் கொண்டு நாம் இருக்கையில் சத்தம் இன்றி பார்த்துக் கொண்டிருந்தவர் சதங்களை கொஞ்சம் கிள்ளி எறிகிறார். சரியாய் போயிடும் இனிமேல் என்கிறார். பாவம் செய்த கைகளை மெல்லப் பணத்தினில் கழுவி கறையை நீக்கிறார். அள்ளிக் கொடுத்த வன்னித் தமிழனுக்கு கிள்ளிக் கொடுத்து கிடுகும் கொடுக்கிறார். யுத்தம் குடித்து சிந்திய ரத்தம் வெள்ளை மண்மீது ஊறிக் கிடந்ததை... பிள்ளைத் தாச்சியின் வயிறு கிழிந்து பிறக்காக் குழந்தையின் கால் வெளிவந்ததை... முலைப்பால் கேட்டு அழுத குழந்தைக்கு மழைப்பால் பிடித்து அருந்தக் கொடுத்ததை... கலைத்தாய் வாழ்ந்த கல்விக் கூடமும் சிலையாய் இருந்த கடவுள் இல்லமும் சிதறி நொருங்கி சிதைந்து கிடந்ததை... தண்ணீர் கேட்டு தவித்த நாவுகள் தாகத்தோடு குளநீர் குடித்ததை... கண்ணீர் வழிந்த கன்னத் தசைகளில் கையால் தொட்டு உப்புச் சுவைத்ததை... மறக்க முடியுமா? மறைக்க முடியுமா? இறக்கும் வரைக்கும் இறக்கி வைக்க முடியாச் சோகம் இருக்கும் வரைக்கும் உறக்கம் கூட சரியாய் வருமா? உயிரே உன்வலி எழுத முடியுமா? வானம் பார்த்து வாடிக் கிடந்தவர் காயத்தோடு கைகூப்பித் தொழுததை... காப்பாற்றென்று கதறி அழுததை... கஞ்சிக்கரிசி கிடைக்கா வறுமையில் கண்டதையெல்லாம் திண்டுயிர் வாழந்ததை.... காசிருந்தும் பொருளேதும் இல்லா காலச் சோகத்தில் அலைந்து திரிந்ததை... உமிக் கும்பிக்குள் உலைக்கு நெல் புடைத்ததை... ஊசி மருந்தின்றி உயிர்கள் மறைந்ததை... காயப்பட்டவர் கிடந்து முனகிய கொட்டிலின் கட்டிலில் கொத்துக்குண்டு விழுந்து வெடித்ததை... நேசித்த உறவல்லாம் ஒவ்வொன்றாய் சாக யாசித்து யாசித்து வான்பார்த்து அழுததை... பேசித்தீர்க்க முடியாச் சுமைகளில் பேதையாய் எங்கும் அலைந்து திரிந்ததை... சண்டை வந்து சமருக்கு இழுத்த அண்டை வீட்டு அருமந்த பிள்ளை அடுத்த நாளே அமைதியாய்ப் படுத்து அடுப்படிக் கரையால் விழிமூடி வந்ததை.... அண்டை நாட்டு உறவுகள் கூட ஆயிரந் தடைவைகள் கத்திக் குளறியும் வந்தெமைக் காத்திடா வரலாற்றுத் துயரை.... கைகள் உயர்த்தி கண்ணீர் சுமந்து விதியின் சதியில் சரண் அடைந்தவர்கள் இதுநாள் வரைக்கும் இருக்கிறார் என்றோ தெரியா வலியில் தேம்பும் கதைகளை... யுத்தம் முடித்தபின் புத்தனை இருத்தி சட்டம் தன்னை தாங்கள் எடுத்து நித்தம் அடிமையாய் எமை நடத்தும் நீதியற்ற படைகள் பிடித்த பாதிப்பேர் கூட மீளா உண்மையை... நான்காண்டினில் நாம் மறப்போமா? நாளையும் கூட நினைவிழப்போமா? முள்ளிவாய்க்கால் என்பது ஈழத்தமிழரைப் பொறுத்த வரைக்கும் வெறும் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது. அது பள்ளிக்கூடம் வரலாற்றுப் பள்ளிக்கூடம்.
Post a Comment