நான்காவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் உணர்வுபூர்வமாக ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி அனுஷ்டிக்கப்பட்டது. தமிழின வரலாற்றில் ஒரு சோக கலிங்கப்போர் நிகழ்வாக எழுதப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நேற்றைய தினம் வடகிழக்கிலுள்ள பல்லாயிரக்கணக்கான உறவுகள் ஒன்றுகூடி நினைவு கூர்ந்தார்கள். இந்த நிகழ்வில் இறுதியுத்தத்தில் மரணித்தவர்களின் ஆயிரக்கணக்கான இரத்த உறவுகள், அயல் உறவுகள், அரசியல்வாதிகள், பொதுஅமைப்புக்கள் ,மாணவர்கள், மதத்தலைவர்கள் என ஏகப்பட்டவர்கள் மதம், இனம், பிரதேசம் பாராது கலந்துகொண்டிருந்தார்கள். ஆயிரக்கணக்கான சுடர் ஒளியால் முள்ளிவாய்க்கால் சோக தேசமாக காட்சியளித்தது.
மரணங்களை மலிவாக்கிய அந்த முள்ளி மண்ணில் தமது உறவு ஆத்மாக்களுக்கு அம்மாவென்றும் அப்பாவென்றும் அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, மாமன், மாமி, பேரன், பேத்தி என ஆயிரக்கணக்கான உறவுகள் உணர்வுடனும் உருகியும் மரணித்த மண்ணில் நினைவு கூர்ந்தார்கள். இந்த நிகழ்வு முள்ளிவாய்க்காலில் மட்டுமன்றி வடகிழக்கில் எங்கெங்கெல்லாம் தமிழ் மக்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் அனுஷ்டிக்கப்பட்டது. ஆராதிக்கப்பட்டது. கடந்த மே மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் நினைவு கூரும் அஞ்சலி வாரம் ஆரம்பிக்கப்பட்டு வடகிழக்கில் 20க்கு மேற்பட்ட இடங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வந்த நிலையில் யாழ். செம்மணிப்பகுதியில் பல தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மே 12ஆம் திகதி நடைபெற்றது. கிருசாந்தியென்னும் மாணவிக்கு நடந்த மாளமுடியா கொடூரம் நினைவு கொள்ளப்பட்டது. அதேபோல் கடந்த மே 14ஆம் திகதி வடமராட்சி கிழக்கில் நாகர்கோவில் பாடசாலை முன்பாக 22 மாணவர்கள் விமானக்குண்டு வீச்சுக்கு இலக்காகி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவத்தை நினைவு கூரும் வகையில் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பில் பன்னங்குடாவெளியில் உணர்வுபூர்வமாக நேற்றைய தினம் நினைவஞ்சலி நடைபெற்றதுடன் இரத்ததானம், அன்னதானம் மற்றும் மாலை 6.30 மணியளவில் பன்னங்குடாவெளியில் ஆற்றங்கரை முற்றத்தில் இறந்தவர்களின் உறவுகளால் 1000 சுடர்கள் ஏற்றப்பட்டன. திருகோணமலையில் மே 16ஆம் திகதி மாலை கடற்கரை தியாகிகள் அரங்கின் முன்பாக ஆத்மாக்களை நினைவு கூரும் வகையில் பொதுமக்களால் சுடர் ஏற்றி அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டதுடன் நேற்றைய தினம் சிவன் ஆலயம் தந்தை செல்வா சிலைக்கு முன்பாக சுடர் ஏற்றி அனுஷ்டிக்கப்பட்டது. மே 17ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் விசேட அதிரடிப்படையினரால் நூற்றுக்கணக்கானவர்கள் (திருக்கோவிலில்) கொல்லப்பட்ட சம்பவத்தை நினைவுகூரும் வகையில் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மாலை கல்லடி கடற்கரையிலும் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது. புலம்பெயர் தேசமெல்லாம் தாயகமண்ணில் உயிர் நீத்த உறவுகளை நினைந்தேங்கி நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் நிறுவப்பட்டதற்குப்பின்னால் இந்த முள்ளி அழிப்பு நாள் அனுஷ்டிக்க சுதந்திர கதவு திறந்து விடப்பட்டதாக கூறப்பட்டாலும் பல்வேறு தடைகள், சவால்கள், விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த நான்காவது நினைவேந்தல் நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது. உலக வரலாற்றில் மிகப்பெரிய தமிழினப்படுகொலை நாள் மே 18 ஆகும். இந்த நினைவு நாளை அனுஷ்டிக்கும் முகமாக வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் ஏற்பாட்டுக்குழு அமைக்கப்பட்டிருந்தது. வருவோருக்கு அனுசரணை வழங்கும் முகமாக பொதுமக்களுக்கான பந்தல்கள், தண்ணீர் பந்தல்கள் உட்பட ஏனைய வசதிகளும் பொது அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் போராளிகள் நிகழ்வை வடிவமைக்கும் வகையில் மைதான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தார்கள். வடக்கிலுள்ள 5 மாவட்டங்களிலிருந்தும் கிழக்கிலுள்ள 3 மாவட்டங்களிலுமிருந்தும் ஏராளமான உறவுகள் வருகை தந்திருந்ததோடு 8 மாவட்டங்களிலிருந்தும் தமது சொந்தங்களை களப்பலி கொடுத்த உறவுகள் என்ற வகையில் மாவட்டத்துக்கு ஒரு உறவாக எண்மரும் வடகிழக்குக்கு வெளியேயுள்ள உறவுகளில் ஒருவருமாக ஒன்பது உறவுகள் சுடரேற்றி தங்கள் உறவுகளுக்கு ஆகுதி செய்து வைக்க ஏனைய உறவுகள் ஏற்றுவதற்கென ஒழுங்கு செய்யப்பட்டிருந்த 1500 சுடர்கள் அந்த விதைப்பு மண்ணில் ஏற்றப்பட்டன. எங்கும் சுடராய் ஒளிவேள்வியாய் சுடர் கள் வானத்தை நோக்கி வளர்ந்து ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்துவதுபோல் இருந்தது. கண்ணீரும் கம்பலையும் நிறைந்த மண்ணாக முள்ளி மண்காணப்பட்டதாக உணரப்பட்டது. சுதந்திர இலங்கையில் தமிழ் இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பலகோர கொடிய சம்பவங்களில் முள்ளிவாய்க்கால் யுத்த வடுக்களை தமிழ் மக்கள் கோடி வருடங்கள் கழிந்தாலும் மறக்க முடியாத அளவுக்கு வரலாற்றை நினைவு கொள்ளும் மே 18. இலங்கை தமிழ் மக்களின் துக்கிப்பு நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது போல் முள்ளி நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. மாவீரர் தினத்துக்கும் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் தினத்துக்கும் வித்தியாசமுண்டு. தமிழீழ விடுதலைப்புலிகள் தனித்தமிழ் ஈழம் என்ற கனவோடு களப்போர் புரிந்து வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவு கொள்ளும் நாள் மாவீரர் தினமாகும். ஆனால் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இறுதி யுத்தத்தில் ஏதுமறியாமல் இறந்துபோன அப்பாவி மக்களை அவர்களின் உறவுகள் நினைவு கொள்ளும் நாள் பிதிராகிப்போய் பிறப்புக்கும் இறப்புக்கும் எல்லை தெரியாத அந்த அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த தினமாக அது ஆராதிக்கப்படுகிறது. 2009ஆம் ஆண்டு மே மாதம் தமிழர்களின் உரிமைப்போருக்கு உலக வல்லரசுகளோடு சேர்ந்து உலைவைக்கப்பட்ட மாதம். மே 18ஆம் திகதி உலக வரலாற்றை உலுக்கிய நாள் என்பதை உலகமே கண்ணீர் மல்க ஏற்றிருந்தது. வன்னிப்போரை நயவஞ்சகத்துடன் மூட்டியது கண்டு உலகமே அழுது கண்ணீர் வடித்தது. 2009ஆம் ஆண்டு வன்னிப்போர் மூண்டவேளையில் பாராளுமன்றில் வன்னி நிலைமையை எடுத்துக்கூறிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் பின்வருமாறு உலகத்துக்கு அறிவித்தார்.
வன்னியில் சாட்சியமில்லா படுகொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. மிகப்பாரதூரமான மனிதப்பேரவலம் ஏற்பட்டுள்ளதுடன் மரணம், அழிவு பெருந்தொகையில் இடம்பெற்றுள்ளதாக நான் அறிகிறேன். இங்கு இடம்பெறும் அழிவைப்போன்று உலகில் வேறு எந்த நாடுகளிலும் இடம்பெறவில்லை (இரா. சம்பந்தன் 5.5.2009 பாராளுமன்றில்) இச்செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் ஐ.நா. செய்மதிப்படங்கள் ஊர்ஜிதம் செய்துள்ளதாக செய்திகள் கசிந்திருந்தன. அதன் பிரகாரம் மோதல் நடைபெறும் சூன்ய பிரதேசத்துக்குள் அடைபட்டிருக்கும் பெண்கள், சிறுவர், முதியோர் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மரணத்துடன் போராடிக்கொண்டிருக்கிறார்களென சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் அச்சம் தெரிவித்திருந்தது. பொதுமக்கள் தங்கியிருக்கும் பாதுகாப்பு வலயத்தின் மீது விமானப்படை குண்டு வீச்சு நடத்தியதாக செஞ்சிலுவைச் சங்கம் கவலை தெரிவித்திருந்தது. வன்னிப்போரும் அதன் இழப்புக்கள் பொதுமக்கள் தொடர்பில் அப்போது கருத்து தெரிவித்திருந்த ஐ. நா. சபையின் கொழும்புக்கான பேச்சாளர் கோர்டன் வைஸ் வன்னிப்பகுதியில் இரத்தக்களரி ஏற்பட்டிருப்பதாக தனக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.வன்னி பாதுகாப்பு வலயத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என வைஸ் கவலை தெரிவித்திருந்தார். வன்னி இறுதி யுத்தம் குறித்து இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிரான்ஸ் நாட்டின் வெளிவிவகாரங்களுக்கான அமைச்சரான பெர்னாட் குச்னரும் இங்கிலாந்து அமைச்சருமான டேவிட் மில்லிபாண்டும் வன்னி நிலை குறித்து ஆராய உடனடியாக ஐ.நா. சபை கூட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தமையை கவனமாக எடுத்துப்பார்ப்பின் முள்ளி வாய்க்காலில் எத்தனையாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாமென ஊகிக்க முடியும். கொல்லப்பட்ட பொதுமக்கள் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்த ஐ.நா. சபைக்கான மனிதாபிமான விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் வன்னி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஒருபோதும் தெரியாமலே போகலாம். இடம்பெற்ற யுத்தத்தில் கடைசிக்கட்டத்தில் இறந்த அப்பாவி பொதுமக்களின் சரியான எண்ணிக்கை தெரியாமலே இருக்கிறது. இந்த யுத்தத்தில் 80 ஆயிரம் தொடக்கம் 1 லட்சம்வரை கொல்லப்பட்டிருக்கலாம் என கருத்து தெரிவித்திருந்தார். யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் மே 18ஆம் திகதி ஜோர்தானிலிருந்து திரும்பிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ விமானத்தை விட்டு இறங்கியவுடன் தரையில் விழுந்து முத்தமிட்டு போர் முடிந்துவிட்டது. புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டார்கள் என்பதற்காக பெருமைப்பட்டாரே தவிர கொல்லப்பட்ட பொதுமக்களுக்காக அவர் ஒரு சொல்லும் உச்சரிக்காமலே சென்றதை உலகம் தொலைக்காட்சிகளில் கண்டுகொண்டது. இறுதி யுத்தத்தில் நடந்தேறிய சம்பவங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விடுத்த உத்தியோகபூர்வமான அறிவித்தல்கள் யாதெனப்பார்ப்பின் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் (லண்டன் டெலிகிராப்) 9100 விடுதலைப்புலிகள் சரணடைந்துள்ளனர். இதில் 7500 பேர் புனர்வாழ்வு நிலையங்களிலும் 1600 பேர் பயங்கரவாத நடவடிக்கை தொடர்பில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்திருந்தார். பிரபாகரன் உட்பட 300 புலி உறுப்பினர்களின் சடலங்கள் முள்ளிவாய்க்காலில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்திருந்தார். பொதுமக்களின் இறப்புக்குறித்து அரச தரப்பினர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சரியான தகவல்களை தெரிவிக்கவில்லை. 2012ஆம் ஆண்டு அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கெதிரான மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றம் தொடர்பில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் இலங்கைக்கு பாரிய நெருக்கடியை உருவாக்கியபோதும் அடுத்தடுத்த ஆண்டுகளில் இலங்கைக்கு கொடுக்கப்பட்ட அவகாசங்கள், மனித உரிமை ஆணையகத்தின் நெகிழ்வுத்தன்மைகள், சர்வதேச போக்கையும் அபிப்பிராயத்தையும் எவ்வாறு மாற்றியமைத்தது என்பது உலகம் அறியாதவொருவிடயமல்ல. 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் காரணமாக சர்வ தேசத்தின் அபிப்பிராயமும் போக்கும் எவ்வாறு தலைகீழாக மாறியுள்ளதென்பதை அண்மையில் பாராளுமன்றில் ஜனாதிபதி நிகழ்த்திய அரச கொள்கை விளக்கவுரையிலிருந்தும் பிரதமரின் மேதின உரையிலிருந்தும் தெரிந்துகொள்ளலாம். முள்ளிவாய்க்கால் நினைவுநாள் என்பது வருடா வருடம் கொண்டாடப்படும் ஒரு சடங்காக அமையாது உறவுகளை இழந்த மக்களின் உள்ளத்தை ஆற்றுப்படுத்தும் நிகழ்வாகவும் அவர்களின் அரசியல் மற்றும் வாழ்க்கையை ஈடேற்றவும் வழிகாட்டவும் அமைய வேண்டும் என சமத்துவ சமநீதிக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த கருத்து இன்றைய யதார்த்தத்தை தெளிவாகவே விளக்குவதாக அமைகிறது. தமிழ் மக்களின் 30 வருட அகிம்சை போராட்டம் அதனைத் தொடர்ந்து 30 வருடகால ஆயுதப்போராட்டம் என்பனவற்றின் அடுத்த பரிணாமமே இன்றைய உடன் போக்கு போராட்டமாக மாறியுள்ளது. எனவேதான் 60 வருட கால போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்தும்செல்லும் வழியை முள்ளிவாய்க்காலில் ஏற்றப்பட்ட சுடர்கள் மூலம் அவர்கள் தேடுகிறார்கள் என்பதை அரசியல் தலைமைகள் உணர வேண்டும்.
விடுதலைப்போராட்டத்தில் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால அரசியலை அனுமானித்து உணர்வதற்கான ஒரு மையமாகும் என்று கூறப்படுகிறது. இந்த மையத்திலிருந்து புதிய அரசியல் தத்துவத்தையும் முன்னெடுப்புக்களையும் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். வலியுறுத்தி நிற்க வேண்டுமென்பதுதான் இன்றைய தமிழ் மக்களின் தேவையாக இருக்கிறது. கோரிக்கையாகவும் மாறுகிறது. தமிழ் மக்களின் வரலாற்று அனுபவங்களைப் பார்ப்போமாயின் எதிலுமே ஒன்றுபட்ட முடிவுக்கு வருவதென்பது முடியாத காரியமாகவே இருந்துள்ளது. இரண்டு பஞ்சாங்கம் ஏட்டிக்குப் போட்டியான தலைமைகள், பல கட்சிகள், பல இயக்கங்கள், மாறுபட்ட சடங்குகள், முறைகள் வேறுபட்ட போக்குகள் என எல்லாமே ஏட்டிக்குப் போட்டியாகவே இருந்து வந்துள்ளன. அனுபவங்களை பாடங்களாகவோ வரலாற்றை முன்னுதாரணங்களாகவோ கொண்டு நடக்காததன் காரணமாகவே இன்னும் திக்கு தெரியாத காட்டில் நடந்து போய்க்கொண்டிருக்கிறது தமிழர் வரலாறும் வாழ்வியலும். முள்ளிவாய்கால் நினைவேந்தல் என்பது தமிழ் மக்கள் வாழ்வியல் மற்றும் அரசியல் போராட்டத்தில் கறைபடிந்த அத்தியாயம் என்பதைவிட புதிய பாதையை வகுக்கவேண்டிய அரசியல் தத்துவத்தை வகுக்க வேண்டிய ஒரு சந்தியில் நின்றுகொண்டிருக்கிறோம் என்பதை அனைத்து தரப்பினரும் உணரவேண்டும். அதைவிடுத்து முள்ளி நினைவுகளை அஞ்சலிக்கக்கூட மாகாண சபை, பல்கலைக்கழகம், அந்த கட்சி, இந்த கட்சியென தனிவழி தேடிக்கொண்டிருப்பது எமக்கு இன்னும் இழுக்காகவே இருக்கிறது. எதிர்காலத்தில் இத்தகைய அட்டூழியம் நடைபெறாமலிருக்க அடுத்த தலைமுறையை நாம் தயார்ப்படுத்த வேண்டும். இதை செய்ய வேண்டியவர்கள், செய்யக்கூடியவர்கள் அரசியல் தலைமைகளே. ஜப்பானியர்கள் இரண்டாம் உலகப்போரின் வடுக்களை தாங்கிக்கொண்டு எப்படி எழுந்து நின்றார்களோ, அதே போல் பலஸ்தீனியர்கள், தென்னாபிரிக்கர்கள் ஆகியோரை நாம் முன்னுதாரணங்களாக பார்க்க வேண்டும். இன்றைய இலங்கை அரசியலின் தேக்க நிலை தமிழர்களைப்பொறுத்தவரை ஆரோக்கியமானதாக காணப்படவில்லை. தமிழ் மக்களுக்கான தீர்வுக்காக எடுக்கப்பட்டு வரும் எல்லா வகை முயற்சிகளும் குறித்த புள்ளியைவிட்டு நகராமலே நின்று கொண்டிருக்கிறது. நல்லாட்சி அரசாங்கத்தில் காலங்கள் கடத்தப்படுகிறதே தவிர அடைவு மட்டங்களை நோக்கி நகர்த்தப்படுதல் என்பது வெறும் பூஜ்ஜியமாகவே காணப்படுகிறது. இதற்கு நாம் யாரையும் குறைகூறி அழுது கொட்டுவதில் அர்த்தம் இல்லையென்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது. கடந்த காலத்தில் முன்னைய பேரினவாத தலைவர்களாலும் அரசாங்கங்களினாலும் எவ்வாறு ஏமாற்றப்பட்டோமோ அதேபோன்றதொரு அரசியல் காலநிலை தான் இப்பொழுதும் காணப்படுகிறது. தலைவர்களும் ஆட்சியாளர்களும் புதிது புதிதாக வந்தாலும் தமிழ் மக்களின் பிரச்சினையானது இன்னும் ஊறுகாய் நிலையிலேயே காணப்படுகிறது என்பதற்கு ஜனாதிபதியின் கொள்கை விளக்க வியாக்கியானம் சான்றாகவுள்ளது. வடகிழக்கில் மீண்டுமொரு யுத்தம் நிகழாமல் இருக்கவேண்டுமாயின் மக்களின் பொறுமையிழப்பினை நிரந்தரமாக சமரசப்படுத்த வேண்டுமாயின் மக்களின் விருப்பத்தையும் இணக்கப்பாட்டையும் பெற்ற அரசியல் திட்டமொன்றை ஆரம்பிக்க வேண்டுமென பழைய புள்ளிக்கு தீர்வை கொண்டு வந்துள்ளார். அரசாங்கத்தின் கவனம் முழுவதும் இன்னும் பயங்கர வாதத்தை தோற்கடிப்பதிலேயே செலுத்தப்படுகிறது என்பதை ஜனாதிபதி தனது உரையில் இவ்வாறு கூறியுள்ளார். பயங்கரவாதத்தை நாம் தோற்கடித்த போதிலும் அவர்களின் கொள்கையினை தோல்வியுறச் செய்வதற்கு இன்னும் முடியாதுள்ளது. கடந்த 3 வருடங்களாக சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பைப்பெற்று அந்த கொள்கையினை தோல்வியுறச் செய்வதற்கே தான் முயற்சித்து வந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அவருடைய கரிசனை தமிழ் மக்களின் நீண்ட காலப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிகள் இன்னும் முன்னெடுக்கப்படவில்லையென்பதாகும். போர்க்குற்ற விசாரணை மனித உரிமை மீறல் தொடர்பாக ஜனாதிபதியின் நிலைப்பாடும் தீர்மானமும் தெளிவாகவே பல தடவைகள் அவரால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டு நீதி முறையையோ கலப்பு நீதி விசாரணையையோ யான் அனுமதிக்கப் போவதில்லை. இராணுவ வீரர்களை நான் காட்டிக்கொடுக்கப்போவதுமில்லை.தண்டிக்கவும் விடமாட்டேன் என தீவிரமாக கூறிவருவதை கேட்டிருக்கிறோம். ஐ.நா. சபைக்கு கொடுத்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கனதியான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அரசியல் கைதிகள் என யாருமில்லை என நல்லாட்சி தலைவர் கூறிவருவது தொடர்பில் நாம் இன்னும் வாழாது இருக்கிறோம். இத்தகைய நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றலானது தமிழ் மக்களுக்கான புதிய விதியை வகுக்க வேண்டிய தேவையை உணர்த்தி நிற்கின்றதென்பதை நேற்றைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்த்தியிருக்கிறது. எதிர்காலத்தின் விதியை நோக்கி தமிழ் மக்கள் பயணிக்க வேண்டுமாயின் ஒன்றுபடுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
Post a Comment