அரசியல் கைதிகள்:படையினரை விடுவிக்க ஆலோசனை!
தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது போன்று தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவ படைகளை சேர்ந்த சிங்கள கைதிகளையும் பொது மன்னிப்பில் விடுவிக்க வேண்டுமென அரச அமைச்சரான மனோகணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிந்து சுமார் பத்து ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் அரசியல் நோக்கங்களுக்காக வன்முறையில் ஈடுபட்டு, இன்று தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பான மனிதாபிமான பிரச்சினை இன்னும் முடிவில்லாமல் இருக்கிறது. இதை எப்படி தீர்ப்பது என தானும், அரசில் உள்ள ஒரு சிங்கள தேசியவாத அமைச்சர் ஒருவரும் கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று முடிந்துப்போன விடுதலை புலிகள், சிங்கள இராணுவம் ஆகியவற்றுக்கு இடையிலான யுத்த நடவடிக்கைகளை அடிப்படையாக கொண்டு இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த தமிழ்-சிங்கள இழுபறி வரலாறு தொடரப்போகிறது? எத்தனை நாட்களுக்கு இதை வைத்துக்கொண்டு தெற்கிலும், வடக்கிலும் கட்சி அரசியல் செய்யப்போகிறோம்? என்ற கேள்விகளுக்கான பதில்களை தேடுவதே எமது நோக்கமாகும்.
பதில் தேட முடியுமானால் தேடுவோம். இல்லாவிட்டால் விட்டு விடுவோம். ஆனால், இது தொடர்பான ஒரு ஆரோக்கியமான பக்க சார்பற்ற கலந்துரையாடலை ஆரம்பிக்க வேண்டும் என்பது இதற்குள் எனது நோக்கம்.
சிங்கள தேசியவாத அமைச்சரான எனது நண்பர், என்னிடம் வந்து இப்படி சொன்னார்.
1) யுத்த களத்திலிருந்து சுமார் 12,000 தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அங்கத்தவர்கள் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு வழங்கப்பட்டு வீடு திரும்பி தம் சொந்த ஊர்களில் வாழ்கின்றார்கள்.
2) தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி தலைவர்கள், பிரமுகர்கள் பலர் விடுவிக்கப்பட்டு இன்று நாட்டிலே சுதந்திரமாக வாழ்கின்றார்கள்.
3) தென்னிலங்கை ஜேவிபி போராளி தலைவர்கள் பலர் பொது மன்னிப்புடன் விடுவிக்கப்பட்டு, இன்று பகிரங்க அரசியலிலும், சிலர் பாராளுமன்றத்திலும் இருக்கின்றார்கள்.
மேற்சொன்ன உண்மைகளை பின்னணியாக கொண்டு, தீர்வு யோசனைகளாக்
1) தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளி தமிழ் அரசியல் கைதிகள்
2) தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவ படைகளை சேர்ந்த சிங்கள கைதிகள்
ஆகியோரை பொது மன்னிப்பில் விடுவிக்க வேண்டும்.
இதன்மூலம், இந்த கைதிகள் வீடு திரும்புவார்கள். இவர்களுடன் சேர்த்து, இன்று புனர்வாழ்வு பெற்றும், பெறாமலும் நாட்டில் ஆங்காங்கே “எதிர்காலத்தில் ஒருநாள் கைதாகும் நிலைமை ஏற்படுமோ” என்ற சந்தேகத்துடன் வாழும் அனைவரும்கூட அதிகாரபூர்வமாக சட்ட விடுப்பு பெறுவார்கள்.
எனது நண்பரான சிங்கள தேசியவாத அமைச்சர், இந்த தீர்வு யோசனைகளை, “இவ்வாரம் யுத்தம் முடிந்த நினைவு நாளான 18ம் திகதி பகிரங்கமாக அறிவிக்கிறேன்; அறிவிக்கவா?” என்று கேட்டார்.
“அறிவியுங்கள்; இதன்மூலம் முடிவில்லாத இந்த மனிதாபிமான பிரச்சினை பற்றிய ஒரு தேசிய விவாதத்தை ஆரம்பிப்போம்; எங்கேயாவது இதுபற்றிய கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட வேண்டுமல்லவா?; நான் இந்த மனிதாபிமான பிரச்சினையை வைத்து அரசியல் செய்பவனல்ல் யாரும் இல்லாமல், இந்த பிரச்சினை பற்றி எரிந்த போது தெருவில் நின்று போராடியவன்; இன்றும் யாரும் பார்க்காத புதிய கோணத்தில் இதை பார்க்க விரும்புகிறேன்; அவ்வளவே” என்று நான் அவருக்கு சொன்னேனென மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
Post a Comment