Header Ads

test

மில்லியன் கணக்கில் ஏன் செலவிடுகிறார் கோத்தா? – மங்கள கேள்வி


தம்மைக் கைது செய்வதைத் தடுப்பதற்கான நீதிமன்றத்தின் உத்தரவைப் பெறுவதற்காக கோத்தாபய ராஜபக்ச எதற்காக சட்டவாளர்களுக்கு மில்லியன் கணக்கான ரூபாவைச் செலவிடுகிறார் என்று சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார். ‘கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக நீதிமன்றங்களில் பல வழக்குகள் உள்ளன. தாம் தவறு செய்யவில்லை என்றால், நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும். கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு முறையற்ற விதத்தில் இராஜதந்திரக் கடவுச்சீட்டை பெற்றுக் கொடுத்தமை, நேசன் இதழின் ஆசிரியர் கீத் நொயார் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை, ரிவிர ஆசிரியர் உபாலி தென்னக்கோன் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் தாக்கப்பட்டமை,சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க இராணுவப் புலனாய்வு அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டமை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை, வெலிக்கடைச் சிறையில் 26 கைதிகள் படுகொலை செய்யப்பட்டமை, வெலிவேரியவில் ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமை, என்று கோத்தாபய ராஜபக்ச பல வழக்குகளில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ளார். நாங்கள் ஒன்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறவில்லை. இந்த இராணுவ அதிகாரிகளுக்கு மக்களின் மீது எந்த விரோதமும் இல்லை. அவர்கள் கட்டளைகளை பிற்பற்றி வந்தவர்கள். இவற்றுக்குப் பின்னால் கோத்தாபய ராஜபக்சவே இருந்தார் என்று என்னால் உறுதியாக கூற முடியும். அவன்ட் கார்ட் பேரம், ராஜபக்ச நினைவிடம், மிக் பேரம் போன்ற ஊழல்களிலும் தொடர்புடையவர். பிரித்தானியாவில் உள்ள நிறுவனம் ஒன்றின் மூலம், மிக் பேரத்தின் மூலம், 7.8 மில்லியன் டொலரை திருடியவர். அவரது பெற்றோர் நினைவுகூரப்பட வேண்டியவர்கள். ஆனால், திருடப்பட்ட பணத்தில் அல்ல. அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் தமது பிள்ளையில் இந்தச் செயலுக்காக மிகவும் அதிர்ச்சியடைந்திருப்பார்கள். கடந்த அதிபர் தேர்தல் காலகட்டத்தில், நான் சென்று தம்மைச் சந்தித்தாக கோத்தாபய ராஜபக்ச கூறியிருக்கிறார். அது பொய். 2014 ஒக்ரோபரில், கோத்தாபய உள்ளிட்ட ராஜபக்சக்கள், என்னைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டனர். அவர்களுக்குத் தேவையிருந்தால் என்னை வந்து சந்திக்கலாம் என்று கூறினேன். மகிந்த ராஜபக்ச எனது வீட்டுக்கு வந்தார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments