அரசு தீர்வை தருமாம்:மனோவின் நம்பிக்கை!
இந்த அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு என இலங்கையின் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் அரச கரும மொழிகள் அமைச்சர் மணோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது. நாளை, நாளை மறுநாள் அல்லது அடுத்த வாரம் அல்லது அடுத்த வருடம் என்றாவது ஒருநாள் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.
இந்த நாட்டின் தேசிய இனப் பிரச்சினை தீரும் என்று நம்புகின்றேன்.அந்தக் கனவு என்றாவது ஒரு நாள் நனவாகும். வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு போர்க்குற்ற விசாரணை நடாத்த தேவையில்லை என நான் ஒரு போதும் கூறவில்லை. எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
வேண்டு மென்று சிலரால் திரிவுபடுத்தி மக்கள் முன்னிலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பிரதேசத்துக்கு பிரதேசம் மொழிக்கு மொழி மாறி மாறி கருத்துக்களை பேசுபவன் நானல்ல.
இலங்கையின் உள்நாட்டு பிரச்சினை நாட்டுக்கு வெளியே சென்று பேசப்படுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட நடைமுறையில் அது நிகழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னேன்.
1988, 1989ம் ஆண்டுகளில் தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்ட போது அந்தப்பிரச்சினைக்கெதிராக அந்த கொலைகளுக்கெதிராக முதன் முறையாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஜெனீவா வரை சென்றவர்கள் வேறு யாருமல்ல மஹிந்த ராஜபக்ச, வாசுதேவ நாணயக்கார போன்றோராகும்.
அவர்கள் சென்றதை சரியானது என்று அன்று நான் சொன்னேன்.உள்நாட்டில் தீர்வில்லை நீதியில்லை. நியாயமில்லை. நிம்மதியில்லை. என்றும் அரசாங்கத்தின் நம்பிக்கை இழந்து தான் வெளிநாட்டுக்கு அந்தப்பிரச்சினைகளை கொண்டு சென்றனர்.
இதே போல இன்றும் தமிழ் மக்களுக்கு இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால்தான் ஐக்கிய நாடுகள் சபை வரை சென்றுள்ளனர்.
ஆகவே ஐக்கிய நாடுகள் சபைக்கு செல்ல வேண்டாம், அமெரிக்கா செல்ல வேண்டாம், ஐரோப்பா செல்ல வேண்டாம் என்று சொல்வார்களானால் உள் நாட்டில் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
நீதியையும் நியாயத்தை தரவேண்டும் என்றே நான் கூறியிருந்தேன். இதை எடுத்து திரிவு படுத்தி வெட்டிக்குத்தி மக்களுக்கு தவறாக கொண்டு சென்றார்கள்.
இந்த நாட்டு தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரை முதன் முதலாவது இலங்கைக்கு அழைத்து வந்தது நான்தான்.
நவநீதம் பிள்ளை அல்ஹஸைன் எல்லாம் யுத்தம் முடிந்ததன் பின்னர் தான் வந்தார்கள்.
ஆனால் 2006ம் ஆண்டு அன்றைய மனித உரிமை ஆணையாளர் லூயி சாபர் அவர்களை அழைத்து வந்தேன்.
சாதரண ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டே நான் அழுத்தம் கொடுத்து அவரை அழைத்து வந்தேன்.
வட கிழக்கு இணைக்கப்படல் வேண்டும் என்பதே எனது கருத்தாகும். அந்த இணைப்புக்காக கிழக்கு மாகாணத்தில் வாழக் கூடிய மக்கள் ஆதரவளிக்க வேண்டும். ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
வட கிழக்கு இணைப்புக்கு கிழக்கு மாகாணத்திலிருக்கிருக்கின்ற மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கின்றதா இல்லையா என்பதை பார்க்க வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் சமமாக வாழ்கின்றார்கள் அதற்காக ஒரு வாக்கெடுப்பு நடாத்தப்படல் வேண்டும்.
தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் அரச கரும மொழிகள் அமைச்சர் என்ற வகையிலே இன பதற்றம் இனச் சிக்கல் பிரிவினையை ஏற்படுத்துவதற்கான அடிப்படைக்காரணங்கள் தோண்றக் கூடாது என விரும்புகின்றேன்.
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் எனது பயணத்தை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.
இந்த நாடு பல்லிண பண் மொழி பல சமயங்கள் பேசப்படும் கடைப்பிடிக்கப்படும் பல இனங்கள் வாழும் நாடாகும். பண்முகத்தன்மை என்பது எமது எதிர்காலமாகும். ஆகவே எதிர் காலத்தை சரியான முறையில் அறிந்து கொண்டு புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டிய கடமைப்பாடு எமக்கிருக்கின்றது.
பெரும்பான்மை மக்களுக்கு கீழ் படிந்துதான் தமிழ் முஸ்லிம் கத்தோலிக்க மக்கள் நடந்து கொள்ள வேண்டுமென நினைக்கின்றார்கள். அதற்கு இடமளிக்க முடியாது.
நாட்டில் ஐக்கியம் வேண்டும் ஒற்றுமை வேண்டும். என்பதற்காக எங்களது தன்மானத்தையும் சுய மரியாதையையும் ஒரு போதும் விட்டுக் கொடுக்க முடியாது.
தன்மானத்தையும் சுய மரியாதையையும் விலை பேசி விற்று விற்றுத்தான் இந்த நாட்டில் ஐக்கியம் வரவேண்டும் என்றால் அந்த ஐக்கியம் எமக்கு தேவையில்லை என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
Post a Comment