திரைத்துறையினர் முன்னெடுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!
மே 18 இன அழிப்பின் நினைவு நாள். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ஒருங்கிணைப்பில் உலக வல்லரசுகளின் உதவியோடு, முள்ளிவாய்க்காலில் சிங்களப் பேரினவாத அரசு ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த சொல்லெண்ணாத் துயரம் நடந்து முடிந்து, ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்டன.
ஆண்டுகள் உருண்டோடினாலும், மனக்காயங்களின் வடுக்கள் மாறாது நினைவூட்டுகிறது. இலட்சக்கணக்கான பொதுமக்களும், குழந்தைகளும், பெண்களும் என கொத்துக் கொத்தாக மடிந்ததை வரலாற்றுத் தடத்தில் மறக்க இயலாது.
உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சில் முள்ளிவாய்க்கால் எனும் முள் தைக்கும் சொல் எழுப்பும் வலி ஆறாத காயமாய் ஆண்டுதோறும் நம் கண்முன்னே வந்துபோகிறது!
இன அழிப்பு நடந்தேறி ஒன்பது ஆண்டுகள் முடிந்தும், அடுத்தடுத்த சிங்கள அரசின் எதேச்சதிகாரங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.
ஆயினும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் இனப்படுகொலைக்கான நீதிப் போராட்டத்தை தொடர்ந்து கையில் ஏந்தி நிற்கிறார்கள். ஐ.நா. அவையில் தமிழரின் நீதிக்குரல் தொடர்ந்து ஒலிக்கிறது. தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை மக்களின் அறப்போராட்டம் தொடரும்.
ஒவ்வொரும் ஆண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான மே 18 நம்மை உருகச் செய்கிறது. நாம் நமது இலட்சியக் கனவை விடாது போராடுவதே முள்ளிவாய்க்கால் ஈகியர்க்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்!
அந்த வகையில்,
2018 மே – 18 இல் சென்னை- சாலிகிராமத்தில் முக்குலத்தோர் புலிப்படை இயக்கம் ஒருங்கிணைப்பில் எம்.எல்.ஏ., கருணாஸ் அவர்களின் தலைமையில் “ முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்” நிகழ்வு பெரும் எழுச்சியாக நடைபெற உள்ளது. இதில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நடிகர் விஷால் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களும், இயக்குநர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும், தமிழ்த்திரைப்பட உணர்வாளர்களும் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்த உள்ளார்கள்.
“உயிரை உருகி இனத்திற்காக உயீர்த்தோர்க்கு நாம் மனம் உருகி அவர்களின் நினைவேந்துவோம்!
Post a Comment