விமான நிலையங்களில் மக்களுக்கு தொந்தரவு தரும் வகையில் பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் தரகர்களுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அல்லது 10 மாத சிறைத்தண்டனை வழங்கும் விதத்தில் விமான சேவைகள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. சிலபோது இந்த இரண்டு தண்டனைகளும் ஒரே நேரத்தில் அமுல்படுத்தும் விதத்திலும் இத்திருத்தச் சட்டம் அமையப்பெற்றுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நேற்று பாராளுமன்றத்தில் இத்திருத்தச் சட்ட மூலத்தை முன்வைத்து உரையாற்றுகையில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இவ்வாறு கூறியுள்ளார். இச்சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. பல்வேறு விதமான தரகர்கள் விமானப் பயணிகளின் உறவினர்கள் எனத் தெரிவித்து விமானநிலையத்துக்குள் காணப்படுகின்றனர். இவர்கள் பல்வேறு மோசடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஒருவகையில் கூறுவதானால், விமானநிலையத்தை ஆக்கிரமித்துள்ள ஒழுங்கமைக்கப்பட்டுள்ள குழுவினர் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இவர்களது நடவடிக்கைகள் விமானநிலைய நிருவாகத்துக்கு பெரும் பாதிப்பாகவுள்ளது. சில தரகர்கள் விமான நிலையத்தில் குற்றச்செயல்கள் பலவற்றிலும் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
Post a Comment