தூத்துக்குடி அவலத்திற்கு வடகிழக்கில் கண்டனம்!
தமிழகத்தின் தூத்துக்குடியில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து எதிர்ப்புகப்போராட்டமும்,படுகொலையானவர்களிற்கான அஞ்சலி நிகழ்வும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டினில் யாழ்ப்பாணம்,திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் இன்று சனிக்கிழமை நடத்தப்பட்டுள்ளது.
தமிழகம், தூத்துக்குடியில் சூழலை மாசுபடுத்தும் வகையில் செயற்பட்டுவந்த வேதந்ரா ஸ்ரெர்லயிட் (நிறுவனத்தின் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதனை சுட்டிக்காட்டி அந்த ஆலையை மூடுமாறுகோரி அமைதிவழியில் போராடி வந்த தமிழக மக்கள் மீது கடந்த தமிழக காவற்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்திருந்தனர். குறிப்பாகப்போராட்டங்களை ஒழுங்கு செய்த போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மீது காவற்துறையினர் குறிசூட்டுத்தாக்குதல் நடத்தியதன் மூலம் பதின்மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.பலர் பற்றிய தகவல்கள் இல்லாதுள்ளது.இன்னும் பலர் காணாமல் போயிருப்பதுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
ஜனநாயக வழியிலான போராட்டத்தை துப்பாக்கி முனையில் நசுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கண்டனப் போராட்டமும், கொல்லப்பட்ட தமிழக உறவுகளுக்கான அஞ்சலி நிகழ்வும் இன்று நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் மத்திய பேரூந்து நிலையத்தின் முன்னாலும் திருமலையிலும் மற்றும் மட்டக்களப்பிலும் நடைபெற்ற கண்டனப் போராட்டங்களிலும் நினைவஞ்சலி நிகழ்வுகளிலும் நூற்றுக்கணக்கான கட்சி அங்கத்தவர்கள்,மத தலைவர்கள்,பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் ,மதகுருமார் என பலரும் கலந்து கொண்டு தமது ஆதரவை பதிவு செய்திருந்தனர்.
Post a Comment