இந்திய வணிகரிடம் 20 மில்லியன் ரூபா இலஞ்சப் பணம் பெற்றுக் கொண்ட போது கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்ட, இரண்டு மூத்த அரச அதிகாரிகளையும், உடனடியாக பணியில் இருந்து இடைநிறுத்துமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் செயலக தலைமை அதிகாரி மகாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபன தலைவர் திசநாயக்க ஆகியோர் இந்திய வணிகர் ஒருவரிடம் 20 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற போது நேற்று கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, இவர்கள் இருவரையும் உடனடியாக பணியில் இருந்து இடைநிறுத்துமாறு சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார் என்று அதிபரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. சிறிலங்கா அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சுதந்திரமாகச் செயற்படுகிறது என்பதை இந்தக் கைது உறுதிப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சிறிலங்கா அதிபர் செயலக தலைமை அதிகாரி மகாநாம, சிறிலங்கா அதிபரின் செயலருக்கு அடுத்த நிலையில் அதிகரம் மிக்க அதிகாரியாவார்.
Post a Comment