வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தென்னிலங்கை மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். “வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் அண்மையில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. அதை தமிழ் மக்கள் தினம் என்று செய்திருந்தார்கள். இது தென்னிலங்கையில் உள்ள மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை இராணுத்தினருக்கோ பாதுகாப்பு படையினருக்கோ சிங்கள மக்களுக்கோ பல தவறான எண்ணப்பாடுகளை தோற்றுவிக்கும் செயலாகவே அமைந்துள்ளது. ஒருகாலத்தில் வடபுலத்தில் வாழ்ந்த சிங்கள, முஸ்லிம் மக்கள் 24 மணித்தியாலத்திற்குள் வெளியேற்றப்பட்டார்கள். இன்று அந்த பகுதியில் தற்போது வாழ்ந்து வரும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள்.இதற்கு முப்படையினரே காரணம் என்பதை யாவரும் அறிவர். இராணுவம் அகற்றப்படவேண்டும் என்பதே விக்கினேஸ்வரனின் பிரச்னையாக உள்ளது. யுத்த காலப்பகுதியில் சி.வி. விக்னேஸ்வரன் யுத்த பிரதேசத்தில் காலடி எடுத்து கூட வைக்கவில்லை. அப்பாவி மக்களுக்காக ஒரு வசனம் கூட பேசவில்லை. இந்நிலையில், முதலமைச்சர் ஆழமாக சிந்திக்க வேண்டும். அல்லாது விடில் மீண்டும் ஒரு இருண்ட யுகத்திற்கு நாம் பயணம் செய்யவேண்டிய நிலை ஏற்படும். வட மாகாணசபை மூலம் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதன் மூலம் அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம். ஆனால் எதையுமே செய்யாத நிலைமை எதிர்காலத்தில் அந்த மக்கள் இன்னும் பல பிரச்னைகளிற்கு முகம்கொடுக்கும் நிலமையையே ஏற்படுத்தும்” என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment