Header Ads

test

நினைவேந்தல்:மாணவர்கள் மூலம் தடை முயற்சி!


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் மீண்டும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரை சுமந்திரன் தரப்பு கையாள்வது உறுதியாகியிருக்கின்றது.சுமந்திரனின் முகவராக செயற்படும் மாணவர் ஒருவரது வழிநடத்தலில் மாணவர் ஒன்றியம் செயற்படுவது நிச்சயமாகியுள்ளது.

தொடர்ச்சியாக மாணவர்களை தூண்டுவதன் மூலம் குழப்பங்களை தோற்றுவித்து நிகழ்வை நடத்தவிடாது தடை உத்தரவை பெற முயற்சிகள் தொடர்வதாக சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே புலம்பெயர்புலிகளது பெயரில் மாணவர் ஒன்றியத்தை கையாள்வதாக ஊடகங்களிற்கு செய்திகளை கசியவிட்டவாறு மறுபுறம் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிகள் தொடர்வதும் தெரியவந்துள்ளது.
இதனிடையே மாணவர்கள் தரப்பில் நியாமான நிலைப்பாட்டை பேணும் மாணவ பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்த சிவில் தரப்புக்கள் முற்பட்டுள்ளன.நினைவேந்தல் தொடர்பான கலந்துரையாடலொன்றின் தொடர்ச்சியாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


இதனிடையே வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நினைவேந்தலில் பொதுச்சுடர் தனித்து முதலமைச்சரால் ஏற்றப்படுவதை விடுத்து அனைவரும் ஒரே நேரத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.அத்துடன் நினைவேந்தல் தொடர்பான அறிக்கையொன்றை முதலமைச்சர் அன்று வெளியிடுவதெனவும் அனைத்து கட்சிகளதும் ஏகமனதான முடிவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இக்கலந்துரையாடலில் மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்னரும் முதலமைச்சர் தலைமையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதன்போது, முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை மாகாண சபையின் ஏற்பாட்டில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. அத்தீர்மானத்துக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எதிர்ப்பு தெரிவித்தது.இதனையடுத்து இன்று இடம்பெறும் கலந்துரையாடலில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை கலந்து கொள்ளுமாறு முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.எனினும், தற்போது ஒன்றிய பிரதிநிதிகள் கலந்துரையாடலில் கலந்து கொள்ளவில்லை.

No comments