ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவின் விளக்கமறியலை மே 30 ஆம் நாள் வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று இந்த வழக்கு கல்கிசை நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது சட்டமா அதிபர் தரப்பில் முன்னிலையான அரச சட்டவாளர், கீதர் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் எண்ணத்துடன் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இருப்பதாகத் தெரிவித்தார். ‘கீத் நொயார் கடத்தப்பட்டதும், நேசன் இதழின் ஆசிரியர் லலித் அழககோன், அப்போது அமைச்சராக இருந்த கரு ஜெயசூரியவின் உதவி கோரி அவரை அழைத்திருந்தார். இந்தக் கடத்தல் தொடர்பாக, சிறிலங்கா அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சவுக்கு முதல் முதலில் தெரியப்படுத்தியவர் கரு ஜெயசூரிய தான். அத்துடன், இந்த விடயத்தில் அப்போது இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு இருந்த தொடர்புகள் குறித்தும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர்” என்றும் தெரிவித்தார். அத்துடன், தொலைபேசி இலக்கங்கள் மற்றும் அழைப்புகள் தொடர்பான அறிக்கைகளையும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். நேற்றைய விசாரணையின் போது, எதிரிகள் தரப்பில் முன்னிலையான சட்டவாளர், தமது கட்சிக்காரருக்கு பிணை வழங்க வேண்டும் என்று கோரினார். எனினும், விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்ட நீதிவான், சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க மறுத்ததுடன், சாட்சியங்களின் அடிப்படையில் அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்யுமாறும் உத்தரவிட்டார்.
Post a Comment