Header Ads

test

கறுப்பு உடையுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் நின்றதே பல்கலைக்கழக மாணவர்களின் சாதனை! - சிவாஜிலிங்கம்


யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் நடந்து கொண்ட விதம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கறுப்பு உடையை போட்டுக் கொண்டு நினைவேந்தலில் கலந்து கொண்டது மட்டுமே மாணவர்களின் சாதனை எனவும் அவர் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். “அரசியல்வாதிகள் வரவேண்டாம் என கூறுவதற்கும் ஒரு முறை இருக்கின்றது. அந்த முறையை பல்கலைக்கழக மாணவர்கள் தவறவிட்டுள்ளனர். மேலும் அரசியல்வாதிகளை நிராகரிக்க வேண்டும் என்றால் அரசியல்வாதிகள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல. இந்த மக்களிடமிருந்து வாக்குகளை பெற்ற மக்கள் பிரதிநிதிகள். அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கௌரவம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு கொடுக்கப்படவில்லை. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தனியே பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்படவில்லை. வட மாகாண சபை உறுப்பினர்கள் 36 பேர் தலா 7 ஆயிரம் ரூபாய் வீதம் பணம் வழங்கினார்கள். யாழ். வர்த்தக சங்கம் ஈகை சுடர்களுக்கான துணியை வழங்கியிருந்ததது. அதேபோல் ஈகை சுடர்களுக்கான கம்பிகளை முன்னாள் போராளிகள் வழங்கியிருந்தார்கள். அவ்வாறு பலர் பல்வேறு ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்த நிலையில் சகலருக்குமான கௌரவம் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும்.மேலும் நினைவேந்தல் ஒழுங்கமைப்பிலும் பாரிய தவறுகள் நடந்துள்ளன. குறிப்பாக பிரதான சுடர் ஏற்றப்படும்போது அங்கே முறையான அறிவித்தல்கள் வழங்கப்படவில்லை. உயிரிழந்தவர்களுக்கான மௌன அஞ்சலி செலுத்தப்படவில்லை. ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கான ஒழுங்குகள் செய்யப்படவில்லை. இந்த பிழைகள் எல்லாம் திட்டமிட்டு செய்யப்பட்டனவா? என நாங்கள் கேள்வி எழுப்ப விரும்புகிறோம். மேலும் முள்ளிவாய்க்காலில் முல்லைத்தீவு மக்கள் மட்டும் சாகவில்லை. வடகிழக்கு மற்றும் மலையக மக்களும் கொல்லப்பட்டார்கள். ஆகவே வடகிழக்கு மற்றும் மலையகம் சார்ந்து 9 பேர் முதலமைச்சருடன் இணைந்து ஈகை சுடரை ஏற்றவேண்டும் என நாங்கள் கேட்டிருந்தோம். அது நிராகரிக்கப்பட்டு கிழக்கு மாகாணம் சார்பில் யாருமே இல்லை. கிழக்கில் இருந்தும் மலையகத்தில் இருந்தும் எங்களை கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்த சந்தர்ப்பதில் நான் கிழக்கு மாகாண மக்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.எனவே கறுப்பு உடை அணிந்து கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் நின்றதே பல்கலைக்கழக மாணவர்கள் செய்த சாதனையாகும். பல்கலைக்கழக மாணவர்கள் கண்ணாடிக்கு முன்னால் நின்று தம்முடைய செயற்பாடுகளை ஒரு தடவை சீர்தூக்கி பார்க்கவேண்டும். மேலும் இம்முறை பல்கலைக்கழக மாணவர்கள் செய்யவேண்டும் என கேட்டார்கள்.சரி அடுத்தமுறை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேறு பீடத்திடம் செல்கிறது. அந்த பீடத்தில் பெரும்பாலானவர்கள் சிங்கள மாணவர்கள் அப்போதும் இவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்ய இயலுமா? எனவும் சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினார். மேலும், தென்னிலங்கை ஊடகங்கள் எங்களோடு தொடர்பு கொள்ளாமல், சிங்கள மக்கள் மத்தியில் எம்மை குறித்தும், ஒட்டுமொத்தமாக வடமாகாணசபை குறித்தும் தவறான எண்ணங்களை விதைக்கும் வகையில் அபாண்டமான பொய் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழீழ விடுதலை புலிகள் போர் காலத்தில் கைவிட்டு சென்ற பொருட்களை வடமாகாண சபையிடம் ஒப்படைக்ககோரி வட மாகாணசபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. அவ்வாறான கருத்தை நான் கூறவில்லை. அவ்வாறான செய்தி தொடர்பாக அந்த ஊடகங்கள் என்னிடம் கேட்கவும் இல்லை. இந்நிலையில் நாம் வழங்கிய மறுப்பையும் அவர்கள் நிராகரித்துள்ளார்கள். இது திட்டமிட்டு சிங்கள மக்கள் மத்தியில் எங்கள் தொடர்பான தவறான எண்ணத்தை வளர்க்கும் நோக்கில் சிங்கள ஊடகங்கள் செயற்படுவதை காட்டுகின்றது. தமிழீழ விடுதலை புலிகளின் சொத்துக்களை ஆள் ஆளுக்கு கொள்ளையடித்து விட்டார்கள். இப்போது என்ன இருக்கிறது? மேலும் புலிகளின் சொத்துக்களை நாங்கள் எதற்காக கேட்கப்போகிறோம்? கேட்டாலும் கொடுப்பார்களா? இவ்வாறான நிலையில் ஊடகங்கள் பொய்யை எழுதிக் கொண்டிருக்கின்றன.மேலும் முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் நடைபெற்ற இடத்தில் காணப்படும் போரின் எச்சங்களை சேகரித்து அடுத்த தலைமுறைக்கு காட்டவேண்டும் என்றே நாங்கள் பேசியிருந்தோம்” என சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளார்.

No comments