இழப்பீட்டுக்கான பணியகத்தை உருவாக்குவதற்கு, அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட இழப்பீட்டுச் சட்ட வரைவை வரையும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்மொழியப்படும் இந்தச் சட்டத்தின் மூலம், மூன்று பத்தாண்டு காலம் வடக்கில் நடந்த போரினால், பாதிக்கப்பட்ட, சிறிலங்கா படையினர், காவல்துறையினர், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களும், அவர்கள் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டில் எந்தப் பகுதியில் வாழ்ந்தவர்களானாலும், தமது பாதிப்புகளுக்கு இழப்பீட்டைக் கோர முடியும். இந்த சட்டவரைவுக்கு சிறிலங்கா அமைச்சரவை கடந்த மார்ச் 6ஆம் நாள் அங்கீகாரம் அளித்தது. இந்த வரைவை அடிப்படையாகக் கொண்டு, சட்டமூலத்தை வரையுமாறு அரச சட்டவரைஞருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இழப்பீட்டுக்கான பணியகம் கொழும்பில் அமையும் என்று, சட்டவரைவில், முன்மொழியப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூறக் கூடிய ஐந்து பேர் கொண்ட உறுப்பினர்கள், இந்தப் பணியகத்துக்கு, அரசியலமைப்புச் சபையின் பரிந்துரையின் பேரில் சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்படுவார்கள். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு ஏற்ற வகையில், தேவையைப் பொறுத்து, பிராந்திய, தற்காலிக, நடமாடும் பணியகங்களையும் அமைக்கும் அதிகாரமும் வழங்கப்படும்.
Post a Comment