முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தடை:மிரட்டினார் ஒஸ்டின்!
யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாணவர் ஒன்றியமென்பவை பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சிலை ஒன்றை அமைப்பதை கைவிடுமாறு இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி ஒஸ்டின் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்.
2009 ல் இன அழிப்பு போரில் உயிரிழந்த தமிழர்கள் நினைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படவிருந்த நினைவு தூபி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
நினைவு தூபி அமைப்பு விவகாரத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் உயர் கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு,தற்போது ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றின் அழுத்தத்தின் கீழ் வந்துள்ளது.
இதற்கிடையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோர் யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தால் முடிவு செய்யப்பட வேண்டிய விடயத்தில் தெற்கு அதிகார தரப்பின் தலையீட்டிற்கு தமது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்கள் திட்டமிட்டபடி நினைவு தூபி அமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால், மே 18 ம் திகதி சிங்கள இராணுவத்தின் வெற்றியைக் கௌரவிப்பதற்காக தெற்கில் உள்ள பல்கலைக் கழக மாணவர்களை தூண்டிவிடப்போவதாக ஒஸ்டின் பெர்னாண்டோ சவால் விடுத்துள்ளார்.
ஒரு மூத்த அதிகாரியான ஒஸ்டின் பெர்னாண்டோ நீண்ட காலமாக வெளியுறவு கொள்கை மற்றும் என்.ஜி.ஓ. விவகாரங்களில் தொடர்பு கொண்டார், நீண்ட காலமாக இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுடன் தொடர்பு கொண்டார்.அத்துடன் அவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஒரு ஆலோசகராக பணியாற்றியுள்ளார், ஆனால் 2015 முதல் சிறிசேனவுடன் தனது பக்கங்களை மாற்றினார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
Post a Comment