Header Ads

test

போராட்டம் வெற்றி:இறங்கிவந்தது இலங்கை அரசு!


இரணைதீவில் நிலவிடுவிப்புக்காக போராடும் மக்கள் குரல் சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில் இலங்கை அரசு இறங்கிவந்துள்ளது.அவ்வகையில்  தங்களின் சொந்த காணிகளில் மீள்குடியேறுவதற்கு அப்பகுதி மக்களிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என  இலங்கையின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ் என்பவர் அறிவித்துள்ளார்.

மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.ராஜபக்ஸ, இலங்கையின்  கடற்படை தளபதி  ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க தலைமையிலான குழுவினர்  இன்று செவ்வாய்கிழமை இரணைதீவுக்கு விஜயம் செய்திருந்தனர். 

இவர்களுடன்  கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், பூநகரி பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்ணேந்திரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் ஆகியோரும் சென்றிருந்தனர்.


ஏற்கனவே மக்களின் காணிகள்  அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 190 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படுவார்கள். மேலும் இரணைதீவில் கடற்படையினர் எட்டு ஏக்கர் நிலத்தில் தொடர்ந்தும் இருப்பார்கள் என்றும்  இவர்கள் நாட்டின் பாதுகாப்பு, போதை  பொருள் கடத்தலை கட்டுப்படுத்தல், இரணைதீவு மக்களின் பாதுகாப்பு என்பவற்றை கருத்தில் எடுத்து தொடர்ந்தும் அங்கிருப்பார்கள்" எனவும் அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ் தெரிவித்தார்.

இதேவேளை நேற்று வடக்கு முதலமைச்சர் நேரடியாக இரணைதீவு பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments