Header Ads

test

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு மனித நாகரீகத்தில் ஏற்படுத்தப்பட்ட இன்னுமொரு வடு!


முள்ளிவாய்க்கால் இன அழிப்பு மனித நாகரீகத்தில் ஏற்படுத்தப்பட்ட இன்னுமொரு வடு என்றே உலக வரலாற்றில் பதியப்படல் வேண்டும். மனிதம் காக்கும், மனித நாகரீகம் காக்கும் சமூக, சமய, அரசியல் அமைப்புகளின் கண்முன்னாலேயே அழிப்பு நிகழ்த்தப்பட்டது மட்டுமல்ல இவ்வமைப்புகளின் பின்னால் உள்ள கொள்ளை முதலாளித்துவத்தின் தூண்டுதலிலும், வழிநடத்துதலிலுமே அரங்கேற்றப்பட்டது என்பதுவே உண்மை. இவ்வழிவிற்கு காரணமானவர்கள் மஹிந்த ராஜபக்‌ஷவும் அவரது குடும்பமும் மட்டுமல்ல. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும், அனைத்து சமய அமைப்புகளும் சர்வதேசமுமே பொறுப்பேற்கவேண்டும். இலங்கையில் தமிழரின் அரசியல் வரலாற்றை எழுதும்போது முள்ளிவாய்க்காலுக்கு முன் முள்ளிவாய்க்காலுக்குப் பின் என்று எழுதப்படல்வேண்டும். சிங்கள பெளத்த மேலாண்மைவாதம் பெரும்பாலான சிங்கள பௌத்தர்களிடத்தில் மேலோங்கி நிற்பது போல கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ சிங்களவர்களிடத்திலும் சிங்கள ஆதிக்கவாதம் வேரூன்றியுள்ளது. இவர்களின் ஆசியுடனும் வீரியத்துடனான உந்துதலின் மூலமே தரையிலும், கடலிலும், விண்ணிலுமிருந்து பாரிய ஆயுதம் பாவிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கொன்றொழிக்கப்பட்டனர். இவர்களைத் தவிர இஸ்லாமியர்களும் அவர்கள் சார்ந்த சமய அமைப்பும் அமைதி காத்தது. அரசியல் தலைமைகள் அரசியல் அதிகாரங்களைத் தக்கவைத்துக்கொள்ளவும், பதவி சுகங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் மாதாந்தம் அவசரகாலச் சட்டத்திற்கும், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கும் கை உயர்த்தி அனுமதியளித்ததோடு இன அழிப்பிற்கும் ஆதரவளித்தது. அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறை தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஒரு முஸ்லிம் பிரமுகர், “நாங்கள் எப்போதும் சிங்களவர்களோடுதான் இருக்கிறோம். யுத்தத்திற்கு முழுமையாக ஆதரவளித்தோம். ஆனால், எங்களைத் தாக்குகிறார்கள்” என்றார். எனவே, இன அழிப்பிற்கு முஸ்லிம் சமூகமும் துணையாக இருந்தது எனும் குற்றச்சாட்டிலிருந்து அவர்கள் விலகியோட முடியாது. தமிழர் தாயகம், தமிழ் தேசியம், அவைப்பற்றிய அரசியல் உணர்வு, அதற்கான செயற்பாடுகள், விடுதலைச் சிந்தனை எல்லாமே துடைத்தழிக்கப்படல் வேண்டும் எனும் இன மேலாண்மைவாத கருத்தியலோடு ஆயிரக்கணக்கானோரின் உடல், உயிர், உடைமை, தமிழர் நிலவளம் அழிக்கப்பட்டதோடு, உடல் உறுப்புக்களை இழந்தவர்கள், விதவைகளாக்கப்பட்டவர்கள் என்று இன்றும் ஆயிரக்கணக்கானோர் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
ஒரு தொகுதி மக்கள் உளரீதியிலும் ஊனமுற்றவர்களாக்கப்பட்டார்கள், அகதிகளாக்கப்பட்டார்கள், அநாதைகளாக்கப்பட்டார்கள். இராணுவத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் சூறையாடப்பட்டது. காணாமலாக்கப்பட்டோர், அரசியல்கைதிகள் என ஒட்டுமொத்த தமிழ் சமூகமே அழிவினை சந்தித்தது மட்டுமல்ல இதே வேதனை துன்பியலுக்குள் தொடர்ச்சியாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றமையும் அரசியலில் இருந்து மக்களை தூரமாக்கும் அரசியல் செயல்பாடு என்பதோடு தொடரும் இன அழிப்ப என்றுகூட கூறலாம். பாதிக்கப்பட்ட மக்களை தமது அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அலையவிடுவதும், தொடர் வறுமையில் வைத்திருப்பதும், இனவிடுதலை என அலையலையாக திரண்டெழுந்த மக்களை தோல்வியின் மனநிலைக்குள் தள்ளி எழவிடாமல் நீண்ட காலத்திற்கு வைத்திருப்பதும், சொந்த வாழ்க்கையை நொந்து மக்களை விரக்தி நிலையில் நீண்டகாலத்திற்கு வைத்திருப்பதும் இன அழிப்பின் தொடர்ச்சி எனலாம். இந்நிலையில், தமிழர் தாயக விடுதலை எனப் போராடிய தமிழ் சமூகம் இன்று இராணுவம் கையகப்படுத்திய நிலமீட்புப் போராட்டத்தில், காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் நீதிக்கான போராட்டத்தில், அரசியல் கைதிகளின் விடுதலைச் செயற்பாடுகளில் பெரும்பான்மையானோர் பார்வையாளர்களாக உள்ளனர். இன்னும் பலர் காட்சிக்காக முகம் காட்டுகின்றனர். இவற்றிற்கு மத்தியில் தமிழர் அரசியலில் இருந்து தூர விலகிய அரசியல்வாதிகள் மக்களை பிழையாக வழிநடத்தவும் ஆரம்பித்துவிட்டனர். ஆட்சியாளர்கள் இன அழிப்பின் அசியல் நோக்கம் நிறைவேறுவதை நேரடியாகவே காணத் தொங்கி விட்டனர். தமிழர் தாயகம் காக்க இராணுவத்தோடு போராடியதோடு, இராணுவமே எம் தாயகத்திலிருந்து வெளியேறு என்று குரல் எழுப்பியவர்களில் ஒரு பிரிவினர் இன்று இராணுவத்தில் சேர்வதும், அவர்களது பண்ணைகளில் வேலை செய்வதும், இராணுவம் நடாத்தும் முன் பள்ளிகளில் ஆசிரிய தொழில் பார்ப்பதும், இராணுவத்தின் கைக்கூலிகளாக செயற்படுவதும் தொடரும் இன அழிப்பின் உதாரணங்களாகும். முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் என்பது வருடமொரு முறை வந்துபோகும் தீபாவளி, தைப் பொங்கள் போன்ற திருநாள்கள் அல்ல. கொத்து கொத்தாக கொல்லப்பட்டவர்களை நினைந்து சமூகமாக கூடி அழும் தினமுமல்ல. இந்நாள் தமிழர் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்பவற்றை மையப்படுத்திய அரசியல் தியாக நாள். விழிப்புணர்வு சமூக எழுச்சி நாள், தியாகச் சுடர் எழும் திருநாள்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது கட்சிகளுக்கு சொந்தமான நாளல்ல. இது தேசத்துரோகிகள், பயங்கரவாதிகள், புலி ஆதரவினர் எனும் பெயர் குத்தப்பட்டும் தமிழர் அரசியலை தலைமேல் சுமந்து வலிகளோடு அரசியல் செயற்பாட்டில் தம்மை அர்ப்பணித்து நிற்கும் அரசியலாளர்களுக்கு, அதன் வழிநிற்போருக்குச் சொந்தமானது. அழிவின், இழப்புக்களின் வலி சுமந்து வாழ்விற்காகப் போராடும் மக்களுக்குச் சொந்தமானது. யுத்த முன்னெடுப்புகள் தொடர்கையில், இன அழிப்பு நிகழ்ந்துகொண்டிருக்கையில் அதனை நிகழ்த்திய ஆட்சியாளர்களுக்கு, ஆதரவளித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, தமது சுகபோக அரசியலுக்காக விடுதலையைக் காட்டிக்கொடுத்தவர்களுக்கு, தமிழர் அரசியலை விட்டு விலகி ஆட்சியாளர்களின் காலடியில் சுகம் அனுபவித்தவர்களுக்கு இன்று கரிநாள். அத்தோடு, தற்போதும் யுத்தக் குற்றங்கள் நடக்கவில்லை, மனித உரிமைகள் மீறப்படவில்லை, எந்தவொரு இராணுவ சிப்பாயையும் யுத்தக் குற்றங்களுக்காக நிறுத்தப்போவதில்லை, காணாமலாக்கப்பட்டோர் என்று எவரும் இல்லை, அரசியல்கைதிகள் எவரும் இல்லை எனக் கூறும் ஆட்சியாளர்களுக்கு துணைநின்று இணக்க அரசியல் நடத்துபவர்களுக்கு இன்று கரிநாள். இந்தியாவின், மேற்குலகின் அரசியலுக்காக தமிழரின் அரசியலை காட்டிக்கொடுப்பவர்கள், வடக்கிற்கு ஒரு முகமும், தெற்கிற்கு இன்னுமொரு முகமும் காட்டி அசிங்க அரசியல் நடத்துபவர்களுக்கு இன்று கரிநாள். சுயநல அரசியலுக்காக, பதவிக்காக தமிழ் மக்களின் அரசியலை சிதைக்கும், பிழையாக வழிநடத்தும் அரசியல் கோமாளிகளுக்கு, குருட்டு வழிகாட்டிகளுக்கு இன்று கரிநாள். முள்ளிவாய்க்கால் அழிவைத் தொடர்ந்து தமிழரின் அரசியல் தலைமைத்துவம் தொடர்பில் குழப்ப நிலையே தொடர்கிறது. தலைமைகள் எனக் கூறிக்கொள்வோர், தலைமைகளாக கவர்ச்சிக் காட்டுவோர், அரசியல் கதிரைகளுக்கு மட்டும் தமிழர் அரசியல் பேசுவோருக்கு மத்தியில் நினைவேந்தலை யார் நடத்த வேண்டும் எனும் தெளிவின்மையில் யார் நடாத்தும் நினைவேந்தலில் பங்கு பற்றுவது என்ற குழப்பகரமான சூழ்நிலைக்கு மக்கள் முகம்கொடுத்தனர். இவ்வருடமும் இரண்டுக்கு மேற்பட்ட இடங்களில், வேறு வேறு தரப்பினரால் மாறுபட்ட நேரங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் ஈகை சுடரேற்றலும் நடத்தப்பட்டது. இதனைத் தவிர்க்கும் முகமாகவும் எதிர்வரும் ஆண்டில் நடாத்தப்போகும் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் எழுச்சியுடன் அமையவும் இவ்வாண்டு சுடர் ஏற்றும் நிகழ்வில் கலந்துகொள்ளும் அனைவரும் தமிழரின் அரசியலை மையப்படுத்திய அரசியல் பிரகடனம் செய்து சத்தியபிரமானம் செய்வது முக்கியமாகும். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் ஈகைச் சுடர் ஏற்றல் என்பது அழிந்தாலும் அழியமாட்டோம், வீழ்த்தினாலும் விழமாட்டோம், மாற்று வடிவத்தில் மாற்று சக்தியாக எழுச்சியுறுவோம் என்பதன் அடையாளமாகும். எமது விடுதலைக்கு இன்னும் நீண்டகாலம் இருப்பதாகவே இன்றைய அரசியல் சூழ்நிலைகள் வெளிப்படுத்துகின்றன.
அடுத்த கட்டம் இன்னும் இறுக்கமாகவே அமையப்போகிறது. கட்சி அரசியலுக்கு அப்பால் மக்கள் சக்தியின் தேவை இன்று உணரப்பட்டுள்ளது. எந்தவொரு தனி அமைப்பும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் சடர் ஏற்றுதல் நிகழ்வை கையகப்படுத்தி உரிமைகோரும் நிலை வரக்கூடாது. ஏனெனில், தமிழ் மக்களின் அரசியல் போராட்டம் என்பது பிழையான தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிரானதும், பெரும்பான்மை இனவாத ஆட்சியாளர்களுக்கு எதிரானதும், துரோக அரசியலுக்காக தமிழ் மக்களின் அரசியலை விலைபேசும், காட்டிக்கொடுக்கும் சக்திகளுக்கு எதிரான போராட்டமாகும். இப்போராட்டத்தின் பங்காளிகளாக அரசியலாளர்கள், அரசியல் கல்வியியலாளர்கள், புத்திஜீவிகள், அடிமட்ட செயற்பாட்டாளர்கள் என்பவர்களோடு அடிமட்ட மக்களின் பங்களிப்பும் அத்தியாவசியமும் அவசியமுமானதாகும். இதனை கட்டியெழுப்பும் சக்தி, வழி நடத்தும் தன்மை, கட்டுக்கோப்பாக ஓரணியில் செயற்படுத்தும் திறன் கொண்ட அமைப்பை உருவாக்குவதே உடனடி செயற்பாடாக அமைதல் வேண்டும். அதன் மூலமே பொது எதிரியை சந்திக்க முடியும். முள்ளிவாய்க்கால் நிகழ்வு ஒருநாள் நிகழ்வல்ல. இது தமிழ் மக்களின் அரசியல் எழுச்சிப் பயணத்தை அடையாளப்படுத்தும் எழுச்சிநாள். பல்லாயிரக்கணக்கான மக்கள் சமூகத்தின் தியாகத்தின் நினைவு நாள் அல்ல. தியாகத்திற்கு அழைக்கும் தீப நாள். “நாமே விடியல், நமதே விடியல்” என தமிழரின் அரசியல் பாதையில் விழிப்போடு பயணித்திட சுடராகி சுடர் எழுப்பி தலைநிமிர திடசங்கட்பம் கொண்டெழுவோம். அருட்தந்தை மா. சத்திவேல்

No comments