Header Ads

test

தமிழ் மக்களின் உணர்வுகளை விளங்கிக் கொள்ளாத வங்கியை வடக்கு, கிழக்கில் தடைசெய்ய வேண்டும்! - சிறிதரன் எம்.பி


முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தனது பெற்றோரையும், உறவுகளையும் நினைவு கூர்ந்தமைக்காக உதவி முகாமையாளரையும், ஊழியரொருவரையும் கிளிநொச்சியிலுள்ள தனியார் வங்கி பணிநீக்கம் செய்துள்ளது. தமிழ் மக்களின் உணர்வுகளை விளங்கிக் கொள்ளாது சிங்கள, பௌத்த மேலாதிக்கத்துடன் செயற்படும் இந்த தனியார் வங்கியை வடக்கு, கிழக்கில் பிரதேசங்களில் தடைசெய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று நிதி அமைச்சு மீதான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ' யுத்தத்தின் காரணமாக உயிரிழந்த தமது தமிழ் உறவுகளுக்காக கடந்த 18 ஆம் திகதி முள்ளியாய்க்காலில் வடக்கு முதல்வரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து தீப்பந்தங்களை ஏற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அஞ்சலி செலுத்தினார்கள். இந் நிகழ்வில் கிளிநொச்சி தனியார் வங்கியின் உதவி முகாமையாளரும், ஊழியர்களும் உயிரிழந்த தமது உறவினர்களுக்காக தீப்பந்தங்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். இந்தக் காரணத்தினாலேயே இவர்கள் இருவரும் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேற்படி வங்கி சிங்கள வங்கியா? தமிழர்களை ஏற்க மறுத்தால் வடக்கில் அப்படியொரு வங்கியே தேவையில்லை. உயிரிழந்த உறவினர்களுக்காக கண்ணீர் விடுகின்ற உரிமை இல்லையெனில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர் மனோ கணேசன் வசமிருக்கும் நல்லிணக்க அமைச்சுகளை மூடிவிடுங்கள் என்றார்.

No comments