முள்ளிவாய்க்காலும் நினைவுச்சின்னமும்!
ஜனநாயக வெளியை எதிர்கொள்வதில் தமிழர் தரப்பு எந்தளவுக்குப் பலவீனமான நிலையில் உள்ளது என்பதை, மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திச் சென்றிருக்கிறது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு. ஜனநாயக சூழலில் அரசியல் செய்வதில் தமிழர் தரப்பில் நிறையவே போதாமைகள் இருப்பதைப் போலவே, ஜனநாயக சூழலில் நினைவேந்தல்களை நடத்துவதிலும் கூட, தமிழர் தரப்பிடம் போதாமைகள் இருக்கின்றன. மஹிந்த ராஜபக் ஷவின் இறுக்கமான ஆட்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பற்றி கரிசனைப்படாமல் இருந்தவர்கள் கூட, ஜனநாயக சூழலில், அதற்காக மோதத் தொடங்கியுள்ளார்கள். இப்போதுள்ள ஜனநாயக இடைவெளியானது, தமிழர் தரப்பின் ஒற்றுமையின்மையை வெளிப்படுத்திய சம்பவங்கள் பல உள்ளன. அதில் ஒன்று தான், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்காக நடத்தப்பட்ட இழுபறிகள். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்குபடுத்துவதில் ஏற்பட்ட இழுபறிகள், சிக்கல்களுக்கு கடைசி நேரத்தில் தீர்வுகள் எட்டப்பட்ட போதும், அது நிரந்தரமானதோ நிலையானதோ அல்ல. இப்போது கிளம்பிய பிரச்சினை நிரந்தரமாகவும் அவசரமாகவும் தீர்க்கப்பட வேண்டிய அவசியத்தையும் உணர்த்தியிருக்கிறது. ஏனென்றால், கறையான் புற்றெடுக்க கருநாகம் குடிகொண்ட நிலையாகி விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு ஒரு நினைவுத் தூபி அமைக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் தாம் கோரிக்கை விடுத்திருப்பதாக அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியிருக்கிறார். முள்ளிவாய்க்காலில் ஒரு நினைவுச் சின்னத்தை அமைக்கின்ற தகுதி அரசாங்கத்துக்கு இருக்கிறதா என்பது தான் முதலாவது பிரச்சினை. தாமும் அரசியல் செய்யப்போவதாக கிளம்பி வந்த பலரும், இப்போது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற போர்வையில் எதையும் பேசலாம், என்ற நிலையே உருவாகியிருக்கிறது. முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த பேரழிவுகளுக்கு காரணம், ஆட்சியில் இருந்த அரசாங்கம். தமிழ் மக்களின் மீது ஈவிரக்கமற்ற போரைத் தொடுத்து, அந்த மண்ணை குருதியில் குளிக்க வைத்தது அரசாங்கமும், அதன் படைகளும் தான். அப்போது, ஆட்சியிலிருந்தது மஹிந்த ராஜபக் ஷவாக இருக்கலாம். இப்போது இருப்பது மைத்திரிபால சிறிசேனவாக இருக்கலாம். ஆனால் போரை நடத்தியது, சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கம் தான். முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த பேரழிவுகளுக்கு இப்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கும் பங்குள்ளது. அவர்களின் ஆசியுடனும், துணையுடனும் தான் போர் நிகழ்த்தப்பட்டது என்பதை வரலாறு ஒருபோதும் மறந்துவிடாது. அதைவிட, போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட காலப்பகுதியில், பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான். இவ்வாறு, ஈவிரக்கமற்ற ஒரு போரை நடத்தி வகைதொகையின்றி தமிழ் மக்களைக் கொன்று குவித்த ஓர் அரசாங்கம், அந்த மக்களுக்காக ஒரு நினைவுச்சின்னத்தை அமைக்கின்ற தகுதியைக் கொண்டிருக்கிறதா என்பதைப் பற்றிய எந்தப் பிரக்ஞையும் அரசியல்வாதிகள் பலருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏதோ தாமும் அரசியலில் இருக்கிறோம் என்பதற்காக எதையாவது கூறிக் கொண்டு திரிவது அவர்களின் வழக்கமாக மாறி விட்டது. முள்ளிவாய்க்கால் என்பது தமிழ் இனத்தின் ஓர் அடையாளமாக மாறியுள்ள நிலையில், அந்த மண்ணில் இன்னமும் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்படாமல் இருப்பது வருத்தத்துக்குரிய விடயம்தான். வடக்கு மாகாணசபையால், முள்ளிவாய்க்காலில் ஒரு நினைவுச் சின்னத்தை அமைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகி விட்ட போதிலும், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தீர்மானத்தை எடுத்ததற்குப் பின்னர், முள்ளிவாய்க்காலில் நினைவுச் சின்னத்தை அமைப்பதற்கு வடக்கு மாகாணசபை எதையும் செய்யவில்லை. நினைவேந்தல் நடத்தப்படும் காணி பிரதேச சபைக்குச் சொந்தமானது என்றும், அது தன்னிடம் உள்ள உள்ளூராட்சி அமைச்சின் கட்டுப்பாட்டில் தான் வருகிறது என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருந்தார். அவ்வாறாயின், ஏன் அந்த இடத்தில் ஒரு நினைவுச் சின்னத்தை அமைப்பதற்கு இந்தளவு தாமதம் ஏற்படுத்தப்படுகிறது? முள்ளிவாய்க்காலில் ஒரு நினைவுச் சின்னத்தை அமைப்பதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாதிருப்பதால் தான், அரசாங்கம் அங்கு நினைவுச் சின்னத்தை அமைக்க வேண்டும் என்று சிலர் கோருகின்ற நிலை உருவாகியிருக்கிறது. ஏற்கனவே, போரில் இறந்தவர்களை நினைவு கூரும் பொது நினைவுச் சின்னம் அமைக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் கோரியிருந்தார். பொது நினைவுச் சின்னம் என்ற போர்வையில், தமிழ் மக்களின் வரலாற்றுச் சின்னங்களும், அடையாளங்களும் அழிக்கப்பட்டு விடக் கூடிய ஆபத்து உள்ளது. அத்தகையதொரு, பொது நினைவுச் சின்னம், பொது நினைவு நாளுக்கு அப்பால் எந்த நினைவேந்தலையும் செய்ய முடியாத ஒரு நிலை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்பட முடியாது. ஏனென்றால் அரசியலில் எதுவும் நடக்கலாம். யாரும் ஆட்சிக்கு வரலாம். அவ்வாறான ஒரு சூழல் ஏற்பட்டால், தமிழர்களால் மரபுரீதியாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் பல நினைவேந்தல் நாட்களில் விளக்கேற்றவோ அஞ்சலி செலுத்தவோ முடியாத நிலை கூட ஏற்படும். அதைவிட பொது நினைவுச் சின்னம் ஒன்றை அமைக்கும் போது, அங்கு நடக்கின்ற நினைவு கூரல்கள் அனைத்தும், அரசாங்கத்தினாலேயே ஒழுங்கமைக்கப்படும். அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலே தமிழ் மக்களின் மீது திணிக்கப்படும். சாதாரண மக்களின் கவலைகளைக் கொட்டித் தீர்க்கின்ற இடமாக அமைவதற்குப் பதிலாக, அது அரசியல் ஒழுங்கில் அமைக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கும். முள்ளிவாய்க்காலில் அரசாங்கம் ஒரு நினைவுச் சின்னத்தை அமைத்தாலும் கூட, அங்கு பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும் நிலைக்குப் பதிலாக, படையினருக்கான அஞ்சலி நிகழ்வாகவே மாற்றப்படும். இராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதைகளும் நிகழ்த்தப்படலாம். அது முள்ளிவாய்க்காலில் உயிர்களை உரமாக்கியவர்களுக்கு செய்யப்படும் அநீதியாகவே இருக்கும். முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய கொடுமைகள், போர்க்குற்றங்களுக்கு நியாயம் வழங்க முன்வராத ஓர் அரசாங்கத்துக்கு, அங்கு நினைவுச் சின்னத்தை அமைக்கின்ற உரிமை ஒருபோதும் கிடையாது. ஆனாலும், இந்த விடயத்துக்குள் அரசாங்கத்தின் மூக்கையும் நுழைத்து விடுவதற்கு சிலர் எத்தனிக்கிறார்கள். முள்ளிவாய்க்காலில் இனஅழிப்பு நடந்த போது, அதற்குத் துணையாக இருந்தவர்கள், அதனை முன்னின்று செய்தவர்களுக்கு, நினைவுச் சின்னங்களை அமைப்பது பற்றிப் பேசுகின்ற அருகதை எப்படி வந்தது என்ற கேள்வி பலராலும் எழுப்பப்படுகிறது. அதேவேளை, தற்போதுள்ள சூழலில், தமிழர் தரப்பு இதுபோன்ற விடயங்களில் பிரிந்து நின்று மோதிக் கொள்ளும் போது, அதனை தமக்குச் சாதகமாக்கிக் கொள்வதிலேயே அரசாங்கம் ஈடுபடும் என்பதை மறந்து விடுகிறார்கள். அன்னை பூபதியின் நினைவு நிகழ்வில், நிகழ்ந்தது போன்ற சூழலுக்கே இதுவும் வழிகோலும். அத்தகையதொரு நிலையை நோக்கித் தான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையும், கொண்டு செல்லப் போகிறோமா என்ற கேள்வியை தமிழர் தரப்பில் உள்ள ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது, முள்ளிவாய்க்கால் தமிழரின் வரலாற்றில் ஒரு முக்கியமான இடமாக மாறி விட்ட நிலையில், ஆண்டுக்கு ஒருமுறை கூடுவதும் அதற்குப் பின்னர், யாருமே கண்டுகொள்ளப்படாத இடமாக இருப்பதும் அபத்தமானது. முள்ளிவாய்க்காலை முன்னிறுத்தியே, தமிழர் தரப்பின் உரிமைக்கான போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற சூழலில், பேரவலங்கள் நிகழ்ந்த இடம், ஒரு வரலாற்றுச் சின்னமாக மாற்றப்படுவது முக்கியம். அந்தப் பொறுப்பை தமிழர் தரப்பு செய்யாத நிலையில் தான், அரசாங்கம் அதனைச் செய்ய வேண்டும் என்று கோருகின்ற நிலை உருவாகியிருக்கிறது. இத்தகையதொரு தருணத்தில் விழித்துக் கொள்ளத் தவறினால், அதுவும் கூட கைதவறிப் போய் விடும் நிலை ஏற்படலாம். சுதந்திரமான ஒரு குழு அமைக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் அவலத்தை நினைவு கொள்ளும் ஒரு வரலாற்றுச் சின்னத்தை உருவாக்கும் பணிகள் உடனடியாக முன்னெடுக்கப்படுவது, இன்று காலத்தின் கட்டாயமாக மாறியிருக்கிறது. தற்போதுள்ள ஜனநாயக வெளி எந்தளவுக்கு நீடிக்கும் என்ற கேள்விகள் எழத் தொடங்கியிருக்கின்ற நிலையில், இப்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை, பயன்படுத்திக் கொள்ளத் தவறினால், அதற்காக வருந்துகின்ற நிலை கூட ஏற்படலாம்.
Post a Comment