முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தையொட்டிய சர்ச்சைகள் ஓய்ந்தபாடாயில்லை. நினைவேந்தலைத் தலைமையேற்று நடத்துவதற்கு விடவில்லையாயின் நாம் தனித்துப் போய் ஒரு நிகழ்வை நடத்துவோம் என்ற ரீதியில் மாணவர்கள் புறப்பட்டிருப்பது ஏற்புடையதுமல்ல. ஒற்றுமை குறித்துப் பேசியே ஒற்றுமையீனத்தை இன்னும் விரிவுபடுத்திப் பிளவை வலுப்படுத்தும் விதமாக இந்தச் செயல் அமைந்துவிடும் அபாயம் இருப்பதை மாணவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். கடந்த 3 வருடங்களாக முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு நடந்து வருகின்றது. முதன்மையான பெருமெடுப்பிலான நிகழ்வு வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டிலேயே நடந்தது. அன்று மாணவர்கள் முள்ளிவாய்க்கால் மண்ணுக்குச் செல்வதற்குக்கூட அஞ்சிக்கொண்டிருந்தார்கள் என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும். அந்தத் தலைமையை மாகாண சபையும் அரசியல்வாதிகளும் வழங்காமல் இருந்திருந்தால், முள்ளி வாய்க்கால் தமிழ்த் தேசிய மீள்எழுச்சியின் புள்ளியாகி இருக்கமுடியாது . இன்று அதனை எங்களிடம் தாருங்கள் என்று மாணவர்கள் கேட்பதற்குரிய வாய்ப்புக்கூட ஏற்பட்டிருக்கமாட்டாது. அப்படிப்பட்டதொரு நிலையில் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து ஒரே நிகழ்வாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஏற்பாடு செய்வதற்கு மாணவர்கள் எடுத்த முயற்சி வரவேற்கத்தக்கது; பாராட்டப்படவேண்டியது. அந்த முயற்சியை அவர்கள் உண்மையான விசுவாசத்தோடு மேற்கொண்டிருந்தார்கள் என்றால் எல்லாத் தரப்பினரையும் ஒரே நிகழ்வின் கீழ் ஒன்றிணைக்கும் தமது முயற்சியில் அவர்கள் மனந்தளராது ஈடுபடவேண்டும். அதனைவிடுத்து அதற்கு நாங்கள்தான் தலைமை தாங்குவோம், அதற்கு விடவில்லையேல் தனித்துச் செயற்படுவோம், பிரச்சினைகளை இன்னும் வளர்த்துச் செல்வோம் என்ற வகையில் செயற்படுவது முற்றிலும் தவறானது. அது தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படப்போவதுமில்லை. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அரசியல்வாதிகள் தலைமையேற்பதற்குத் தகுதியற்றவர்கள் என்கிற மாணவர்களின் வாதம் உணர்ச்சி வெளிப்பாட்டின் வசப்பட்டது. தான் முன்னெடுத்த அரசியல் முன்நகர்வின் மூலம் தமிழ் இனம் எதிர்கொண்ட பேரவலத்தில் இருந்து மீள்வதற்கும், அதன் அரசியல் மீள் எழுச்சிக்கும் அரசியல்வாதிகள் தலைமைதாங்கவில்லை எனில் ,வேறு எதற்கு அவர்கள் தலைமை தாங்குவது? அழிவில் இருந்து, பின்னடைவில் இருந்து தமது இனத்தை மீட்டு வரும் பொறுப்பு அவர்களுக்கு இல்லையெனில், அவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்? அத்தகைய ஒரு தலைமைத்துவத்தில் குறைபாடுகள் இருக்கலாம்; நேர்த்தியின்மை இருக்கலாம்; மெத்தனப் போக்குத் தெரியலாம். அவற்றையெல்லாம் நிவர்த்தி செய்யத்தக்க வகையில் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து அவர்களை நேர்ப்படுத்தித் தமது தலைமையை அவர்கள் சீர்ப்படுத்திக்கொள்வதற்கான பாதையைச் செப்பனிடும் பணியை மாணவர்கள் செய்யமுடியும். மாணவர் சக்தியை எவரும் குறைத்து எடைபோட்டுவிட முடியாது. மாணவர் சக்தி மாபெரும் சக்தி என்பதைக் கடந்த காலம் உணர்த்தியிருப்பதைப் போலவே, மாணவர் சக்தி மட்டுமே எல்லாவற்றையும் வென்று தந்துவிடப் போதுமானதல்ல என்பதையும் வரலாறு மிகத் தெளிவாக உணர்த்திவிட்டே சென்றிருக்கின்றது. எனவே தமிழ் மக்களின் அரசியல் ஒற்றுமை என்பது, எப்போதையும்விட அதிகம் தேவைப்படும் இன்றைய நிலையில், அத்தகைய ஒரு நிலை நோக்கி அரசியல் கட்சிகளைச் சாய்த்துச் செல்லும் நகர்வுகளுக்கு தலைமை தாங்குபவர்களாக மாணவர்கள் மாறவேண்டும். அதைவிடுத்து, நிகழ்வுகளுக்குத் தலைமை தாங்க அவர்கள் விரும்புவது சற்று அவசரப்படும் போக்காகவே தெரிகின்றது. எனவே இன்று கலந்துரையாடலை நடத்தும் மாணவர்கள், நன்கு ஆராய்ந்து, பன்முகப் பார்வையுடன், எதிர்கால அரசியல் நோக்கிய தீர்க்க தரிசனத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து முடிவெடுக்கவேண்டும். கட்சி அரசியலின் இடையே மாட்டிக்கொள்ளாமல், வரலாறு தமக்காக விட்டு வைத்திருக்கும் இடத்தை நிரப்புவதற்கு அவர்கள் திடமாகவும் புத்திசாதுர்யத்து டனும் செயற்படவேண்டும். அனைத்துத் தரப்பினரையும் ஓரணியில் இணைத்து பேரெழுச்சியை ஏற்படுத்துவதுதான் மாணவர்களின் நோக்கம் என்றால், அதிலிருந்து அவர்கள் ஒருபோதும் விலகவேண்டியதில்லை. தமது இலக்கை மாணவர்கள் அடைவதற்கு ஒரே இடத்தில் வைத்து மட்டுமே செய்யவேண்டும் என்கிற அவசியம் இல்லை. பேரெழுச்சியை உண்டாக்கிய மாவீரர் தினங்கள் ஒரேயிடத்தில் நடந்தேறியவையில்லை. ஆனால் ஒரே பாணியில் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் நடந்தேறின. மனம் இருந்தால் மார்க்கங்கள் நிறையவே உள்ளன.
Post a Comment