பாடசாலைகளில் அகவணக்கம்:கொடி அரைக்கம்பத்தில்!
எதிர்வரும் மே18ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று வடக்கு மாகாணசபையின் கொடியினை அனைத்து பாடசாலைகளிலும் அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும் அன்று காலை பதினொரு மணிக்கு அனைத்து பாடசாலைகளிலும் அனைவரும் அகவணக்கம் செலுத்துமாறும் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இன்றிரவு அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கடந்த எழுபதாண்டுகாலமாக எமது தேசிய இனத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக அகிம்சை வழியிலும் பின்னர் ஆயுத ரீதியிலும் நாம் போராடி வந்துள்ளோம். எமது ஆயுதப் போராட்டம் பயங்கரவாதமாகச் சித்திரிக்கப்பட்டு கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி சர்வதேச சமூகத்தைப் பிழையாக வழிநடத்தி மௌனிக்கச் செய்யப்பட்டது.
கடந்த முப்பதாண்டு போராட்டத்தில் நாம் ஏராளமான இளைஞர் யுவதிகள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான உயிர்களை களப்பலி கொடுத்துள்ளோம். குறிப்பாக இறுதியாக எம்மக்கள்மீது நடைபெற்ற தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்துள்ளதுடன் பல்லாயிரக்கணக்கனக்கானோருக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளோம்.
இந்நிலையில் எமது இனத்தின் உரிமைக்குரலுக்கான போராட்டம் இன்னமும் முற்றுப்பெறவில்லை என்பதையும், மடிந்துபோன எமது உறவுகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கும் இன்னமும் நீதி வழங்கப்படவில்லை என்பதையும் சர்வதேச சமூகத்திற்கு அழுத்தமாக எடுத்துரைக்க வேண்டியுள்ளது.
மேலும், எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான வேள்வியில் ஆகுதியானவர்களை உணர்வுடன் நினைவுகூர வேண்டியது எம்மினத்தின் கடமையாகும். எனவே, எமது மக்களின் அபிலாசைகளை உயர்த்திப் பிடிக்கும் நிறுவனமாக வடக்கு மாகாணசபை திகழ்வதால், எமது மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 18ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று வடக்கு மாகாணசபையின் கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும் அன்று காலை பதினொரு மணிக்கு அனைத்து பாடசாலைகளிலும் அனைவரும் அகவணக்கம் செலுத்துமாறும் அனைத்து அதிபர்களையும் பணிவுடன் கேட்டுக்கொள்வதாக வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
Post a Comment