சிறிலங்கா சுதந்திரம் அடைந்த பின்னர், இந்த ஆண்டிலேயே அதிகளவான கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும், அடுத்த ஆண்டில் கடன் நெருக்கடி மேலும் மோசமடையும் என்றும் எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் நிதி அமைச்சர் மங்கள சமரவீர.
“இந்த ஆண்டில் சிறிலங்கா செலுத்த வேண்டிய கடன் 2,845 மில்லியன் டொலர் ஆகும். இதில், 1,789 மில்லியன் டொலர், 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட கடன்களாகும்.
2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெறப்பட்டு இந்த ஆண்டில் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தவணைக் கொடுப்பனவு, 1,056 மில்லியன் டொலர் மட்டுமேயாகும்.
இந்த ஆண்டில் செலுத்த வேண்டிய கடன்களுக்கான கொடுப்பனவில், 63 சதவீதம், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பெறப்பட்ட கடன்களுக்குரியவையே.2017ஆம் ஆண்டில் இது 75 வீதமாக இருந்தது.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பெறப்பட்ட கடன்களால், 2019ஆம் ஆண்டில், 4.2 பில்லியன் டொலரை சிறிலங்கா அரசாங்கம் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது.
இது தற்போதைய அரசாங்கத்தைப் பெரும் கடன் நெருக்கடிக்குள் தள்ளும். அடுத்த ஆண்டு நெருக்கடி மேலும் மோசமடையும்.
அடுத்த ஆண்டு திருப்பிச் செலுத்த வேண்டிய 4,285 மில்லியன் டொலர் கடன் தொகையில், 77 வீதம் அல்லது, 3,315 மில்லியன் டொலர், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பெறப்பட்ட கடன்களுக்கானதாகும்.
மேலும், 3,768 மில்லியன் டொலரை, 2020ஆம் ஆண்டு தவணைக் கொடுப்பனவாகவும், வட்டியாகவும் திருப்பிச் செலுத்த வேண்டும். அதில், 77 வீதம் அல்லது, 2,905 மில்லியன் டொலர் 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பெறப்பட்ட கடன்களுக்குரியவையாகும்.
863 மில்லியன் டொலர் மாத்திரமே, 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெற்ற கடன்களுக்கானது.
2021இல், செலுத்தப்பட வேண்டிய தொகையில், 83 வீதம், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பெற்ற கடன்களுக்குரியவையாகும்.
2030இல் கூட, செலுத்தப்படும் தொகையில், 73 வீதம், மகிந்த ஆட்சிக்காலத்தில் பெறப்பட்ட கடன்களுக்குரிய கொடுப்பனவாகவே இருக்கும்.
2019இல் செலுத்த வேண்டிய கடன் தவணைக் கொடுப்பனவானது, 2014 ஜனவரியில் ஐந்து ஆண்டுகளுக்கு 6 வீத வட்டியுடன் மீளச் செலுத்துவதாக பெறப்பட்ட 1000 மில்லியன் டொலர் கடன், 2014 ஏப்ரலில், 5.1 வீத வட்டியுடன் மீளச் செலுத்துவதாக பெறப்பட்ட 500 மில்லியன் டொலர் கடன், ஆகியனவற்றை உள்ளடக்கியுள்ளது.
இந்த 1500 மில்லியன் டொலர் கடனையும், வட்டியுடன் ஒரு தவணையில் மீளச் செலுத்த வேண்டியுள்ளது.
2014இல் பெற்ற கடன்களை மகிந்த அரசாங்கம் அபிவிருத்திப் பணிகளுக்கு செலவிடவில்லை. தேர்தலில் வெற்றியீட்டுவதற்காகவே செலவிட்டது.
தற்போதைய கூட்டு அரசாங்கம், கடந்த மூன்று ஆண்டுகளில் 12 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுள்ளது. அதில் 6 பில்லியன் டொலர், அனைத்துலக கொடை முகவர் அமைப்புகளிடம் பெறப்பட்டது.
இருதரப்பு உடன்பாட்டின் கீழ், இலகு தவணை அடிப்படையில் இவை பெற்றுக் கொள்ளப்பட்டன. இது வர்த்தக கடனாக பெற்றுக் கொள்ளப்படவில்லை.
2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெறப்பட்ட மொத்த வெளிநாட்டுக் கடன்களில் 48 வீதம், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பெறப்பட்ட கடன்களை திருப்பிச் செலுத்தவே பயன்படுத்தப்பட்டன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment