பதுங்குகின்றார் சம்பந்தன்:சிவசக்தி ஆனந்தன்!
வடக்கு மாகாணசபை மீது குற்றத்தை சுமத்தி விட்டு எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் பதுங்கிக்கொள்வதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபைக்கு ஒதுக்கப்படும் நிதி மிக சொற்பமானது அதனை வைத்தே இந்த வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிற்குமான அபிவிருத்தி பணிகளை செய்யவேண்டியுள்ளது. மத்திய அரசு வழங்கும் நிதியை கூட 50 வீதமாக குறைத்தே வழங்குகிறார்கள்.
அந்த நிதியை பெற்றுக்கொடுக்க வேண்டிய தமிழ் தலைமைகள் அதைப்பற்றி சிந்திக்காமல் மாகாணசபைக்கு இருக்கும் ஏனைய அதிகாரங்களையும் பெற்றுக்கொள்ள முயற்சி எடுக்காமல் வடமாகாணசபை முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் சரியாக செயற்படவில்லை என்றும் அதனாலேயே கடந்த உள்ளூராட்சி தேர்தலில் நாம் பின்னடைவை சந்திக்க வேண்டி வந்ததாகவும் தமிழ் கட்சிகளின் தலைவர்களும் மற்றும் எதிர்க்கட்சி தலைவராக இருப்பவரும் சொல்லிவருகிறார்கள்.
உண்மையில் பாராளுமன்றத்தில் இருக்க கூடிய எதிர்க்கட்சி தலைவர் வரவு செலவு திட்டங்கள் முன்வைக்கப்படும் போது வடக்கு கிழக்கிற்கு விசேட நிதியை வழங்கவேண்டும் என்று கோரி அதனை பெற்று மாகாணசபைக்கு கொடுப்பதற்கு பதிலாக மாகாணசபை மீது குற்றத்தை சுமத்தி விட்டு இவர்கள் தப்பி கொள்கிறார்கள்.
அத்துடன் ஒரு இலட்சம் பேரை கொன்றொழித்த முள்ளிவாய்க்காலில் முதலமைச்சர் அஞ்சலி செலுத்தியதற்காகவும் வடக்குமாகாண கல்வி அமைச்சர் பாடசாலைகளில் கொடிகளை அரைக்கம்பத்தில் ஏற்றுமாறு விடுத்த வேண்டுகோளிற்காகவும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக மத்திய
அரசில் உள்ள சிங்கள அரசியல்வாதிகள் கூறுகிறார்கள். ஒரு நாடு ஒரு தேசம் என்று கூறும் அரசாங்கத்திற்கு அந்த ஒரு நாட்டுக்குள் தான் அந்த ஒரு இலட்சம் மக்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள் என்பது புரியவில்லை.இது ஒரு ஜனநாயக நாடாக இருந்தால் அந்த மக்களிற்காக அன்றைய நாள் தேசிய கோடியை அரைக்கம்பத்தில் ஏற்றி இருக்கவேண்டும்.
அதனை ஒரு தேசிய துக்கத்தினமாக அறிவித்திருக்க வேண்டும். ஆனால் அதனை செய்யாத அரசு நினைவேந்தலை செய்த மாகாணசபை மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறுகிறார்கள்.
தெற்கிலிருப்பவர்கள் நிதியையும் தருகிறார்கள் இல்லைஇ உரிமையையும் தரமறுக்கிறார்கள்இ இறந்தவர்களை நினைவு கூரவும் விடுகிறார்கள் இல்லை இதனை பார்த்து கொண்டு தமிழ் மக்களின் தலைவரான சம்பந்தன் ஐயா கோமாநிலையில் இருப்பது போல மீளா துயிலில் ஆழ்ந்து கொண்டிருக்கிறார் என்றும் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
Post a Comment