மகிந்த அணியுடன் இணைந்து செயற்பட 16 பேர் அணி இணக்கம்
கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி தொடர்பான இறுக்கமான நிலைப்பாட்டை சிறிலங்கா பொதுஜன முன்னணி தளர்த்தியுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணிக்கும், சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் நேற்று நடந்த பேச்சுக்களின் போது இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
நெலும் மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்சவின் செயலகத்தில் நேற்று நடந்த சந்திப்பில் 16 பேர் அணியின் சார்பில், 12 உறுப்பினர்கள் பங்கேற்றனர். எஸ்.பி.திசாநயக்க, தயாசிறி ஜயசேகர, திலங்க சுமதிபால, சுமேதா ஜெயசேன ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவில்லை.
சிறிலங்கா பொதுஜன முன்னணி சார்பில், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பசில் ராஜபக்ச, சாகர காரியவசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் வகிக்கும் பதவிகளை விட்டு விலகுமாறு, 16 பேர் அணியிடம், சிறிலங்கா பொதுஜன முன்னணி வலியுறுத்தவில்லை.
முன்னதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள பதவிகளை கைவிட்டு வந்தால் தான், தம்முடன் இணைத்துக் கொள்ள முடியும் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி நிபந்தனை விதித்திருந்தது.
தற்போதைய நிலையில் 16 பேர் அணியிலுள்ளவர்கள், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் பதவிகளை வகித்துக் கொண்டே, சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக நாடாளுமன்றத்திலும், வெளியிலும் இணைந்து செயற்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
Post a Comment