போர் முடிவடைந்து 9 வருடங்களின்பின் யாழ் வருகிறார் நோர்வேயின் அமைச்சர்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்குமிடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு அனுசரணையாளர்களாகவிருந்த நோர்வேயின் இராஜதந்திரிகள் 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் எதனையும் மேற்கொண்டிருக்கவில்லை.
இந்நிலையில் நோர்வேயின் உயர் மட்ட அமைச்சர் ஒருவர் 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்து 9 வருடங்களின் பின்னர் முதல்முறையாக யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட் இன்று தொடக்கம் எதிர்வரும் 23 ஆம் நாள் வரை சிறிலங்காவில் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இவர் சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது, மூத்த அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகத்திரைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார்.
இதன்போது நாளை (21) நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் யாழ்ப்பாணத்துக்கு குறுகிய பயணம் ஒன்றையும் மேற்கொள்வார்.
இதன்போது, மீள்குடியேற்றப் பகுதிகளில் நிலையான வாழ்வாதார செயற்பாடுகளுக்காக நோர்வே அளிக்கும் உதவிகளின் பெறுபேறுகள் குறித்தும் அவர் ஆராயவுள்ளார்.
அத்துடன், பளை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி மற்றும் பழங்கள் பொதியிடும் மையத்தையும் அவர் திறந்து வைப்பார்.
குருநகரில் உள்ளூர் மீனவர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து கடற்கரையை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளிலும் நோர்வே இராஜாங்க அமைச்சர் ஈடுபடவுள்ளார்.
சிறிலங்காவில் போர் நிறுத்த உடன்பாடு முறிவடைந்த பின்னர், நோர்வேயுடனான உறவுகளை சிறிலங்கா அரசாங்கம் மட்டுப்படுத்தியிருந்தது.
2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் இருதரப்பு உறவுகள் மீண்டும் பலப்படுத்தப்பட்டது.
Post a Comment