Header Ads

test

சந்தியா எக்னெலிகொட மீதான அச்சுறுத்தலின் பின்னணியில் ஜனாதிபதி ஆலோசகர்


சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகராக உள்ள பௌத்த பிக்கு ஒருவரே, தனக்கு எதிராக அச்சுறுத்தல் விடுக்கும் பரப்புரையின் பின்னால் இருப்பதாக, சந்தியா எக்னெலிகொட குற்றம்சாட்டியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொட, கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

“சமூக ஊடகங்களில் எனக்கும், எனது குடும்பத்துக்கும் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த அச்சுறுத்தல்களை அரசாங்கம் கவனித்துக் கொள்ள வேண்டும். எனது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

எனக்கு எதிரான பரப்புரைகளின் பின்னால், சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் ஒருவரே இருக்கிறார். அவரது முகநூலில் அத்தகைய தாக்குதல்களை பார்வையிட முடியும்.

எனக்கு எதிரான தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும்.

நான் நாட்டைக் காட்டிக் கொடுப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். எனது கணவன் ஒரு விடுதலைப் புலி என்கிறார்கள்.

ஆனால் அவருக்கு அவ்வாறான எந்த தொடர்பும் இல்லை என்று எல்லா புலனாய்வு அமைப்புகளும் கண்டறிந்துள்ளன.

பிரகீத் விடுதலைப் புலிகளின் உறுப்பினரோ, அல்லது வேறு எந்த தீவிரவாத அமைப்பின் உறுப்பினரோ அல்ல என்று அவர்கள் நீதிமன்றங்களில் கூறியுள்ளனர்.

பொய்யான பரப்புரைகள் மற்றும் அச்சுறுத்தல்களின் மூலம் பிரகீத் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளை இவர்கள் நிறுத்த முற்படுகின்றனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments