வடக்கின் சுற்றுலாத்துறை:மக்களது கலாச்சாரத்துடனேயே!
வட மாகாணத்திற்கான சுற்றுலாத்துறை ஒன்றை அமைக்க வேண்டும் என்ற வட மாகாணசபையின் கனவு நனவாகின்ற ஒரு நல்ல நாள் இன்று. 2013ல் வடமாகாணசபை தனது நிர்வாகப் பொறுப்பை ஏற்ற நாளில் இருந்து வட பகுதியின் சுற்றுலாத்துறை மேம்படுத்தப்பட வேண்டும் என்ற அவாவில் உரிய முயற்சிகள் பலவற்றை முன்னெடுத்த போதும்இதற்குரிய நியதிச்சட்டம் தயாரித்தல், உரிய அனுமதியைப் பெற்றுக்கொள்ளல் போன்ற பற்பல தடங்கல்களால் இதுவரை காலமும் இந்த சுற்றுலாத்துறைப் பணியகம் எம்மால் அமைக்கப்பட முடியாது போயிற்று. எனினும் தற்போது அது அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளதென வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலப்போருக்குப் பிந்திய வளர்ச்சிப் பாதையில் சுற்றுலாத்துறை மிக முக்கிய பங்கை வகிக்கக்கூடியது. வட மாகாணத்தில் பல சுற்றுலா மையங்கள் இயற்கை வளங்களுடன் கூடியதாக அமைந்துள்ள போதும் அவற்றை புனரமைப்புச் செய்வதற்கும் சுற்றுலா மையங்களாக மாற்றி அமைப்பதற்கும் இதுவரை காலமும் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் இனி தீர்க்கப்படுவன. கடந்த நான்கு ஆண்டுகளாக சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கு முழுமையான பங்களிப்புக்களை எம்மால் வழங்க முடியாமல் போன போதும் இங்கொன்றும் அங்கொன்றுமாக சுற்றுலா மையங்கள் இனங்காணப்பட்டு அவை புனரமைக்கப்பட்டுள்ளன. எனினும் அவற்றிலும் சில குறைபாடுகள் எம்மால் அவதானிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக வன்னேரிக்குளம் பகுதியில் பறவைகள் சரணாலயம் ஒன்று புனரமைப்புச் செய்யப்பட்டு சுற்றுலாப் பயணிகளின் பாவனைக்காக தயார் நிலையில் உள்ள போதும் இப் பகுதிக்கு செல்லும்முருகண்டியில் இருந்து வன்னேரிக்குளம் வரையான பாதை குன்றும் குழிகளுமாக காணப்படுகின்றதால் இதன் பயன்பாடு பூச்சிய நிலையிலேயே உள்ளது. எனவே சுற்றுலா மையங்கள் புனரமைப்புச் செய்யப்படும் போது இலகுவில் அந்த இடத்தை சென்றடையக்கூடிய வழிவகைகளையும் நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வேறு முக்கிய கட்டமைப்புக்களையும் நாம் அமைக்க வேண்டும்.
வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சுற்றுலா அபிவிருத்தி பணிகள் அனைத்தும் இப் பகுதி மக்களின் நன்மைகளையும் வாழ்வாதார முன்னேற்றங்களையும் அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். மேலும் வட பகுதிக்கான கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் பிறழ்வு அடையா வண்ணம் எமது அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்;. மத்திய அரசும் அதன் முகவர்களும் எமது ஒவ்வொரு முன்னெடுப்புக்களையும் மிகக் கவனமாக உற்று நோக்கிய வண்ணம் உள்ளனர் போல் தெரிகிறது. வட மாகாணசபையால் முன்னெடுக்கப்படுகின்ற முன்னேற்றகரமான செயற்பாடுகளில் மத்திய அரசும் இடைச்செருகல்களை ஏற்படுத்தி எமது திட்டங்களைத் தாம் வளைத்துப் போட கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றது. இதற்கான மிகச்சிறிய உதாரணம் ஒன்றைக் கூறுகின்றேன். எமது முன்னைநாள் விவசாய அமைச்சரும் வடமாகாணசபை உறுப்பினரும் ஆகிய கௌரவ ஐங்கரநேசன் அவர்களின் சிந்தனையில் உதித்ததே“அம்மாச்சி உணவகம்”. அவர் ஒரு சைவ உணவகத்தை ஆரம்பித்து அதில் வட மாகாணத்திற்குரிய பிரசித்தி பெற்ற உணவுவகைகளை அறிமுகம் செய்ததன் மூலம் எமது மக்களுக்கு வீட்டு உணவு போன்ற உணவு வகைகள் மலிவாகவும் தரமாகவும் கிடைக்க வழிவகை செய்தார்.அத்துடன் வாழ்வாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ள பல பெண்கள் இதன் மூலம் ஒரு தொழில் முயற்சியையும் போதுமான வருவாயையும் ஈட்டக்கூடிய வகையில் இத்திட்டம் அமைந்திருந்தது. இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில மாதங்களுள்இது பற்றி இலங்கைப் பாராளுமன்றத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டதுடன் இதற்கான விசேட நிதி ஒதுக்கீடுகள் திறைசேரியில் இருந்தும் இன்னும் பல அமைப்புக்களில் இருந்தும் ஒதுக்கப்பட்டது. புதிய உணவகங்கள் கீரிமலை, நாவற்குழி கடற்கரை அருகாமை ஆகிய பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டு அந்த உணவகங்களுக்குஹெல பொஜூன் என்று பெயர் வைக்க எத்தனிக்கப்பட்டது. ஆனால் அது நிறுத்தப்பட்டது. எமது உணவகங்களுக்கு நாம் தமிழில் பெயர் வைக்கவிருப்பதை அறிந்து அவற்றிற்குச் சிங்களப் பெயர் முன்வைக்க அரசாங்கம் முடிவெடுத்தது. வடக்கு மாகாணம்இலங்கையின் பொதுச்சொத்தாக இந்த அம்மாச்சி உணவகத்தை மாற்றுவதற்கான செயற்பாடாகவே நாம் அவதானிக்கின்றோம். ஆகவே இவ்வாறான விடயங்கள் எழும் போது எமது பாரம்பரியங்களையும் மொழியையும் கலை கலாச்சாரத்தையும் கணக்கில் எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். உங்கள் முன்னெடுப்புக்கள் அனைத்தும் பெறுமதி மிக்கதாகவும் தூர நோக்குடையதாகவும் கபட நோக்கம் கொண்ட உள்நுழைவுகளை புறந்தள்ளக்சுடிய வகையிலும் அமைந்திருக்க வேண்டும் என்பதை மனதில் இருத்தி நீங்கள் செயற்பட வேண்டும் என வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.
நீங்கள் உங்கள் சுற்றுலாத்துறைப் பணிகளை முன்னெடுக்கும் போது உங்களுக்கு பலவிதமான அழுத்தங்களையும் இடர்பாடுகளையும் தருவதற்கு வனத்துறை, நில அளவைத்திணைக்களம், கனியவளத் திணைக்களம், கடலோரப்பாதுகாப்பு சபை, வனவிலங்குப் பாதுகாப்பு துறை என பல துறைகள் தயார் நிலையில் இருக்கின்றன. இத் திணைக்களங்கள், அமைப்புக்களின் உள் நுழைவுகள் இன்றி எமது முன்னெடுப்புக்கள் சீரிய பாதையில் கொண்டுசெல்லப்பட வேண்டும்.
சுற்றுலாத்துறை விரிவாக்கத்தின் போது இயற்கை சார்ந்த சுற்றுலா மையங்களை விருத்தி செய்வதுடன் எமது பகுதிகளில் காணப்படக்கூடிய பனை மற்றும் தென்னைகளில் இருந்து பெறக்கூடிய பொருட்கள், கடல் வளங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் உணவு வகைகள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தலாம். பனை வளங்களில் இருந்து தயாரிக்கப்படும் அழகிய கைவண்ணப்பொருட்கள் மற்றும் வட பகுதியின் கலை நயத்தை எடுத்தியம்பக்கூடிய ஓவியங்கள், அலங்காரங்கள் போன்றவையும் விற்பனைக்காக சேர்த்துக் கொள்ளப்படலாம். சுற்றுலா மையங்களின் பாதுகாப்புக்கள் தொடர்பிலும் நாம் கூடுதலான கவனங்கள் எடுக்க வேண்டும். அண்மையில் கூட வெளிநாட்டில் இருந்துவந்த சுற்றுலாப் பயணி ஒருவர் மோசமாகக் கையாளப்பட்ட சம்பவம் ஒன்று பத்திரிகையில் பார்த்ததாக ஞாபகம். எனவே சுற்றுலாத்துறை விரிவாக்கம் செய்யப்படும் அதே தருணத்தில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்களும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
வடமாகாணத்தின் யாழ்குடா நாட்டுப்பகுதி மூன்று பக்கம் கடலால் சூழப்பட்டுள்ளதுடன் நிறைந்த கடல் உணவு வளங்களைக் கொண்ட ஒரு பிரதேசம். எனவே இவ் வளங்கள் எமது மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கே பயன்பட வேண்டும். ஓரிரு வாரங்களுக்கு முன்னர் ஆழியவளைப்பகுதியில் கரைவலைத் தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவருக்கு 20 ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான பாரை மீன்கள் கிடைக்கப்பெற்றதாகவும் அதனால் ஒரே இரவில் அந்த மீனவர் கோடீஸ்வரராக மாறிவிட்டார் எனவும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தன. அந்த விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டு ஒரு வாரம் கடக்க முன்னரே அப் பகுதியில் சிங்கள மீனவர்களின் ஆக்கிரமிப்பு இடம் பெற்றது என்று அறிகின்றேன். அவர்களுடன் எமது மீனவர்களும் பொதுமக்களும் அரசியற் தலைவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு நிலை ஏற்பட்டுள்ளது.
எமது ஒவ்வொரு அசைவுக்கும் பிறர்தரப்பில் இருந்து பல முனைத் தாக்குதல்கள் பொருளாதார ரீதியாகவும், தொழில் முயற்சி வடிவிலும்வந்து கொண்டிருப்பதாக நாம் உணர்கின்றோம். எமது சமூக, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்கள் ஆகிய அனைத்தையும் சீரழிக்க சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றார்கள் என்றே கொள்ள வேண்டியுள்ளது.
இந்த விடயங்கள் பற்றி இச் சபையில் நான் கூறுவதன் நோக்கம் உங்கள் அதிகார வரம்புக்குட்பட்ட செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற போது ஏற்படக் கூடிய இடர்களையும் மற்றும் தடைகளையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதாலேயே.இன்றைய இந்த இயக்குநர் சபையின் அங்கத்தவர்களாக தெரிவு செய்யப்பட்ட நீங்கள் அனைவரும் சிறந்த கல்விமான்களாக, சமூகத்தில் உயர் நிலையில் காணப்படக்கூடிய அங்கத்தவர்களாக, கண்ணியம் மிக்கவர்களாக சமூக வளர்ச்சியிலும் சீர்திருத்தத்திலும் ஈடுபாடு உள்ளவர்களாகவும் காணப்படுகின்றீர்கள்.ஆகவே உங்களால் முன்னெடுக்கப்பட இருக்கின்ற ஒவ்வொரு செயற்பாடுகளும் வட மாகாணசபையின் வளர்ச்சிக்கும் இப் பகுதியில் உள்ள மக்களின் மேம்பாட்டை மையப்படுத்துவதற்கும் ஏற்றவாறு இருக்கும் என்று நம்புகின்றேனென அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment