பலாலிக்கு நட்டஈடு?
பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்கென சுவீகரிக்கப்பட்ட காணிகளிற்கு நட்டஈடு வழங்குவது தொடர்பில் ஆராய 34 வருடங்களின் பின்னர் யாழ்.மாவட்ட செயலாளர் அழைப்புவிடுத்துள்ளார்.
1984ம் ஆண்டு பலாலி விமானநிலைய விஸ்தரிப்பிற்கென பொதுமக்கள் 700 ஏக்கரிற்கும் மேற்பட்ட காணி பலாத்காரமாக பறிக்கப்பட்டிருந்தது.இக்காணிகளின் பெரும்பாலான உரிமையாளர்களிற்கு நட்டஈடு இலங்கை அரசினால் வழங்க்கப்பட்டிருக்கவில்லை.தொடர்ந்து ஏற்பட்ட இடப்பெயர்வினால் நட்டஈடு கொடுப்பனவு பற்றிய விடயம் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது காணிகளை உத்தியோகபூர்வமாக சுவீகரிக்க அரசு நடவடிக்கைகளை எடுத்துவருவதுடன் சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களது ஆட்சேபனைகள் தொடர்பில் தெல்லிப்பழை பிரதேச செயலகம் ஊடாக விளம்பரங்களை பிரசுரித்துமிருந்தது.
இந்நிலையில் தற்போது சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளிற்கான நட்டஈடு தொடர்பில் ஆராய வடமாகாண முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டமொன்றிற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.யாழ்.மாவட்ட செயலாளர்,பிரதேச செயலாளர்கள் மற்றும் காணி ஆணையாளர் உள்ளிட்டவர்கள் இக்கூட்டத்தில் பங்கெடுக்கவுள்ளதாக தெரியவருகின்றது.
இதனிடையே குறித்த நட்டஈடு வழங்கும் நடவடிக்கை அடாத்தாக இராணுவம் வலிவடக்கில் கைப்பற்றி வைத்துள்ள 4ஆயிரம் ஏக்கர் வரையிலான காணிகளை நிரந்தரமாக சுவீகரிக்கும் நடவடிக்கையின் ஓர் ஆரம்ப கட்டமாக இருக்கலாமென்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Post a Comment