மல்லாகம் சூட்டுச் சம்பவம்; ஐவருக்கு மறியல்!
மல்லாகம் சகாய மாதா ஆலயத்துக்கு அண்மித்த பகுதியில் நேற்று இடம்பெற்ற மோதல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 இளைஞர்களையும் வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.
மல்லாகம் சகாய மாதா ஆலயத்துக்கு அண்மையில் நேற்றிரவு 7 மணியளவில் இரண்டு தரப்புகளுக்கு இடையே மோதல் சம்பவம் இடம்பெற்றது. அதன்போது அந்த வழியால் சென்ற பொலிஸார் தலையிட்டு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட தெல்லிப்பழை பொலிஸார், இரண்டு தரப்புகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போதே பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று நீதிவானுக்கு அறிக்கை முன்வைத்தனர்.
மோதலில் ஈடுபட்டோரைக் கைது செய்ய நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.
மோதல் சம்பவங்களில் காயமடைந்து தெல்லிப்பழை வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 5 பேர் இன்று (18) காலை கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் ஐவரும் இன்று மாலை மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.
5 சந்தேகநபர்களும் கூரிய ஆயுதங்களைக் கொண்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் எனவும் பொது இடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள் எனவும் பொலிஸார் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
அதனை ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபர்கள் 5 பேரையும் வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
Post a Comment