மாகாணசபை அனுமதியின்றி காணி பிடிப்பு?
யாழ்.மாவட்டத்தில் காணி சுவீகரிப்பதானால் நேரடியாக அரசாங்க அதிபர் மற்றும் நேரடியாக பிரதேச செயலாளர்களுக்கு மத்திய காணி அமைச்சு உத்தரவிடமுடியாது. மாகாண காணி அமைச்சின் ஊடாக செயற்படுத்த வேண்டும். மாகாண காணி அமைச்சிடம் அனுமதி பெற வேண்டும். இனி வரும் காலங்களில் காணி அமைச்சு எந்த தேவைக்குரிய காணிகளாக இருந்தாலும் சுவீகரிப்பு அறிவித்தலை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை விடுப்பதற்கு முன்னர் மாகாண காணி அமைச்சரின் அனுமதியைப் பெற வேண்டுமென்று ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் யாழ்.மாவட்டத்தில் காணி சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக நீதிமன்றங்களை நாடி சுவீகரிப்பினைத் தடுக்க நடவடிக்கை எடுப்போம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்களான வடமகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் இன்று (04) நடைபெற்றது.
இதன்போது, யாழ். மாவட்டத்தில் மண்டைதீவுப் பகுதியில் கடற்படையினரால் பொது மக்களின் 15 ஏக்கர் காணி சுவீகரிப்பதற்கான விளம்பர அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக ஆராயப்பட்ட போது வலி.வடக்குப் பகுதிகளில் காணி விடுவிப்பது போன்று பாசாங்கு செய்துகொண்டு மறுபுறத்தில் மண்டைதீவில் கடற்படையினர் பொது மக்களின் காணிகளை சுவீகரிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வேலணை பிரதேச செயலர், மத்திய காணி அமைச்சின் செயலாளரினால் தனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் பிரகாரம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிற்கு தெரியப்படுத்தி அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொது மக்களின் ஆட்சேபனைகளையும் காணி அமைச்சின் செயலாளருக்கு அறிக்கை மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், 25 குடும்பங்களின் பதினைந்து ஏக்கர் காணிகள் சுவீகரிப்பதற்கான நோட்டிஸ் ஒட்டப்பட்டுள்ளது. சுவீகரிப்பு தொடர்பாக வடமாகாண முதலமைச்சருக்கோ மாகாண சபைக்கோ தெரியப்படுத்தினீர்களா என்று கேள்வி எழுப்பியதுடன் கடற்படையினரால் பொது நோக்கத்திற்காக காணிகளை சுவீகரிக்க முடியாது. காணி சுவீகரிப்பிற்கு எதிராக நீதிமன்றங்களிற்குச் செல்ல வேண்டுமாயின் நீதிமன்றத்திற்குச் செல்வோம். காணி சுவீகரிப்புக்கெதிராக உரிய தீர்மானத்தினை எடுக்க வேண்டும். 13ஆம் திருத்தச் சட்டத்தின் படி மாகாண சபையின் அங்கிகாரத்தினைப் பெறாமல் எவ்வாறு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்கள்?” என பிரதேச செயலாளரிடம் கேள்வி எழுப்பினார்.
”மாகாண சபைக்கு காணி சுவீகரிப்புத் தொடர்பாக தெரியப்படுத்தினீர்களா? படையினருக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு பாதுகாப்பின் நிமித்தம் எனின் மாகாண சபைக்கு தெரியப்படுத்த வேண்டும்” எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
Post a Comment