பிரதி சபாநாயகர் பதவிக்கு சுதர்சினியின் பெயர் சிபார்சு
பிரதி சபாநாயகர் பதவிக்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர் சுதர்சினி பெர்னான்டோ புள்ளே நிறுத்தப்படவுள்ளார் என்று, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
திலங்க சுமதிபால அண்மையில் பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, அந்தப் பதவி வெற்றிடமாகவுள்ளது.
நாடாளுமன்றத்தின் நாளைய அமர்வில், புதிய சபாநாயகர் தெரிவு இடம்பெறும் என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் இராமநாதனை நிறுத்துமாறு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் சார்பில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
அதேவேளை, தம்மை மீண்டும் பிரதி சபாநாயகராக பதவியேற்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டதாக திலங்க சுமதிபால கூறியிருந்தார்.
இந்த நிலையில், சுதர்சினி பெர்னான்டோ புள்ளே பிரதி சபாநாயகர் பதவிக்கு போட்டியில் நிறுத்தப்படவுள்ளார் என்றும் அதற்கு கட்சியின் உயர்மட்டத்தில் ஆதரவு இருப்பதாகவும், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
அதேவேளை, ஐதேக பிரதி சபாநாயகர் பதவிக்கு மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறியின் பெயரை முன்மொழிந்துள்ளது.
கூட்டு அரசாங்கம் அமைக்கப்பட்ட போது, பிரதி சபாநாயகர் பதவி சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
ஆனாலும், அண்மைய நாட்களாக ஐதேக மீது குற்றச்சாட்டுகளை கூறிவரும் சிறிலங்கா அதிபர், நேற்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலும் கூட, ஐதேகவுடன் அரசியல் கூட்டணி அமைத்ததால் தான், உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தோல்வியடைந்தது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், பிரதி சபாநாயகர் பதவிக்கு கூட்டு இரண்டு பிரதான கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தினால், கூட்டு அரசின் நிலை கேள்விக்குள்ளாவதுடன், இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும்.
பிரதி சபாநாயகர் பதவிக்கு சுதர்சினி பெர்னான்டோ புள்ளே தெரிவு செய்யப்பட்டால், நாடாளுமன்ற வரலாற்றில் பிரதி சபாநாயகராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையைப் பெறுவார்.
Post a Comment