Header Ads

test

கிளைமோர் விவகாரம்! மேலும் முன்னாள் போராளிகள் இருவர் கைது!

கிளைமோர் குண்டுகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் உட்பட இருவர்  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பிரதான சந்தேக நபரென தெரிவிக்கப்படும் கிளிநொச்சி - சாந்தபுரத்தைச் சேர்ந்த ஏகாம்பரம்  என்று அடையாளம் காணப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்,  வன்னிவேளாங்குளம் பகுதியில் வைத்து, கடந்த 23ஆம் திகதி இரவு 10 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் வைத்து, கிளிநொச்சி – திருவையாறு, பகுதியைச் சேர்ந்த  வி.கேதீஸ்வரன்  (வயது 24) என்பவர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டார்.

அவர், ஓட்டோ சாரதியின் அயல்வீட்டுக்காரர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிக்கொடி மற்றும் 20 கிலோ கிராம் நிறைகொண்ட கிளைமோர் 1, கைக்குண்டு 1, றிமோட் கொன்ரோல் 4, ரி56 ரவுன்ஸ் 98, விடுதலைப் புலிகளின் சீருடை 2,  புலிக்கொடி 40-45 என்பவற்றுடன், ஓட்டோவில் பயணித்த போது, கடந்த வெள்ளிக்கிழமை (22) இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவர், கிளிநொச்சி திருவையாறு பகுதியை சேர்ந்தவர் எனவும் மற்றையவர், சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அறிய முடிகிறது.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே, பிரதான சந்தேகநபரும் மற்றொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழே இவ்விருவரும் கைது ​செய்யப்பட்டுள்ளனரென காவல்துறையினர் தெரிவித்தனர்.

No comments