Header Ads

test

தமிழர் உயிர் குடிக்கும் நுண்கடனுக்கு வலி மேற்கில் தடை



வலி.மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் நுண்நிதிக் கடன் நிறுவனங்கள் கடன் வழங்குவதை தடுத்து நிறுத்துவது என வலி.மேற்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதுவரை கடன் வழங்கிய நிநி நிறுவனங்கள் கடன்களை பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் மீள அறவிட வேண்டும் எனவும் அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுண்கடன் பெற்ற சுமர் 50 இற்கும் மேற்பட்ட தமிழர்களைத் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த நுண்நிதிக் கடன் வழங்குவதும் ஒரு வகையில் தமிழ் மக்களை அடிமைப்படுத்தும் செயற்பாடாகும் எனவும் மேற்படி தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரதேச சபையின் நான்காவது பொதுக்கூட்டம் நேற்று புதன்கிழமை பிரதேச சபையில் தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ந.பொன்ராசா கொண்டுவந்த மேற்படி பிரேரணை அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.  தீர்மானத்தை முன்வைத்து உரையாற்றிய பொன்ராசா கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் உள்ள மக்கள் நுண்நிதிக் கடன் நிறுவனங்களால் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர். சிலர் உயிரிழந்துள்ளனர். பலர் தற்கொலைக்கு முயன்று  காப்பாற்றப்பட்டுள்ளனர். எனினும், அந்த நிறுவனங்கள் தமது செயற்பாட்டை நிறுத்தியதாக இல்லை. 

யுத்தத்தின் கோரப் பிடிக்குள் சிக்கி தமது உறவுகள், உழைக்கும் பிள்ளைகள், கணவர்களைப் பறிகொடுத்ததுடன், வீடுகள், சொத்துக்களை இழந்து பொருளாதாரத்தில் பின்னடைந்து கையறு நிலையில் நின்ற எமது மக்களை இலக்குவைத்து தமிழர் தாயகப் பகுதியில் நுண்நிதிக் கடன் நிறுவனங்கள் தமது செயற்பாட்டை ஆரம்பித்தன. குறிப்பாக, பெண் தலைமைத்துவக் குடும்பங்களே இவர்களின் முக்கிய இலக்காக இருக்கின்றன.

ஏனெனில், கேள்வி கேட்பதற்கு யாரும் இல்லை, எப்படியும் அவர்களை வஞ்சித்து பணத்தைச் சுரண்ட முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கின்றது. அடுத்த வேளை உணவுக்கு என்ன வழி என்று தெரியாமல் ஏங்கிக்கொண்டிருக்கும் குடும்பங்களின் வீடுகளுக்குச் சென்று உங்களுக்கு பணம்  வேண்டுமா எனக் கேட்டால் யார்தான் மறுப்புச் சொல்வார்கள்?

எப்படிப் பணத்தைச் செலுத்துவோம், அதற்கான வழி என்ன என்பதைக்கூட ஆராய்வதற்கோ  சிந்திப்பதற்கோ அவர்களால் முடியாது. ஏனெனில், தமது பிள்ளைகளின் பசிக்கு முன்னால் அவை எவையும் பெரிதாகத் தெரியாது. உடனே கடனுக்கு விண்ணப்பித்து பணத்தைப் பெறுவார்கள். மேலும், சில பெண்கள் மேற்படி நுண்நிதிக் கடன் நிறுவனங்களிடம் பெற்ற கடன் பணத்தை தமக்கு நெருக்கமானவர்களுக்கு கைமாற்றாகவும் வட்டிக்கும் கொடுத்துவிட்டு இன்று அதனால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

கல்வியறிவில் பின்தங்கிய கிராமப்புறங்களிலேயே இந்தச் செயற்பாடுகள் அதிகமாக உள்ளன. நுண்நிதிக் கடன் நிறுவனங்களும் இந்தக் கிராமங்களை இலக்குவைத்தே தமது காரியங்களை நிறைவேற்றுகின்றன. கடன் பெற்ற பெண்கள் செலுத்த முடியாமல் திண்டாடும் போது நிதி நிறுவனங்களின் ஊழியர்கள் அவர்களை பலர் முன்னிலையில் வாய்க்கு வந்தபடி ஏசுதல், தங்களோடு சுகம் அனுபவிக்க வருமாறு வற்புறுத்தல், வீட்டில் இருக்கும் பொருட்களைப் பறித்துச் செல்லுதல் போன்ற இன்னோரன்ன செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்படி நிதி நிறுவனங்களின் தொல்லைகள் காரணமாக வடக்கு – கிழக்கில் பல பெண்கள் தற்கொலை செய்திருக்கின்றனர். சிலர் குழந்தைகளுடன் குடும்பங்களாகவே தற்கொலை செய்திருக்கின்றனர். இது இவ்வாறிருக்க, தற்போதும் எமது வலி.மேற்கு பிரதேசத்தில் உள்ள பல கிராமங்களில் நுண்நிதிக் கடன் நிறுவனங்களின் பிரதிநிதிகள் வீட்டுக்கு வீடு அலைந்து திரிந்து கடன் கொடுத்து வருகின்றனர்.

தென்னிலங்கையில் இவ்வாறான கடன் வழங்கும் செயற்பாடுகள் இல்லை. அந்த மக்களிடம் இவர்கள் இவ்வாறான கடன் கொடுக்கும் திட்டத்தைச் செயற்படுத்த முடியாது. ஆனால், கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற நிலையில், எமது பிரதேச மக்களை அவர்கள் வாட்டி வதைக்கின்றனர். தென்னிலங்கையில் உள்ள முக்கிய பிரமுகர்களின் சொந்த நிறுவனங்களாக இயங்குகின்ற மேற்படி நுண்நிதிக் கடன் நிறுவனங்கள் திட்டமிட்ட ரீதியிலேயே வடக்கு – கிழக்கு மக்களை இலக்குவைத்திருக்கின்றன. இதுவும் ஒரு வகையில் தமிழ் மக்களை அடிமைப்படுத்தும் செயற்பாடே ஆகும்.

எனவே, இந்த அடிமைப்படுத்தலில் இருந்து எமது மக்களை மீட்டெடுக்கவும், எமது மக்களை வேதனைகளில் இருந்து பாதுகாக்கவும், அவர்களின் எதிர்கால நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு எமது பிரதேசத்தில் நுண்நிதிக் கடன் நிறுவனங்களின் கடன் வழங்கும் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். – எனத் தெரிவித்தார்.

No comments