இந்தியாவிலிருந்து படகில் இலங்கைக்கு வந்த நாய்: இலங்கை அகதிகளின் பாசம்
இந்தியாவில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் ஐந்து பேர் நேற்று சட்டவிரோதமாக கடல் பயணம் மேற்கொண்டு தாயகம் திரும்பினர். காங்கேசன்துறை கடற்பரப்பில் இவர்களை கடற்படையினர் கைது செய்து, காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அண்மைக்காலமாக இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக தாயகம் திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தினுள் மாத்திரம் இவ்வாறு தாயகம் திரும்பிய 24பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 5ஆம் திகதி 9 பேரும், 16ஆம் திகதி 4 பேரும், கடந்த 29ஆம் திகதி மன்னார் கடற்பரப்பில் வைத்து 6 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
காங்கேசன்துறை கடற்பரப்பில் நேற்றைய தினம் ஐந்து அகதிகளும், அவர்கள் பயணித்த படகின் மாலுமிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
தொண்டமனாற்றைச் சேர்ந்த தம்பதியர் அவர்களின் 4 வயதுக் குழந்தை, திருகோணமலையைச் சேர்ந்த பெண், குருநாகல் பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவர் ஆகிய ஐந்து அகதிகளே கைதாகினர்.
இந்தியாவிலிருந்து இவர்களை ஏற்றி வந்த படகு இலங்கை கடல் எல்லையில் பழுதடைந்ததாகவும், அதன் பின்னர் பருதித்துறையைச் சேர்ந்த மாலுமிகளின் உதவியுடன் இலங்கைக் கடற்பரப்புக்குள் வந்தாகவும், பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இந்திய ஏதிலிகள் முகாமில் வளர்த்த செல்லப் பிராணியான நாயைப் பிரிய மனமில்லாமல் அதனையும் கொண்டு வந்தனர். நாயும் காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment