வர்த்தகர்களை பாராட்டிய வடக்கு முதலமைச்சர்!
எமது மக்களின் மேம்பாட்டிற்கு வர்த்தகப் பெருமக்களின் பங்கு அளப்பரியது. நாட்டின் சாதாரண சூழ்நிலையில் வர்த்தகம் செய்வது ஓரளவுக்கு சுலபமானதாக இருக்கக் கூடும். ஆனால் அசாதாரண சூழ்நிலைகளில் அந்தந்தப் பகுதிகளில் வாழுகின்ற மக்களின் அன்றாடத் தேவைகளையும் அவர்களின் அத்தியவசிய உணவுத்தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் வர்த்தகர்களின் பங்களிப்பினை வடக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நெல்லியடியில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகர்கள் கௌரவிப்பில் கருத்து தெரிவித்த அவர் சில காலங்களுக்கு முன்னர் வட பகுதியில் யுத்த மேகங்கள் சூழ்ந்திருந்த காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பிரதேசம் ஏனைய பகுதிகளில் இருந்து முழுமையாக துண்டிக்கப்பட்ட நிலையில் கடல் மார்க்கத்தின் ஊடாக மட்டும் போக்குவரத்து சேவைகள் நடைபெற்றன. அக் காலத்தில் எமது வர்த்தகர்கள் பல சிரமங்களின் மத்தியில் கப்பலின் ஊடாக பொருட்களை கொண்டுவந்து காங்கேசன்துறையில் இறக்கி,பல கெடுபிடிகளுக்கு மத்தியில் பற்பல இராணுவச் சோதனைகளை நிறைவு செய்து, எமது பகுதிகளுக்கு உணவுப் பொருட்களை கொண்டுவந்து மக்களுக்கு வழங்கியமை இத்தருணத்தில் நன்றியுடன் நினைவுகூரற்பாலது.
இவ்வாறு பொருட்களைக் கொண்டுவந்த போது அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களும் பொருள் ந~;டங்களும் எண்ணிலடங்கா! தற்செயலாக ஒரு கப்பல் நீரில் மூழ்கிவிட்டால் அல்லது பொருட்கள் ஏற்றப்பட்ட பின்னர் சென்றடையவேண்டிய இடத்தை சென்றடைவதில் தாமதங்கள் ஏற்படுகின்ற போது பழுதடையக்கூடிய வெங்காயம், உள்ளி, உருளைக்கிழங்கு போன்ற பொருட்கள் அழுகி சேதமடைவதுடன் அவை அவற்றுடன் கூட இருந்த ஏனைய பொருட்களையும் பழுதடையச் செய்துவிடுவன. இதனால் வர்த்தகர்களுக்கு பலவாறான பொருட்சேதங்களும் மன உளைச்சல்களும் ஏற்படும். இவற்றையெல்லாந் தாங்கிக் கொண்டு பொருட்களைக் கொண்டுவந்து விற்பனை செய்யும் போது பொதுமக்களுள் சிலரின் அபிப்பிராயங்கள் அவர்களை மனம் வருத்துவனவாகவே அமைந்தன.
இது ஒரு புறம். மறுபக்கத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் முன்னிலை வகிக்கும் வர்த்தகப் பெருமக்கள் பலர் தமது வர்த்தக நடவடிக்கைகளுக்கு அப்பால் மேற்கொள்கின்ற சமூகப் பணிகள் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இடது கை கொடுப்பதை வலது கை அறியாத விதத்தில் அவர்களின் சமூகப் பணிகளுக்கான கொடுப்பனவுகள் பல்வேறு சமூக தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளின் ஊடாக தொடர்ந்து வழங்கப்பட்டுவந்தன. இவை சம்பந்தமாக வடமராட்சி வணிகர் கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சமூகப் பணிகள் எமக்கு பட்டியல் இட்டு காட்டப்பட்டுள்ளன.
1. 1000 மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கியமை.
2. புற்று நோய் வைத்தியசாலைக்கு நடைபவனி மூலம் சேகரிக்கப்பட்ட ஒரு இலட்சம்ரூபா வழங்கியமை.
3. சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு உதவி வழங்கியமை.
4. வடபகுதி தென் பகுதிகளில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் போது உதவி வழங்கியமை.
5. வணிகர் கழக எல்லைக்குட்பட்ட பகுதியை புகைத்தல் தவிர்ப்பு வலயமாக பிரகடனப்படுத்தி அதில் வெற்றி கண்டமை. போன்ற பல விடயங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இயங்குகின்ற ஒரு பிரபல நிறுவனமொன்றின் உரிமையாளர் தமது அற நிதியத்தில் இருந்து சராசரியாக வருடாந்தம் 6 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட நிதிகளை சமூக மேம்பாட்டிற்காக வழங்கிவருவதாகத் தெரிவித்தார். இந் நிதி மக்களை சரியாக இனங்கண்டு தேவையானவர்களுக்கு மட்டும் பல்வேறு வடிவங்களில் வழங்கப்படுவது அவரால் உறுதிசெய்யப்பட்டது. அது மட்டுமன்றி இந்த வருடம் தங்கள் ஒதுக்கீட்டில் இருந்து நூற்றி அறுபது வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான நிலங்கள் கொள்வனவு செய்யப்பட்டுவிட்டன என்ற தகவலையும் எமது அலுவலருக்கு தெரிவித்திருந்தார். இவ்வாறு சமூகப் பணிகள் மூலம் வாழ்வாதார நிலையில் அடிமட்டத்தில் இருக்கக்கூடியவர்களை சற்று உயர்த்தி விடுவதற்கு இவர்களின் ஒத்துழைப்புக்களும் நிதி வழங்கல்களும் பெரிதும் உதவி வருகின்றதெனவும் முதலமைச்சர் நினைவு கூர்ந்துள்ளார்.
Post a Comment